(Reading time: 20 - 39 minutes)

ங்கா யாருக்காக விரதம் இருந்தாளோ.. அவள் விரதத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அவனையே நேரில் பார்ப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.. அவள் வீட்டிற்குள் நுழையும்போது துஷ்யந்த் தான் அவளை வரவேற்றான்..

“நீங்களா? குன்னூர்ல இருந்து எப்போ வந்தீங்க? நேத்து பேசினப்ப கூட கொஞ்ச நாளில் வந்துடுவேன்னு சொன்னீங்க.. இப்போ திடிர்னு வந்து நிக்கறீங்க.. என்னால நம்பவே முடியல..” என்று கண்களில் வியப்பை காட்டியபடி உற்சாகத்தோடு பேசினாள்.

“உன்கிட்ட பேசறதுக்கு முன்னாடி வரை,  இன்னும் கொஞ்ச நாள் அங்க இருக்கனும்னு தான் நினைச்சேன்.. ஆனா உன்கிட்ட பேசனதுக்கு அப்புறம் உன்னை பார்க்காம என்னால அங்க இருக்க முடியல.” அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து அவன் சொன்னபோது, கங்காவால் அவன் கண்களை சந்திக்க முடியாமல் கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

“தம்பி… குன்னூர்ல இருந்து நேரா இங்க வந்துட்டீங்க.. சாப்பிட்டு தான் வீட்டுக்கு போகனும், சாப்பாடெல்லாம் தயாரா இருக்கு..” என்று சமயலறையில் இருந்து வாணி வெளியே வந்தார்.

“இல்ல வாணிக்கா எனக்கு பசிக்கல, நான் வீட்டுக்கு போய் சாப்டுக்கிறேன்.. நான் கங்காக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. அதுக்கு தான் நேரா இங்க வந்தேன்” என்றவன்,

“நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா கங்கா?” என்று நேரடியாக அவளை பார்த்து கேட்டான்.. வாணிக்கு அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.. கங்காவோ,

அவன் முதலில் பேசியதற்கே, “என்ன இப்படியெல்லாம் பேசுகிறான்..” என்று மனதில் நினைத்தவள், அவனது அதிரடியான இந்த கேள்வியில் அதிர்ந்தாள்..

“எ..என்ன உள..உளர்றீங்க..” என்று வார்த்தைகளை தேடி அவனை பார்த்துக் கேட்டாள்.

“நாம கல்யாணம் செஞ்சுக்கலாமான்னு கேட்டேன்.. நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் கங்கா.. அது உனக்கே தெரியும்!! இருந்தும் தெரியாத மாதிரி இருந்த… நானும் சில காரணத்தால உன்கிட்ட என்னோட காதலை சொல்லாம இருந்தேன்.. ஆனா இனியும் அப்படி இருக்கப் போறதில்ல.. சொல்லு நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?”

“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? ஏற்கனவே கல்யாணம் ஆன என்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசறீங்க.. உங்க மனசுல ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு.. முதலில் அந்த எண்ணத்தை மனசை விட்டு தூரப் போடுங்க..”

“இந்த எண்ணம் வர்றதுல என்ன தப்பு.. உனக்கு நடந்தது கல்யாணமே இல்லை கங்கா.. அது உன்னை ஏமாத்த நடத்திய நாடகம்.. அந்த நாடகத்தை நடத்தினவன் இப்போ வேற ஒரு வாழ்க்கையை தேடிக்கிட்டு சந்தோஷமா இருப்பான். ஆனா நீ அதை மறந்துட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்காம, நீ உன்னோட எதிர்காலத்தை நாசமாக்கிக்குற..”

“என்னோட வாழ்க்கை நல்லா இருக்கா.. இல்ல நாசமா போச்சான்னு நான் சொல்லனும்.. என்னைப் பொறுத்தவரை நடந்த கல்யாணம் உண்மை தான்.. எனக்கு அந்த ஒரு வாழ்க்கையே போதும்.. அதுல எனக்கு ஏமாற்றம் கிடைச்சாலும், நான் நல்லா தான் இருக்கேன்.. என்னோட எதிர்காலம் இப்படியே இருந்தாலே போதும்.. அதை நினைச்சு நீங்க கவலைப்பட வேண்டாம்..”

