(Reading time: 14 - 27 minutes)

இத்தனை நாள் அவள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் இன்று முடிவுக்கு வந்திருந்தது.

மாடிப்படிகளில் அங்கிருந்த இரண்டு அறைகளில் எது வர்ஷினியின் அறை என்று கண்டுபிடிக்க எந்த முயற்சியும் அவன் செய்ய தேவையே இல்லாமல் கதவில் நயகரா நீர்வீழ்ச்சி படம் ஒட்டியிருந்தது.

கதவை லேசாக தட்டிவிட்டு சிறிது நேரம் காத்திருந்தவன் பதில் ஏதும் வராமல் போகவே மெல்ல குமிழை திருக கதவு திறந்து கொண்டது.

உள்ளே குப்புற கவிழ்ந்து படுத்திருந்தவள் வந்திருப்பது வருண் என்று நினைத்து படபடவென கொட்டிவிட ராமிற்கு காதில் தேன் பாய்ந்தது.

“நிஜமாகவே ஓர் முட்டாள் பெண்ணை தான் காதலிக்கிறேன் நான்” உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் கைகளை கட்டியபடியே சுவரோரம் சாய்ந்து நின்றான்.

திரும்பிப் பார்த்த வர்ஷினி ஓர் கணம் இது கனவோ என்றே நினைத்தாள்.

எப்போதும் அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் அவனே நேரில் நிற்பது போல தெரிகிறது என்று மூளை யோசித்துக் கொண்டிருக்க இதயமோ தன்னவனைக் கண்டு ஆனந்த கூத்தாடியது.

அவளையே வைத்த கண் அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ் ராம்.

அந்த விழிகளில் வெறுப்பு இல்லை, கோபம் இல்லை, கேள்வி கூட இல்லை. ஓர் எல்லையில்லா நிம்மதியும் எல்லைகள் கடந்த காதலும் தான் நிறைந்திருந்தன.

அதற்கு மேல் வர்ஷினியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ராம்” ஒரே பாய்ச்சலில் தாவிச் சென்று அவனது மார்பில் சரண் புகுந்தாள்.

ஒரு முறை பிரிந்திருந்ததே ஏழு பிறவிக்கும் போதும் என அவளை தன் கைச்சிறைக்குள் அடைத்துக் கொண்டான்.

“எனக்கு செத்து போக வேண்டாம் ராம். நான் உங்ககூட நூறு வருஷம் ஆயிரம் வருஷம் வாழணும்” அவள் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு சொல்ல துடித்துப் போய்விட்டான்.

“பைத்தியம். உனக்கு ஒன்னும் இல்லை. இதுக்காகவா அவ்வளவு பெரிய டிராமா டையலாக் எல்லாம் எழுதி வச்சுட்டு என்னை பிரிஞ்சு வந்து இங்க அழுதிட்டு இருந்த” செல்லமாய் கடிந்து கொண்டான்.

அவள் தலையை வருடி தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.

மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான். இமைகளின் ஈரத்தை அவன் இதழ்களின் ஈரம் கொண்டு துடைத்து விட்டான்.

“அர்ஷுமா”

அவன் அழைக்க அவள் இமைகளை மெல்ல திறந்தாள்.

அங்கே காதல் கசிந்துருகி வழிந்து கொண்டிருந்தது.

“ராம்” கீதமாய் இசைத்த அவள் இதழ்கள் மீது அவனது பார்வை பதிந்தது.

சட்டென சுதாரித்தவன் அவளது நெற்றியில் மீண்டும் முத்தமிட்டான்.

“உன் அண்ணா என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு அவர் தங்கச்சியை பத்திரமா விழாவிற்கு கூட்டி வர சொல்லியிருக்கார். சீக்கிரமா கிளம்பி வா” என அவளை மெல்ல விடுவித்தான்.

அவளோ அவனிடம் இருந்து விலக சம்மதித்தாள் இல்லை.

“கண்டிப்பா போகனுமா ராம்” என்றவாறே அவனோடு ஒட்டிக் கொண்டு நின்றாள்.

“மிசஸ் ராம்” அவள் செவிமடல்களில் அவன் மெல்ல கூற அவனது மூச்சுக்காற்றும் இந்த அழைப்பும் அவளை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றன.

அவள் விழி சொருகி நின்றாள்.

“யாரோ ஈர்ப்பு, இன்பேக்சுவேஷன் அப்படியெல்லாம் சொன்னங்க. பார்த்தா அப்படி தெரியலையே” உல்லாசமாக கேலி செய்தான்.

ஆனால் அதைக் கேட்டு அவள் வதனம் வாடி விட்டிருந்தது.

“ராம்..வந்து நான்...”

“அடடா நீ சீக்கிரம் வரணும்னு தான் அங்க வருண் காயத்ரி காத்திருக்காங்க. சீக்கிரம் கிளம்பி ரெடி ஆகுவியாம். நான் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ஒரு கப் காப்பி போட்டு எடுத்துட்டு வருவேனாம்” அவளை மேற்கொண்டு பேச விடமால் கவனத்தை மாற்றினான்.

“ஹப்பாடா இன்னிக்காச்சும் ஒழுங்கா காபி போட்டு குடுங்க. அன்னிக்கு டிமிக்கி குடுத்த மாதிரி இல்லாம. கிச்சன் கீழே ரைட் சைட். அவ்ளோ தான் எனக்கு தெரியும். என்ன சாமான் எங்க இருக்குன்னு நீங்களே போய் கண்டுபிடிச்சுகோங்க” என அவன் முதுகைப் பிடித்து மெல்ல வெளியில் தள்ளி கதவை சாத்தினாள்.

அன்று ஜானவியின் நிச்சயதார்த்த விழாவில் அணிந்த அதே புடவையை உடுத்திக் கொண்டு தேவதை போல வந்திறங்கியவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள துடித்த கைகளை வெகுவாக அடக்கிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.