(Reading time: 36 - 71 minutes)

“இதுதான் மாமா.இதுதான் நீங்க.. இதுதான் உங்க பாசம் கொண்டமனசு.. அந்த மனசு புரியலையா உங்களுக்கு? இவ்வளோ சின்ன விஷயத்தை புரியவைக்க புகழ் வரனுமா என்ன? உங்களுக்கே உங்க மனசு புரிஞ்சிருக்க வேணாமா? நாலு பசங்க இருந்துமே ராமன் காட்டுக்கு போகுறதை தடுக்க முடியாதப்போ தசரதன் உயிரை விட்டார்.. நீங்க ஒரே ஒரு பிள்ளையை விட்டுட்டு தைரியமா சந்தோஷமா இருக்கீங்கனு காட்டிக்கிட்டா அதை நான் நம்பனுமா? புத்திர சோகம் அந்த காலத்துல மட்டும்தான் இருக்கா?இப்போ இல்லையா?”. தனக்குள் ஏதோ உடைந்து உருவதை போல உணர்ந்தார் சுதாகரன். விழிகளில் கண்ணீர்த்துளி விழவா ? என்று அனுமதி கேட்டு நின்றது.அதை கண்டுகொண்டவன்,

“லேட்டாச்சு மாமா..ப்ளீஸ் போயி தூங்குங்க” என்றான். நகராத கால்களை வற்புறுத்தி நகர்த்தினார் சுதாகரன். “ஒருநிமிஷம் மாமா”என்றவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவர் நிற்க, அவரை அணைத்துக் கொண்டான் புகழ். அனுமதி கேட்டு நின்ற கண்ணீர்த்துளிகள் விடுப்பட்டன.

“எல்லாம் சரி ஆயிடும் மாமா.. டைம் எடுத்து யோசிச்சு பாருங்க.. உங்களுக்கு சரினு பட்ட அடுத்த நிமிஷம் நானே எல்லாரையும் சேர்த்து வைக்கிறேன்..நடந்தது எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும் மாமா”என்றான். சுதாகரனின் உணர்ச்சிகலவைகளை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரை மெல்ல அணைப்பிலிருந்து விடுவித்தவன்,”குட் நைட்” என்று புன்னகைக்க, சுதாகரனோ இயந்திரம் போல இயங்கினார்.

தன்னை சுற்றி உள்ள வெற்றிடமெல்லாம் “ஹோ” வென ஒலி எழுப்புவது போல இருந்தது அவருக்கு. அவரது கரங்கள் தானாகவே இடப்பக்கம் மாரைப் பற்றிக் கொள்ள ஏதோ ஒன்று அவரை அழுத்துவதாகவே உணர்ந்தார். கண்ணீர் ஒருபுறம் நிற்காமல் வழிய,

“தமிழ்”என்ற கூக்குரலுடன் அப்படியே தரையில் வீழ்ந்தார் சுதாகரன். கணவரை காணாமல் தூக்கத்திலிருந்து எழுந்து வந்த மனோன்மணி அவர் விழுந்து கிடந்த கோலத்தை பார்த்து பயந்தே போனார். “புகழ்.. சீக்கிரம் வாப்பா”’. அடுத்த சில நிமிடங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்குமே நினைவில்லா வண்ணம் பதட்டத்துடன் இருந்தனர் அனைவரும்.

ருத்துவமனை!

“ டோண்ட் வர்ரி டாக்டர் தமிழ். மைல்ட் அட்டேக்தான். பட் அவரை இன்னும் கவனமா பார்த்துக்கோங்க.. நீங்களே டாக்டர்தான் யூ வி நோ பெட்டர்” என்றார் அங்கிருந்த இன்னொரு மருத்துவர்.

விழிகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் சுதாகரன். நடுங்கும் விரல்களால் அவரது புருவ முடிச்சினை நீவிவிட்டான் தமிழ். யாழினி, புகழ், மனோன்மணி மூவரும் ஒரு மூலையில் நின்றிருந்தார்கள்.

