(Reading time: 17 - 34 minutes)

இங்கு அமிர்தா, தாத்தாவை அழைத்து, தாத்தா பாட்டி இருவரின் கால்களில் விழுந்து வணங்கினாள். அவர்கள் புன்னகையுடன் வாழ்த்தினர்.

பின் தன் சித்தப்பா-சித்தியான ஆதிமூர்த்தி-சங்கரி யிடம் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றாள், “அப்படியே அக்கா மாதிரி இருக்கடா. நல்லா இரும்மா” என்றார் சங்கரி கண்ணீருடன்..

அதன்பின் ஆதிகேசவன்-சிவச்செல்வியிடம் வணங்கி புன்னகைத்தாள். அவள் புன்னகையை கண்ட கேசவன் “அப்படியே அண்ணாவின் புன்னகையம்மா உனக்கு, உன்னை பார்க்கும் போது அண்ணா என்கூடவே இருக்கமாதிரி இருக்கு மா”,எனவும் சித்தப்பா சித்தியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

கடைசியில் வாசுதேவன் அருகில் வரும்போது அவர் அவள் பின் திசையில் பார்த்து புன்னகைத்து கொண்டிருக்கவும் “என்னாயிற்று மாமா” என அவள் கேட்க, அவர் “உன் பின்னால் பாரம்மா” என, என்னவென்று பார்த்தால் அங்கே யமுனா தன்னை பின்பற்றி அனைவரிடமும், “நல்லா படிப்பேனு வாழ்த்துங்க, எனக்கு டெய்லி சாக்லெட் கிடைக்கனும்-னு வாழ்த்துங்க, நல்லா சேட்டை பண்ணனும்னு வாழ்த்துங்க, என் க்ளாஸ்டீச்சர் இனி ஸ்கூலுக்கு வரக்கூடாதுனு வாழ்த்துங்க” என ஒவ்வோருவரிடமும் சொல்லி வாழ்த்தை பெற்று கொண்டிருந்தாள். அவளுக்கு பின் மின்விழியும்,மீன்விழியும் காலில் விழுந்து வணங்கி பணம் கொடுக்க சொல்லி தாத்தா பாட்டியிடம் தொல்லை பண்ணி கொண்டிருந்தனர். இதை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. பின் மாமா-அத்தையிடம் வாழ்த்தை பெற்றாள்.

பின் ஆதினி,சந்திரனைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் ஸ்பெஷல் க்ளாஸ் சென்றிருப்பதை அறிந்தாள். பின் அம்மாவை பார்க்க வேண்டும் என்றபோதுதான் அப்போதுதான் அனைவருக்கும்  நந்தினியின் நிலை ஞாபகம் வந்தது.

தாத்தா தயங்கிக்கொண்டே “அவள் உடம்பு..”

“தெரியும் தாத்தா, மாமா சொன்னார், அடிக்கடி ஹைபீபி, மூச்சரைப்பு ஆகுதுனு, அதோடு சரியாக சாப்பிடுவதில்லை என.. என்னைப் பார்த்ததும் அம்மாவிற்கு குணமாகி விடும் எனும் நம்பிக்கை இருக்கிறது, எங்கே அம்மா? இன்னும் ஹாஸ்பிட்டல தான் இருக்காங்களா?..” என கவலையுடன் கேட்டாள்.

“இல்லைடா, நேற்றே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம்.. ஹாஸ்பிட்டல் சேர்ந்த போது ரொம்ப சீரியஸ் னு பயமுறுத்திட்டாங்க.. ட்ரீட்மெண்ட்-க்கு அப்புறம் கொஞ்சநாள் ஹாஸ்பிட்டல்ல வைச்சிட்டு நல்லா சரியானதுக்கப்புறம் தான் கூட்டிக்கிட்டு வந்தோம்.. நான் வணங்கும் ஈஸ்வரனின் அருளால இப்பொழுது நந்தினி பரவாயில்லை..வாம்மா போகலாம்” என தாத்தா கூற, பின் அனைவரும் நந்தினி ரூமிற்கு அழைத்து சென்றனர்..

அறையில் நகநந்தினிதேவி தீவர யோசனையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தார், “சங்கரஐயா சொன்னது உண்மையானால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என மனதினுள் புலம்பினார்.. அறைவாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்த நந்தினி, தானே நிற்பது போல உணர்ந்தார்.. பின் பிரமை என ஒதுக்கினார். ஆனால், அமிர்தா அருகே வந்து அம்மா! என அழைக்கவும், இதயமே நின்றதுபோல் இருந்தது.

“அம்மா நான் உன் பொண்ணுமா, என்னை பாரும்மா..” என அமிர்தா தன் அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள்..

நந்தினியால் நம்பமுடியவில்லை, தன் மகளை இறுக அணைத்து கொண்டாள். பின் அனைவரும் உள்ளே நுழைந்தனர். நந்தினி தன் அத்தையை பார்த்து,

“அத்தை என் மகள் வந்துவிட்டாள், என் மகள்.. என் மகள்.. என் மகள் உயிரோடு இருக்கிறாள்” என கதறினாள், பின் மகள் முகமெங்கும் முத்தமிட்டாள்..

“நீ ரொம்ப எமொஷனல் ஆகாத,உனக்கு பீபி எகறிடும், இனி என் பேத்தி உன்கூடதான் இருப்பா, நீ கவலைப்படாம மகிழ்ச்சியுடன் இருக்கணும். சீக்கிரம் உடம்ப குணப்படுத்து, அப்போ தான் உன் மகள பாத்துக்க முடியும்,பாரு என் பேத்தி எவ்வளவு ஒல்லிக்குச்சியா இருக்கா..” எனவும் பேத்தி சண்டைக்கு வந்தாள்..

ஆனால் அதற்குள் இடைநிறுத்திய பாட்டி சங்கரியை கூப்பிட்டு நம் சமையல்கார “கண்ணம்மாவிடம் சொல்லி விருந்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லும்மா, பேத்தி டயர்டா இருக்கா ரொம்ப நேரம் டிராவல் பண்ணி வந்துருக்காங்க, சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்..” என்றார்.

சங்கரியும் சமையற்கட்டை நோக்கி சென்றார்..

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர், நந்தினி யமுனாவை பார்த்து தன் மகளை கேள்வியாய் நோக்கினார்,

“யமுனா என் மகள் அம்மா, இப்போது சாப்பிடலாம்,பிறகு பேசிக்கொள்ளலாம்.”

நந்தினியோ சரி என்றார் யோசனையுடன்..

நந்தினிக்கு எங்கிருந்து சக்தி வந்ததோ தன் மகளை பார்த்தவுடன், உடலின் பழைய தெம்பு திரும்ப வந்துவிட்டதுபோல் உணர்ந்தார்.. தன் அருகில் அமர்த்திக் கொண்டார். பானு அத்தையோ, “இன்று நான்தான் என் மருமகளுக்கு பரிமாறுவேன் எனவும், இதெல்லாம் நியாயமா?  நாங்களும் உங்க மருமகள்கள்தான,எங்களுக்கு  என்றாவது இப்படி கவனிச்சிருப்பியா பானு?..” என கோரஸாக மின்விழி,மீன்விழி கூறவும் பாட்டி அவர்களின் காதை திருகி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.