(Reading time: 36 - 71 minutes)

26. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

மிழ்-யாழினியின் திருமண ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பிக்க, சுதாகரனுக்கே தான் தனது நண்பனிடம் கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று பயம் வந்தது. இன்னொரு பக்கம், புகழ்- யாழினியின் நட்பு அவருக்கு எரிச்சலை மூட்டியது. திருமண ஏற்பாடுகள் அனைத்திலும் புகழின் பெயர் அடிப்படுவதை அவரால் தடுக்கமுடியவில்லை. அதோடு, யாழினியை சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அவள் புகழிடம் பாசம் பாராட்டுவதை அவரால் ஏற்க முடியாமல் இருந்தது.

அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தை புகழை ஃபோனில் அழைத்து தன்னை நேரில் சந்திக்கும்படி சொன்னார். தான் அழைத்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவர் சொன்னது, புகழின் மனதில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது. மோகனிடமும், யாழினியிடமும் பொய் சாக்குசொல்லிவிட்டு அவர் அழைத்த இடத்திற்கு சென்றான் புகழ்.

“ஹாய் அங்கிள்.. எப்படி இருக்கீங்க?”

“ம்ம்.. இருக்கேன்.. கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது?”

“பரபரப்பா போய்கிட்டே இருக்கு அங்கிள்.. ஏதும் முக்கியமா பேசனுமா?”

“யாழினியை உனக்கு ரொம்ப வருஷமா தெரியுமோ?”

“ம்ம்..காலேஜ்ல தான் ப்ரண்ட்ஸ் ஆகினோம் அங்கிள்”

“ஆனா பழக்க வழக்கத்தை பார்த்தா, அப்படி தெரியலையே?”

“அது.. அதுக்கு காரணம் யாழினிதான்  அங்கிள். எல்லாருகிட்டயும் பாசம்காட்டி பழகுறது அவளுடைய சுபாவம். அவக்கூட பழகினாலே அவளுடைய குணம் பிடிச்சு போயிரும். நம்ம தமிழுக்கு கூட அப்படித்தானே? “என்று இயல்பாக கேட்டான் புகழ். சுதாகரன் அப்படியொரு கேள்வி கேட்ட்துமே ஏனோ அதை தவறாக புரிந்துகொள்ள எண்ணவில்லை புகழ். தோழியின் புகுந்த வீட்டில் அவளது கீர்த்தியை பாடியே ஆகவேண்டும் என்று சூளுரைத்துகொண்டவன் போல பேசிக் கொண்டிருந்தான்.

“ மொத்ததுல யாழினி உனக்கு ஒரு சகோதரி மாதிரின்னு சொல்லுறியா புகழ்?” ஆட்சேபிக்கும் குரலில் கேட்டிருந்தார் சுதாகரன். சற்றுமுன்புவரை அவரது வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரியாமல் இருந்தான் புகழ். ஆனால் இந்த கேள்வியை கேட்கும்போது அவனுக்கு புரியவைத்தே ஆகவேண்டும் என்பது போல சுதாகரன் பேசவும், அதை உடனே புரிந்துகொண்டான் புகழ்.

யாழினி- புகழின் நட்பினை சிலர் இப்படி பேசுவது அவன் அறிந்த ஒன்றுத்தான். தங்கள் நட்பினை ஆட்சேபித்தோ சந்தேகித்தோ பேசுபவர்களுக்கு புகழின் உடனடி பதில் கோபம் அல்லது மௌனம். தன்னெதிரில் நிற்பவரோ தமிழின் அப்பா. தனது அன்பு தோழியின் வருங்கால மாமனார். அவரிடம் கோபத்தை காட்டினால், அது மொத்த உறவையும் கசப்பாக்கிவிடும். அமைதியாக இருந்தால் அவரது தவறான எண்ணங்கள் ஆமோதிக்கப்பட்டதாகிவிடும்.

“யாழினி எனக்கு தங்கச்சி மாதிரி இல்லை அங்கிள்.. அவ என் தோழி..”

“ அது எப்படி உறவாகும்?” புருவத்தை உயர்த்தி அவர்கேட்ட விதத்தில் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்க விட்டான் புகழ்.

“ஏன் அது உறவு ஆகாது அங்கிள்? எங்க நட்பே ஒரு அழகான உறவுதான். நான் எதுக்கு அவ என் தங்கச்சி மாதிரி அக்கா மாதிரினு சொல்லனும்? என் மனசுல கள்ளமில்லை.. யாழினி மனசும் அப்படித்தான். ப்ரண்ட்ஷிப்னா அது ப்ரண்ட்ஷிப் மட்டும்தான்.. “

“இந்த காலத்து யூத்ஸ்கு ப்ரண்ட்ஷிப்கு மீனிங் தெரியுமா? ப்ரண்டுனு பழகுவிங்க… கொஞ்ச நாளில் லவ்னு வந்து நிப்பிங்க.. இண்டர்நெட்ல பழகுறவங்கள பெஸ்டு ப்ரண்டுனு சொல்லிகிறது, காதலிக்கிற பொண்ணுக்கிட்ட பேசவே ப்ரண்ட்ஷிப்ஐ பயன்படுத்துறது.. ஒரு வேளை அந்த காதல் உடைஞ்சிருச்சுன்னா மறுபடியும் நாங்க ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்னு சொல்லிக்க வேண்டியது.. உங்கனாலத்தான் ப்ரண்ட்ஷிப்கு களங்கமே”

“போதும் அங்கிள்.. ப்ளீஸ்..சிலபேரு பண்ணுற தப்பால எல்லாத்தையும் தப்பா பேசாதீங்க.. கொஞ்ச நாளில் ப்ரண்டா பழகி அடுத்து காதல்னு நிக்கிறதா இருந்தால், யாழினியை நான்தான்..”என்று பதில் சொல்ல ஆரம்பித்த புகழ், அருவருப்புடன் முகத்தை சுளித்தான். “ச்ச..” என்று கைகளை முறுக்கி சுவற்றில் குத்திக் கொண்டவனின் கோபம் சுதாகரையே பயமுறுத்தியது.

“சார்!”,அங்கிள் என்று அழைக்க புகழ் விரும்பவில்லை என்பது அவன் விளித்த விதமே பிரதிபலித்தது.

“சார், எல்லாரும் ஒரே மாதிரிதான்னு யோசிக்கிறது தப்பான விஷயம்னு உங்களுக்கு தெரியாதா? என்னைவிட வயசுல பெரியவர், அதிகம் அனுபவம் இருக்குறவர், ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சில விஷயங்களை பார்க்க கூடாதுனு தெரியாதா சார்? நட்பில் தொடங்கி கடைசிவரைக்கும் நண்பர்களா இருக்குறவங்க நிறைய பேரு இருக்காங்க.. ஆமா சிலநேரம் காதலிக்கிற பொண்ணுக்கிட்ட பேச வழியில்லாமல் ப்ரண்டா அறிமுகமாகுறது நடக்குதுதான்.. ஆனா, எவ்வளோ சீக்கிரம்முடியோமோ அவ்வளவு சீக்கிரமா காதலை சொல்லத்தான் நினைப்போம் நாங்க.. ஏன் சார் காதலிக்கிறவங்களுக்குள்ள ப்ரண்ட்ஷிப் இருக்க கூடாதா? தமிழ் யாழினிக்குள்ளம் நட்பே இல்லையானு நான் கொஞ்சம் கேட்டு சொல்லவா?” என்று புகழ் கேட்ட கேள்வியில் அரண்டு போனார் சுதாகரன். அதை முகத்தில் வெளிப்படுத்தாமல் இருக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாயிற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.