(Reading time: 20 - 39 minutes)

ங்களை நான் காதலிக்கவே இல்லைன்னு சொல்றேன்.. அப்புறம் எனக்கு அதை சொல்றதுல என்னப் பிரச்சனை இருக்கப் போகுது?? உங்களுக்கு இன்னும் புரியலைன்னா, ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க.. நான் இப்போ எங்க போய்ட்டு வரேன் தெரியுமா?”

“எங்க??”

“கோவிலுக்கு.. எதுக்கு தெரியுமா? இன்னிக்கு நான் கேதார கௌரி விரதம் இருக்கேன்.. யாருக்காக தெரியுமா? இதோ என்னோட கழுத்துல இந்த தாலியை கட்டினவர் நல்லா இருக்கனும்னு தான்.. இதுலயே என்னோட மனசு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்..” என்று தாலியை எடுத்துக் காட்டினாள்.

“இல்லை நீ பொய் சொல்ற.. என்னை ஹர்ட் பண்ணனும்னு இப்படி பேசற..”

“நான் உண்மையை தான் சொல்றேன்.. நான் பொய் சொல்றதா நினைச்சா, உங்க வாணி அக்காக்கிட்ட கேளுங்க.. இன்னும் என்னோட வாய்ல பச்சை தண்ணிக் கூட படல.. உண்மையா? இல்லை இல்லையான்னு கேளுங்க..” என்றதும் அவன் வாணியை திரும்பிப் பார்த்தான்.

என்னவென்று துஷ்யந்திடம் சொல்வது என்று தெரியாமல் அவர் அமைதியாக நின்றார். அவர் அமைதியே, கங்கா சொல்வது உண்மை தான் என்று புரிந்திருந்தாலும், அதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், அவன் முன் கைகாட்டி அவனை நிறுத்தியவள்,

“இதுக்கும் மேல என்னோட மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு விளக்கனும்னு அவசியமில்லை.. இந்த வாழ்க்கையே எனக்கு நிறைவா தான் இருக்கு.. இந்த சென்னைக்கு நான் வரும்போது என்னை சொன்னீங்க? இப்போ உங்க மனசுல என்ன இருக்குன்னு காட்டிடீங்கல்ல, இதுக்கும் மேல நாம சந்திக்கிறது நல்லது இல்ல.. இனி என்னை பார்க்க நீங்க வர வேண்டாம்.. போய்டுங்க..”

“கங்கா..”

“உங்களை போக சொன்னேன்..” என்றவள், வாசலை பார்த்து கை நீட்ட, சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன், பின் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஏற்கனவே விரதம் இருந்ததால் சோர்ந்து இருந்தவள், அவனிடம் அப்படி பேசியதில் இன்னும் மனதளவில் சோர்ந்து போய், அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“என்ன கங்கா இது உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா.. என்ன பேசறோம்னு புரிஞ்சு தான் பேசினியா? நீயே உன்னோட வார்த்தைகளால உன் வாழ்க்கையை அழிச்சுக்கிறியே!!

சரி முன்ன நடந்ததெல்லாம் விடு, இவ்வளவு நாள் துஷ்யந்த் தம்பி அமைதியா இருந்துச்சு… ஆனா இன்னிக்கு தைரியமா அது மனசுல என்ன இருக்குன்னு சொல்லிருக்கு..

நான் கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னதை தான் இப்பவும் சொல்றேன்.. உன்னோட கழுத்துல இருக்க தாலிக்கு நீ எப்படியோ அர்த்தத்தை தேடிக்க போறதில்லை.. அதனால அதை அப்படியே ஒதுக்கிட்டு, இப்போ ஒரு புது வாழ்க்கையை தேர்ந்தெடு.. துஷ்யந்த் தம்பி சொன்ன மாதிரி நீ தம்பிய கல்யாணம் செஞ்சுக்கோ..”

“வாணிம்மா… நீங்களும் ஏன் புரிஞ்சுக்காம பேசறீங்க.. முன்ன நடந்ததை நடக்காத மாதிரி நினைச்சுக்கிட்டு என்னால எப்படி புது வாழ்க்கையை வாழ முடியும்? மத்தவங்க பார்வையை பொறுத்த வரைக்கும் நான் தப்பானவ.. இப்போ துஷ்யந்தை நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அது அப்படியே மறைஞ்சு போய்டுமா என்ன? துஷ்யந்த்க்கு இப்போ என் மேல காதல், என்னை கல்யாணம் செஞ்சுக்கனும்ங்கிற எண்ணம் இருக்கு.. அதனால என்னோட கடந்தகாலம் அவருக்கு பெருசா தெரியாம இருக்கலாம்… ஆனா கடைசிவரைக்கும் அவர் அப்படியே இருப்பாரா? சரி துஷ்யந்த் நல்லவராகவே இருக்கலாம்.. ஆனா அவரோட குடும்பத்துல இருக்கவங்க என்னை முழு மனசா ஏத்துக்குவாங்களா? என்னைப்பத்தின தப்பான அபிப்ராயம் அவங்க மனசுல ஏற்கனவே வந்தாச்சு.. என்னத்தான் துஷ்யந்துக்காக அவங்க என்னை ஏத்துக்கிட்டாலும், அவங்க மனசார என்னை அவங்க மருமகளா ஏத்துக்கவே மாட்டாங்க…

மத்தவங்க எப்படி போனா என்ன? எனக்கு என்னோட வாழ்க்கை மட்டும் போதும்னு என்னால நினைக்க முடியாது.. அப்படி நினைச்சிருந்தா, இத்தனை வருஷம் நான் இப்படியிருக்க வேண்டியதில்ல.. என் வாழ்க்கை இப்படி தான் இருக்கனும்னு அந்த கடவுள் நினைச்சிட்டாரு.. அதை அப்படியே விட்டுவிடுவோம்… எதையும் மாத்த நீங்க முயற்சி செய்யாதீங்க.. தயவுசெஞ்சு உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்..” என்று வாணியிடம் கையெடுத்து கெஞ்சிக் கேட்டாள்.

“நீ கண்ணை திறந்துக்கிட்டே வலிய போய் கிணத்துல விழனும்னு முடிவு செஞ்சுட்டா.. அப்புறம் யார் வந்து என்ன செய்ய முடியும்? என்னவோ செய்..” என்று கோபத்தோடு கூறிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.