(Reading time: 20 - 39 minutes)

28. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ன்று இரவு தன் அறையில் இருந்த நர்மதாவின் நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது செல்வா தான்.. இன்னும் கூட கல்லூரி காலத்தில் அவன் பேசிய வார்த்தைகளின் தாக்கம் மனதில் ஆழமாய் பதிந்திருந்தாலும், அவன் பேசியது தவறு என்று புரிந்திருந்தாலும், அவன் மேல் இருந்த கோபம் இன்று நீங்கியிருந்தது..

நேற்று அவனுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய பொழுதே, அவளின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, இன்று அவனைப் பற்றி தெரிந்துக் கொண்டதன் காரணம் தான் அவளின் கோபம் குறைந்திருந்தது..

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் எவ்வளவு இக்கட்டுகளை சந்தித்திருக்கிறான்.. குருவி தலையில் பனங்காயை வைத்தது போல், தன் சகோதரன் உடல்நலம் சரியில்லாமல் போன அந்த நேரத்தில் கம்பெனி பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறான்.. சிறிதுகாலம் கல்லூரிக்கு வராமல் இருந்தானே அப்போது தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும்..

தன் குடும்ப சூழ்நிலை அப்படி இருந்த சமயத்தில் அவனால் கண்டிப்பாக காதலைப் பற்றி சிந்தித்து இருக்கவே முடியாது.. இதில் சாருவால் ஏற்பட்ட ஏமாற்றம்.. தன் சகோதரனின் நிலை இவற்றால் அவனுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும், அது தெரியாமல் அந்த நேரத்தில் அவனிடம் காதலைச் சொன்னது இவள் தவறு தானே.. அதற்கு அவன் காதலிக்கவில்லை என்று சாதாரணமாக மறுத்திருக்கலாம் தான்.. அப்படி பேசியிருக்க வேண்டாம் தான்..

ஒரு சின்ன வேலை செய்யும்போது அம்மா ஏதாவது சொன்னாலே தாம்தூம் என்று குதிப்பதும், வேலை சமயத்தில் தொந்தரவாகிவிட கூடாது என்று கத்துவதும், கோபித்து கொள்வதும் இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கே இவள் எப்படி நடந்துக் கொள்வாள்? அப்படி இருக்க அவன் அந்த நேரம் பேசியது இப்போது அவளுக்கு தவறாக தோன்றவில்லை.. அவன் பக்கம் உள்ள நியாயத்தை அவள் தேடிக் கொண்டிருந்தாள்.. அந்த நேரம் அவளின் நாயகனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.. அந்த அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் வைத்தாள்..

“சொல்லுங்க ரிஷப்..”

“மது.. இப்போ அத்தை எப்படி இருக்காங்க..?? அம்மா போன் பண்ணதும் கிளம்பனும்னு நினைச்சேன்.. ஆனா உனக்கே தெரியுமில்ல, நான் வந்தது ஒரு முக்கியமான வேலை.. கொஞ்சம் பிரச்சனையும் கூட, அதான் அங்க இங்க நகர முடியல.. டாக்டர் போன் பண்ணி பேசவும் தான் நிம்மதியாச்சு.. இருந்தும் ஒரு பக்கம் அத்தை எப்படி இருக்காங்கன்னு கவலையும் இருந்துச்சு.. நீ கூட இருப்பன்னு தெரியும்.. இருந்தாலும் அப்படி தோனுச்சு..”

“நீங்க பயப்பட வேண்டியதில்லை ரிஷப்.. காலைக்கு இப்போ ரொம்ப நல்லா இருக்காங்க.. துஷ்யந்த் மாமா கல்யாணம் நின்னதுல கொஞ்சம் டிஸ்டர்பா இருந்தாங்க.. அது தான் அவங்க பிரச்சனைக்கு காரணம்.. அத்தை கூட கொஞ்சம் மனசுவிட்டு பேசிட்டாங்க.. இனி எந்த பிரச்சனையுமில்ல.. இப்போ தான் சாப்பாடு கொடுத்தேன்.. கொஞ்சம் நேரம் கழிச்சு மாத்திரை கொடுக்கனும்.. அத்தையும் சாப்பிட்டாங்க.. அதனால அவங்களை பத்தி உங்களுக்கு கவலை வேண்டாம்.. “

“ம்ம் இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு மது..”

“ஆமாம் இப்போ எங்க இருந்து பேசறீங்க..? வீட்டுக்கு வர லேட்டாகுமா? காலையில சீக்கிரம் கிளம்பி போனிங்க.. காலையும் மதியமும் ஏதாச்சும் சாப்பிட்டீங்களா?”

“சாப்ட்டேன் மது.. இப்போ வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்..”

“ட்ரைவ் பண்றீங்களா? சரி சரி ட்ரைவ் பண்ணும் போது பேச வேண்டாம்.. வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்.. நான் வச்சிட்றேன்..” என்று அழைப்பை துண்டித்தாள்.

னைவியிடம் பேசியதும் செல்வாவிற்கு அலுவலக டென்ஷன் எல்லாம் தீர்ந்தது போல் இருந்தது.. இத்தனை நாட்களில் நர்மதா இப்படி அக்கறையாக பேசியதில்லை.. இதே போல் தாமதமாக வரும் நேரங்களில் அவளுக்கு போன் செய்து விஷயத்தை கூறியிருக்கிறான்.. இருந்தும் வெறும் விஷயத்தை மட்டும் கேட்டுக் கொண்டு சரி என்று அழைப்பை துண்டித்து விடுவாள். இவன் மேல் அவளுக்கு இருக்கும் கோபத்தை அறிந்தவன் தானே..!! அந்த கோபம் மறையும் வரை பொறுமையாக காத்திருக்க நினைத்தான்.

நேற்றிலிருந்து இவர்கள் வாழ்க்கையில் மாற்றம் வர ஆரம்பித்திருகிறது.. சீக்கிரமாகவே நர்மதா மேல் தனக்கு இருந்த காதலை சொல்லிவிட வேண்டும் என்று மனதில் நினைத்தப்படியே, உதட்டில் புன்னகையோடு அவளின் நினைவுகளோடு காரை செலுத்தியவன், காரில் பாடலை ஒலிப்பரப்ப, அதுவும் அவன் மனதுக்கு இதம் சேர்த்தது.

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்..

உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்..

உன் முகம் தாண்டி.. மனம் சென்று..

உனை பார்த்ததால்..

உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்..

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்..

உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.