(Reading time: 20 - 39 minutes)

ரவு தூக்கம் வராமல் கங்கா புரண்டு புரண்டு படுத்திருந்தாள்.. அவள் மனம் நிலையில்லாமல் தவித்தது.. ஒவ்வொரு முறையும் துஷ்யந்தை கஷ்டப்படுத்திவிட்டு எப்படி அவள் இங்கு தவித்துக் கொண்டிருப்பாளோ? அப்படி தான் இப்போதும் தவிப்போடு இருந்தாள். ஒவ்வொரு முறையும் அவனை இவள் வருத்தி அனுப்பும் போதெல்லாம் அவனுக்கு ஏற்பட்ட நிலை என்னவென்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. இருந்தும் கடவுள் திரும்ப திரும்ப அதே அவஸ்தையை இவர்கள் இருவருக்கும் தருவதும் ஏனோ? ஒன்று அவன் மனதை மாற்ற வேண்டும்.. இல்லை அவளின் மன உறுதியை உடைக்க வேண்டும்.. இப்படி இரண்டையும் செய்யாமல், இவர்களை கடவுள் இப்படி சோதிப்பது எதனால்? அதற்கான விடை தான் அவளுக்கு தெரியவில்லை.

இன்று தான் துஷ்யந்த் அவனுடைய மனதில் உள்ளதை முழுமையாக இவளிடம் சொல்லியிருப்பதாக அவன் நினைத்திருக்கிறான்.. ஆனால் முன்பே ஒரு முறை அவனுடைய காதலை இவளிடம் சொல்லியிருக்கிறான்.. ஆனால் அந்த நேரம் அவன் சுய நினைவில் இல்லை..

இதே போல் தான் ஒருநாள் அவனை எவ்வளவு காயப்படுத்த வேண்டுமோ.. அவ்வளவு பேசி அவனை காயப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பினாள். ஆனால் அவனோ போன சில மணி நேரங்களிலேயே திரும்ப வந்தான்… ஆனால் வந்தவன் கணமண் தெரியாமல் குடித்துவிட்டு வந்திருந்தான்.. அவனின் அப்போதைய நிலைக்கு தான் தான் காரணம் என்று தெரிந்திருந்தாலும், அதற்காக வருத்தப்படுவதைவிட அவளுக்கு கோபம் தான் மேலோங்கி இருந்தது..

ஆனால் வாணியோ பதறிப் போனார்.. “அய்யோ என்ன தம்பி.. இப்படி குடிச்சிட்டு வந்திருக்கீங்க.. எத்தனை நாள் உங்களுக்கு இந்த பழக்கம்? ஏற்கனவே நீங்க பட்ட அவஸ்தையெல்லாம் போதாதா? என்று புலம்பி தள்ளினார்.

“என்னால முடியல வாணிக்கா.. கங்காவோட புறக்கணிப்பை என்னால தாங்கிக்க முடியல.. என் மனசு அவளுக்கு புரியவே இல்லையா? நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? அதை அவளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல.. என்னை எப்பவும் தப்பா தான் புரிஞ்சிக்கிறா.. என் மனசுல இருக்கறதை அவக்கிட்ட சொல்லனும்.. அதான் எனக்கு வேற வழி தெரியல..” என்றவன், அங்கே அவனை கோபப்பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளின் அருகே செல்ல நினைத்தான்.. ஆனால் அதிக போதையின் தாக்கத்தால் அவன் கீழே விழப் போக, வாணி அவனை தாங்கிப் பிடித்து,

“தம்பி… நீங்க முதலில் படுங்க… எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்..” என்று அந்த வரவேற்பறையிலேயே ஒரு பாயை போட்டு அவனை வாணி படுக்க வைக்க, ஏதேதோ உளறியப்படியே அவன் உறங்கிப் போனான். அதுவும் அப்போது அவர்கள் இருந்தது வாடகை வீடு..

கங்காவோ மனதில் தோன்றிய கோபத்தையும் வருத்தத்தையும் வெளிக்காட்ட இயலாமல் அமைதியாக அறைக்குள் அடைந்துக் கொண்டாள். வாணிக்கும் கங்காவுக்கும் அந்த இரவு தூங்கா இரவாக அமைந்தது.

