(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 05 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

சையின் ஸ்வரமா நீ….

இவளின் வரமா நீ…

முகிலின் நகர்வா நீ…

குழலின் துளையா நீ…

யாவும் நீயாய் இருந்திட

நானும் என்ன சொல்லிட…

கேள்வி மட்டும் என்னிடம்…

பதில்கள் ஏனோ உன்னிடம்….

என்ன என்ன யோசனை…. என்னவா………. ஆ ஆ….

பக்கம் வந்து தான் சொல்ல வா…..

நி…ச…க…ரி…..ப…ம…த….நி….”

அழகான ஸ்வரங்களை அற்புதமாக மீட்டவள், பின், வார்த்தை கொண்டு அதனை அலங்கரித்தாள்…

அவள் பாடி முடித்ததும், அந்த அரங்கமே கை தட்டிட, சாருவின் முகத்தில் சின்ன புன்னகை ஒட்டியிருக்க, இங்கே கௌஷிக்கின் முகத்திலோ அப்பட்டமான அதிர்ச்சி தென்பட்டது…

“நன்றி சாரு…. உங்க வெற்றி மேலும் தொடர எங்க டீம் சார்பா வாழ்த்துக்கள்…”

சாருவும் பதிலுக்கு வணக்கம் சொல்ல, சேனலில் அடுத்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்திருக்க, அவள் குரலின் தாக்கமும், அவள் தந்த அதிர்ச்சியும் கௌஷிக்கை அப்படியே கட்டிப்போட அவன் உறைந்து போய் நின்றான்….

“என்ன என்ன யோசனை?... என்னவா…”

அவள் குரல் மீண்டும் அவனருகில் ஒலிப்பது போல் இருக்க, அப்படியே கட்டிலில் அமர்ந்தான் தொப்பென்று….

அவள் பாடகியா?...................

அவனுள் பெரும் கேள்வியும் அதிர்ச்சியும் உருவாக… அவன் எண்ண அலைகள் மேற்கொண்டு கரையை கடக்க முனைவதற்குள், கல்யாணி வந்தார் அவனது அறைக்குள்…

“கண்ணா… சுரேஷ் சார் வந்திருக்குறார்ப்பா…”

வந்தவர் மகனிடம் உரைத்துவிட்டு அவனின் முகம் பார்க்க, அவருக்கோ அவன் சிறிது நாட்களாகவே சரியில்லை என தோன்றியது…

“வரேன்ம்மா….”

திக்கித்திணறி அவன் வார்த்தைகள் வெளிவர, மகனின் அருகில் அமர்ந்து அவனது தலைகோதி விட்டார் அவர்…

“கௌஷிக்… கண்ணா… என்னப்பா?.. என்ன யோசனை?...”

இவ்வளவு நேரம் அவனது மூளைக்குள் உலாவந்து கொண்டிருந்த வார்த்தையினை தற்போது தாயும் உபயோகித்திட, அவன் அவரை இமையாடாது பார்த்திட்டான்…

மகனின் பார்வைக்கான அர்த்தத்தினை உணர முற்பட்டவரின் மடி மீது சட்டென படுத்துக்கொண்டான் அவன்…

“அம்மா…”

“கண்ணா… சொல்லுப்பா…” வாஞ்சையுடன் மகனின் நெற்றி தொட்டு கேசம் கோதினார் அவர்….

“சுரேஷ் சார்கிட்ட என்ன சொல்லப்போறீங்க?...”

“நீ சொல்லு என்ன சொல்லணும்?...”

“அந்த விளம்பரம் பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்கம்மா?…”

உதட்டிலிருந்து அந்த வார்த்தைகள் வந்ததாய் அவர் உணரவில்லை… மனதின் குரலாய் அவன் அவ்வார்த்தைகளை கேட்டிட,

மகனின் முகம் வருடியவர், “சுரேஷ் சார் தன் வாழ்க்கையில இப்போதான் மேல வந்துட்டிருக்கிறார்… அவரோட அந்த விளம்பர யோசனை நியாயமானது தான்… ஆனா அதே நேரத்துல உன்னைக் காயப்படுத்திட்டு அவர் அதை எடுக்குறதிலேயும் எனக்கு உடன்பாடு இல்ல கண்ணா… இரண்டு பேர் பக்கமும் நியாயம் இருக்குது…. நான் என்ன செய்யுறதுன்னு குழம்பி போய் இருக்குறேன் கண்ணா…” என மெல்ல கூறிட, அவன் அவரையே பார்த்திட்டான்…

“ஒரு விளம்பரத்தால உன் வெற்றி தீர்மானிக்கப்படக்கூடாதுன்னு நீ நினைக்குற… ஒரு விளம்பரம் இருந்தாலாவது தன் வெற்றி நீளாதான்னு அவர் நினைக்குறாரு… இந்த ஒரு விளம்பரம் அவருக்கு ஒரு வழி தான்… அந்த வழி மூலமா அவர் தன்னோட பயணத்தை தக்க வச்சிக்க முயலுறார்… உன் கையை பிடிச்சிட்டு பாதாளத்துல இருந்து மேல வந்திருக்குறார்… இப்ப இருக்குற நிலையை விட அவர் இன்னும் மேல போக நினைக்குறார்… அதுக்கு அவரோ குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம்… அதுக்கு இந்த விளம்பரம் உதவும் என்பதும் அவரது ஆழமான நம்பிக்கை… அந்த நம்பிக்கையை நான் உதாசீனம் செய்யக்கூடாதுன்னு நினைச்சா, என் பையன் நம்பிக்கையை உடைச்ச மாதிரி ஆகிடுமேன்னு பயம் என்னை ஆட்கொள்ளுது… அதே நேரம், என் மகன் அவனோட திறமையால முன்னுக்கு வந்தவன்… யாரையும் சார்ந்து முன்னுக்கு வரலை… யாரையும் மிதிச்சு முன்னுக்கு வரலை… அவனோட சொந்த உழைப்பு, கடும் முயற்சி இதெல்லாம் அவனை இந்த இடத்துக்கு கொண்டு வந்துச்சே தவிர, அவனோட டீ பிராண்ட்க்கு இதுவரை வந்த விளம்பரங்கள் இல்லை… அது ஒரு கருவி மட்டுமே… அது ஒரு மனுஷனோட திறமையை நிர்மாணிச்சிடாது… விளம்பரம் மனுஷங்களை அந்த ப்ராண்டை வாங்க வைக்கும் ஆனா, அதோட தரம் நல்லா இருந்தா தான் தொடரும்… இல்லன்னா, நாளை பின்னே அந்த விளம்பரத்தை பார்க்க நேர்ந்தாலும் எல்லாம் பொய், அட் பார்த்து வாங்கக்கூடாது, தரத்தை பார்த்து வாங்கணும் அப்படிங்கிற எண்ணம் வந்துடும்… நம்ம ப்ரண்டுக்கு தரம் கேட்கவே வேண்டாம்… அப்படி இருக்கும்போது இந்த விளம்பரம் வந்தாலும் சரி, வராட்டாலும் சரி உன்னோட பிசினஸ்ல எந்த பின்னடைவும் வரப்போறதில்லை… அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.