“தமிழையும் மாமாவையும் நான் பிரிச்சுட்டேனா புகழ்?” புகழின் கரங்களை பற்றிக் கொண்டு கேட்டாள் யாழினி. அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் அவளைப் பார்த்தான் புகழ். பேசியது யாழினியா? அவனின் யாழீயா? அவனால் நம்பவே முடியாதது போல அவன் பார்க்க,யாழினியோ அவன் தோளில் லேசாய் சாய்ந்து கொண்டாள்.

“சொல்லுடா..நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா?”என்று அவள் கேட்க புகழோ யாழினி தன்னிடம் பேசிவிட்டாள் என்ற உவகையில் கண்ணீர்வடிக்க, இமைக்கும்நொடியில் இருவருமே தமிழின் இறுகிய அணைப்பில் நின்றிருந்தனர். யாழினி புகழின் கையை பற்றிகொண்டு தமிழின் மார்பில் புதைந்துகொள்ள, அந்த கர பற்றுதலை விடாமல் பிடித்துக் கொண்டே தமிழின் தோளில் தலை வைத்து தன் பாரத்தை கண்ணீரால் கரைத்தான் புகழ்.

கணவனின் நிலையில் உடைந்து போன மனோன்மணிக்கு, அவர்கள் மூவரும் நின்றிருந்த காட்சி பெரும் ஆறுதலாக இருந்தது.

“ஷ்ஷ்ஷ்..டேய் ரெண்டு பேரும் கொஞ்சம் அடங்குறீங்களா.? நான் எங்கப்பாவுக்காக அழலாம்னு பார்த்தா,நீங்க ரெண்டு பேருமே என்னை மிஞ்சிடுவீங்க போல..அழுமூஞ்சிங்களா!” என்று தமிழ் மிரட்டி இருவரையும் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்தான். யாழினியும் புகழும் தாங்கள் பற்றிய கரத்தை பார்த்துக் கொள்ள தமிழின் மனம் நிறைந்தது. இன்னொரு கையால் யாழினியின் கூந்தலை வருடி “சாரி டா” என்றான் புகழ்.

“ஐ எம் சாரி டூடா” என்று சொன்னவளை தோளோடு அணைத்துக் கொண்டான் புகழ்! நெகிழ்ச்சி, பாசம், ஆனந்த கண்ணீர்,நட்பு மட்டுமே நிறைந்திருந்த அச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பேசினான் புகழ்.

“அத்தை,புகழ், யாழீ ப்ளீஸ்.. பழசப்பத்தி எதுவுமே பேசவேண்டாம்..ப்ளிஸ்..நம்ம எல்லாருக்குமே இந்த மூனு வருஷம் நரகவேதனையை தந்துருச்சு.. அது இன்னும் நீள வேணாம்.. ப்ளீஸ்.. எனக்காக..எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஆரம்பிக்கலாம்..” என்றான் புகழ்.

யாழினியின் பக்கம் திரும்பியவன், “யாழீ, நீ யாரையும் பிரிக்கல.. லூசு மாதிரி யோசிக்காத.. எல்லாமே நல்லதுக்குனு நினைச்சிக்கோ..”

“அப்போ என்ன நடந்துச்சுன்னு நீயா சொல்லவே மாட்ட அப்படித்தானே?” என்று கோபமாய் கேட்டபடி அங்கு வந்தார் மோகன். அவரது முறைப்பை பார்த்து புகழ் தலைக்குனிய, யாழினி “அப்பா”மற்றும் தமிழ் “மாமா”என்று ஒன்றாய் அழைக்க கடைசி நொடியில் புகழை புன்னகையுடன் அணைத்துக் கொண்டார் மோகன்.

“மன்னிச்சிருடா.. உன்னை புரிஞ்சுக்காம விட்டுட்டேன்.. என்ன நடந்துச்சுனு நீ சொல்லலனாலும் என்னால இப்போ புரிஞ்சிக்க முடியுது”என்றவர் ஓர் அர்த்தமுள்ள பார்வையை சுதாகரனின் மீது வீசினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.