இப்போ சற்று தெளிவுடன் “சரி. சரி..” என, அப்போது வேகமாக செந்தில் அவர்கள் அருகில் வந்து
“சாரி.. செழியன் .. சாரி மலர் .. பேசிட்டே வேகமா நடந்துட்டோம்.. “ என, மலர்
“இதில் என்ன அண்ணா ? பாவம் அண்ணி.. உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு இந்த டூருக்கு வந்துருப்பங்க.. நாங்கதான் நந்தியா இருக்கோம்..” என
“ஹ.. மலர் .. இப்படி எல்லாம் உண்மைய பப்ளிக்கா சொல்ல கூடாது.. நீ சொன்னவுடனே.. அவன் கண்ணில் எவ்ளோ லைட் ? இவ்ளோ நேரம் மனசுக்குள்ளே என்ன என்ன கழுவி ஊத்தினானோ”
“டேய்.. அடங்குடா.. நீ மட்டும்னா.. நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. பாவம் தங்கச்சி.. ஏதோ நம்மள நம்பி வருதே.. அத நல்லபடியா வீட்டில் கொண்டு போய் சேர்க்கணுமேன்னு பார்க்கறேன்.. “
“யாரு .. உன்ன நம்பியா ?.. என் தங்கச்சி .. செல்விய சொல்லு ஒத்துக்கறேன்.. நீ அவங்க பின்னாலே கூஜா தூக்கிட்டு போற வேலைய தானே கரெக்ட்டா பார்க்கிற.”
“அட.. போடா.. நானாவது கூஜா தான் தூக்கறேன்.. நீ அண்டாவே தூக்கிட்டு போக போறத நானும் பாக்கத்தானே போறேன்..”
இவர்கள் வழக்கடித்து கொண்டு இருக்க, இரண்டு பெண்களும் அவர்களை முறைத்துக் கொண்டு இருந்தார்கள்.
அதை சரியாக புரிந்து கொண்ட இருவரும்
“ஹேய்.. உங்கள ஒண்ணுமே சொல்லலமா.. எங்கள நாங்களே திட்டிக்கிறோம்.. அவ்ளோதான்..”
என்று இருவரும் வழியவும், பெண்கள் இருவரும் குபீர் என்று சிரித்து விட்டனர்.
பின் நால்வரும் சிரித்தபடி பேசிக் கொண்டே வர, செழியன் போன் அடித்தது.
“குட் ஈவினிங் சார்.. “ என்று எடுத்தவுடன் ஹலோ கூட சொல்லாமல் சொல்லவும், மூவரும் அவனை பார்த்தனர். அவனின் உடல்மொழியிலும் ஒரு வித்தியாசம். ஸ்கூலில் படிக்கும்போது ஹெட்மாஸ்டரை ஸ்கூல் விட்டு வெளியில் கண்டால் ஒரு மரியாதையும், அதே சமயம் ஒரு அட்டென்ஷன் பொசிஷனுக்கு செல்வோமே அதை போல் இருந்தது.
அந்த பக்கம் பேசியது இவர்களுக்கு கேட்கவில்லை. செழியன் பேசுவது மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தனர்.
“ஹலோ ..செழியன்.. மெசேஜ் மட்டும் கொடுத்து இருக்கீங்க.. ஏன் கால் ரீச் ஆகலையா ?
“இல்லை சார்.. நீங்க டுயுட்டியில் இருப்பீங்க என்று தான் மெசேஜ் மட்டும் கொடுத்தேன்..”
“ஓகே.. சொல்லுங்க என்ன விஷயம்“
“ஒரு ஹெல்ப் வேணும்.. நாளைக்கு அவலாஞ்சி பாரெஸ்ட் ரைடு போக பெர்மிஷன் வாங்கி தரனும்”
“நாளைக்கா.. முன்னாடியே சொல்லிருந்தா ஈஸியா இருக்குமே.. “
“நான் மட்டும்னா.. முன்னாடியே உங்க கிட்ட பேசி ஏற்பாடு செய்துருப்பேன்.. இது எங்க கல்லூரி தாளாளர் ஒரு போனஸ் மாதிரி இந்த ட்ரிப் ஏற்பாடு செய்து இருக்கார். ரெண்டு நாள் முன்னாடி தான் அறிவிப்பு கொடுத்து, நேற்று கிளம்பி இன்னிக்கு இங்கே வந்துட்டோம்.. “
“ஒஹ் – இந்த சீசன்லே கொஞ்சம் கஷ்டம் செழியன்.. மற்ற இடங்களுக்குன்னா நான் ஏற்பாடு செய்யறேன்..”
“இல்லை.. எல்லோருமே ஏற்கனவே ஊட்டி பார்த்த இடம் தான்.. அதான் கொஞ்சம் வேறுபாடா இருக்கட்டுமேன்னு அவலாஞ்சி பற்றி சொன்னேன். “
“ஓகே.. எத்தனை பேர்? எந்த வண்டிலே போறீங்க?”
“நாற்பது பேர்.. ஒரே பஸ் தான்... “
“ஐயோ.. என்ன செழியன் .. ரொம்ப கஷ்டம் ஆச்சே..”
“நீங்க ஹெல்ப் செஞ்சா முடியும் சார்.. ப்ளீஸ்..”
“நான் ..உனக்கு ஹெல்ப் செய்யறேன்.. அதே மாதிரி நீயும் வந்து இங்கே என் மனைவி சமைச்சு வச்சது சாப்பிட்டு ஹெல்ப் பண்ணனும். “
“என்னது... அக்கா சமையல் சாப்பிடனுமா ?.. சார் சார்.. என்னை பார்த்தா பாவமா இல்லியா? ப்ளீஸ் விட்டுடுங்களேன்..”
“அப்படியா.. இரு.. உங்க அக்காகிட்டே கொடுக்கறேன்..” என்று அருகில் இருந்தவரிடம் கொடுக்க.
“ஹலோ.. என் சமையல் அவ்ளோ கொடுமையாவா இருக்கு.?
“ஐயோ...அக்கா.. அப்படி சொல்லலை.. சார் மாற்றி சொல்றாங்க.. நான் சொன்னது உங்க சாப்பாடு சாப்பிடவே தனியா வரேன்.. இப்போ வந்தா அவசரமா கிளம்ப வேண்டி இருக்கும்னு.. அதைதான் சொன்னேன்கா..”
“என்னது.. சாரா ? நான் அக்கான்னா அவங்க மாமா தானே.. இல்லை என்னை மட்டும் வயசானவளா சொல்லிட்டு, அவங்க கூட சேர்ந்து இளமை துள்ளுதுன்னு நினைப்போ..”
“ஓகே.. ஓகே. மாமா தான்.. அது அவங்க கிட்டே பேசினாலே... அப்படி ஒரு மரியாதை வந்துருது..”