“இப்போ நீ பேசறது எல்லாம் உன் வாய்ல இருந்து வர வார்த்தை தான் கங்கா.. ஆனா உன்னோட மனசு என்ன நினைக்குதுன்னு எனக்கு தெரியும்!!”

“என் மனசு என்ன நினைக்குது?? என்ன தெரியும் உங்களுக்கு?”

“உன்னோட மனசு முழுக்க நான் தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் கங்கா.. அதை நீ வெளிப்படுத்திக்க விரும்பல..”

“திரும்ப திரும்ப உளறளா பேசாதீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..”

“அப்போ அன்னைக்கு நைட், உனக்கு காய்ச்சல் வந்ததுக்கு காரணம் என்ன? மறுநாள் எனக்கு நடக்கப் போற கல்யாணத்தை நினைச்சு தானே..?? அந்த காய்ச்சலோட தீவிரத்துல அன்னைக்கு என்னோட பேரை முனகினியே அது எதுக்கு?? என்னோட கைப்பட்டதும் உன்னோட முனகல் நின்னுடுச்சே அது ஏன்? இதுக்கெல்லாம் நீ என்ன சொல்லப் போற கங்கா??” என்றதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அப்படியானால் அன்று இரவு துஷ்யந்த் வந்ததாக தான் நினைத்தது கனவல்ல, உண்மைதான்.. என்பதை உணர்ந்தவள், அன்று துஷ்யந்த் வீட்டுக்கு வந்ததைப் பற்றி வாணி சொல்லதாததை மனதில் கொண்டு, அவரை முறைத்துப் பார்த்தாள்.

“நேத்து நான் போன் பண்ணப்போ உற்சாகமா பேசினியே, அதுவே நீ என்னை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கன்னு தெளிவா காட்டுது.. அதுமட்டுமில்ல இப்போ என்னை நேர்ல பார்த்ததும் உன்னோட கண்களில் தெரிந்த ஆச்சர்யமே, உன்னோட மனசை சொல்லாம சொல்லுது கங்கா..”

“இதெல்லாம் உங்க கற்பனை.. அன்னைக்கு உங்க கல்யாணம் நல்லப்படியா நடக்கனும்னு மட்டும் தான் என்னோட மனசு நினைச்சுது.. அன்னைக்கு எனக்கு ஜலதோஷம் இருந்தது.. அதனால காய்ச்சல் வந்துச்சு.. அன்னைக்கு உங்க பேரை முனகினது, ஒருவேளை உங்களோட கல்யாணம் நல்லப்படியா நடக்கனும்னு நினைச்சுக்கிட்டே படுத்ததால இருக்கலாம்..

உங்கக்கிட்ட நான் நேத்து பேசினதுக்கு காரணம், உங்க மேல எனக்கு இருக்க அக்கறையால தான்… அதுக்கு நீங்க காதல்னு பேர் சூட்ட வேண்டாம்… இன்னைக்கு உங்களோட வரவு எதிர்பாரதது, அதான் அந்த ஆச்சர்யம்.. போதுமா இந்த விளக்கம்.. தேவையில்லாததையெல்லாம் கற்பனை செஞ்சுக்காதீங்க..”

“இப்படியெல்லாம் காரணங்களை சொல்லி என்னை ஏமாத்தறதா நினைச்சு, நீ உன்னையே ஏமாத்திக்கிற கங்கா.. நீ உன்னோட மனசை மறைக்கறதால என்ன ஆகப் போகுது.. நீ இந்த ஊர் உலகத்தை நினைச்சு பயப்பட்றியா? அவங்க காலம் முழுக்க நம்மக் கூட வரப்போறதில்ல… நாம எது செஞ்சாலும் அதை குறையா தான் பார்ப்பாங்க..”

“நான் யாருக்காக பயப்படனும்?? அப்படி பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை.. இந்த ஊர் உலகத்துக்கு நான் பயந்திருந்தா.. நான் இன்னும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.. எப்பவோ என்னை இந்த ஊர் உலகத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு இருந்திருப்பேன்.. இப்படி எல்லோரோட கேள்விப் பார்வைக்கு ஆளாகியிருக்க மாட்டேன்.. என்னோட மனசாட்சிக்கு எது சரின்னு படுதோ அப்படி தான் நான் இருக்கேன்..”

“அப்புறம் என்னோட காதலை ஏத்துக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை கங்கா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.