மறுநாள் துஷ்யந்த் காலை நேரம் கடந்து தான் கண் விழித்தான். கங்காவிற்கும் வாணிக்கும்  அவர்களின் அன்றாட பணிகள் தடைப்பட்டு, கங்கா இன்னும் அறைக்குள்ளேயே அடைந்துக் கிடந்தாள்.

கண்விழித்த சில  நிமிடங்கள், தான் எங்கு இருக்கிறோம் என்பது துஷ்யந்திற்கு புரியவில்லை..  ஆனால் புரிந்த நொடி அவன் பதறி எழுந்தான்.. இந்த வீட்டிற்கு அவன் வரும்போதெல்லாம் அரைமணி நேரம் கூட தொடர்ந்து அவன் இங்கு இருந்ததில்லை.. அவன் இங்கு வருவதற்கு கூட, சில காரணங்களை தேடிக் கொண்டு தான் வருவான்.. ஆனால் இன்று இரவு நேரம் தங்கி கங்காவிற்கு மேலும் கெட்ட பெயரை தேடித் தந்ததை நினைத்து அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அவன் எழுந்தது தெரிந்தும் வாணி அவனுக்கு தேனீர் எடுத்து வந்து கொடுத்தார். வாணியின் முகத்தை பார்க்கக் கூட அவனுக்கு சங்கடமாக இருந்தது. அவனின் நிலையை அறிந்து அவர் ஏதோ சொல்ல வருவதற்குள், அறையிலிருந்து வெளியே வந்த கங்கா..

“என்ன வாணிம்மா.. உபசரனையெல்லாம் அமோகமா நடக்குது போல, முதலில் டீ கொடுத்தாச்சு.. அடுத்து ஃப்ரஷா ஒரு குளியல் போட்டுட்டு அப்புறம் சுட சுட டிஃபன் கொடுங்க.. அப்புறம் மதிய சாப்பாடும் தயார் செய்ங்க.. இன்னைக்கு நைட் பார்க்கு எல்லாம் போக வேண்டாம்.. வாங்கிட்டு வந்து இங்கேயே குடிக்கட்டும், இத்தனை நாள் இந்த வீட்ல இப்படியெல்லாம் தான் நடக்குதுன்னு ஆளாளுக்கு கதை கட்டினாங்க.. இன்னைக்கு அது உண்மையாகவே நடக்கட்டும்..” என்றதும், அவன் “கங்கா” என்றி பதறினான்.

“மனசு கஷ்டப்படும் போதெல்லாம் அதை போதை கொண்டு சரி செஞ்சுக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க.. ஏற்கனவே போதை மருந்து பழக்கத்துல இருந்து உங்களை சரிப்படுத்தி, இப்போ மது பழக்கத்துக்கு ஆளாக்கிட்டேங்கிற கெட்ட பெயர் எனக்கு வேண்டாம்.. அதுக்கு இந்த கெட்டப் பெயரை வேணும்னா நான் விரும்பி ஏத்துக்கிறேன்..” என்று அவள் சொன்னதும், ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் அவன் உடனே வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்து அந்த பழக்கத்தை அவன் நினைத்து கூட பார்த்ததில்லை… ஏதாவது பார்ட்டி என்றால் கூட அவன் அதை கையால் கூட தொடுவதில்லை.. அதை அவளும் அறிந்திருந்தால் தான்.. இருந்தும் அதே போல் இன்னொரு நாள் அவளின் புறக்கணிப்பால் அவனுக்கு நேர்ந்ததை திரும்ப நினைத்து பார்க்க கூட அவள் விரும்பவில்லை..

இப்போது தேவையில்லாமல் அதெல்லாம் ஞாபகத்தில் வந்து போனது… அவன் ஒழுங்காக வீடு போய் சேர்ந்தானா? என்பதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.. வாணியிடம் இதைப்பற்றி சொல்லி, துஷ்யந்திடம் அவரை பேச சொல்லலாம் என்று நினைத்தால், அவரோ துஷ்யந்த் இங்கிருந்து சென்றதிலிருந்து இவள் மீது கோபமாக இருந்தார். அந்த நேரத்தில் துஷ்யந்தை பற்றி பேசினால், மேலும் அதைப்பற்றி இன்னும் ஏதாவது பேசுவார்.. அதனால அந்த முயற்சியை கைவிட்டாள்.. இப்போதோ அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் என்ன செய்வது என்பது புரியாமல் அலைபேசியை கையில் வைத்தப்படி, அவனிடம் இவளே பேசலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.