அங்கே செழியன் இருக்கவும், தன்னை சற்று ஆசுவாசபடுத்திக் கொண்டாள்.
“என்னாச்சு இளா? மத்தவங்க எல்லாம் எங்கே?”
“ஒன்னும் இல்லை.. இன்னும் எல்லோரும் கீழே டீ குடிச்சுட்டு இருக்காங்க..”
“நீங்க மட்டும் வந்துடீங்க..?’
“உன் முகமே பார்க்க சரியில்லை கண்ணம்மா.. எதாவது ஹெல்ப் வேணுமா..? “
“ஒன்னும் வேண்டாம் இளா.. டீ குடிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் பெட்டெர் தான்.. என்னை நார்மல் பண்ணிக்கதான் இப்படி படுத்து இருந்தேன்..”
“ரொம்ப கஷ்டமா இருக்கா? நான் வேணா செந்தில் மனைவி வர சொல்லவா? , நாம நாலு பேரும் ரிசார்ட் போயிடலமா ?”
“இல்லைப்பா.. அது எல்லோருக்கும் கஷ்டமா போயிடும்.. நான் அட்ஜஸ்ட் பண்ணிகறேன்..”
“ஓகே.. நான் கீழே போறேண்டா.. தேவை இல்லாமல் சீன் உருவாகிடும்.. ஆனா உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லிடு .. வேற வழி பார்க்கலாம்..”
மலர் தலையாட்டவும், மெலிதாக அவள் கையை பிடித்து அழுத்தி விட்டு சென்றான். நல்லவேளையாக யாரும் பஸ் பக்கம் வரவில்லை. ஒரு இடத்தில இவர்கள் கும்பல் நிற்க, இவன் அங்கே சென்றபோது, செந்தில் ஏதோ மோனோ அக்டிங் மாதிரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.
செழியன் வரவும், மேலும் சற்று நேரம் நடித்து முடிக்க, எல்லோரும் பஸ் நோக்கி வந்தனர்.
கடைசியில் வந்த செழியன் , செந்தில் இருவரும் சற்று பின்தங்கி வர,
“டேய்.. என்னடா.. நீ பாட்டுக்கு தங்கச்சிய பார்க்க போயிட்ட.. யாரவது வந்துருந்தா என்ன ஆகறது..?”
“அட போடா.. ஒன்னும் ஆகாது.. மலருக்கு உடம்பு சுகமில்லைடா.. அதான் பார்க்க போனேன்.. யாராவது பார்த்தாலும் என்ன எக்ஸ்ட்ரா கவனிப்புன்னு தோணி இருக்கும் அவ்ளோதான்..”
“அது சரி. இங்கே எல்லாம் கும்பலா வந்து என்ன விஷயம்னே தெரியாம கலாயிக்க ஆரம்பிச்சு இருந்தா என்ன ஆகும்? அந்த பொண்ணுக்கு தானே கஷ்டம்.. “
“நீ சொல்றதும் சரிதாண்டா.. அதான் நானும் உடனே இறங்கிட்டேன்.. “
“கவலைபடாதே.. நான் செல்விய அவங்க கூட இருக்க சொல்றேன்..”
“தேங்க்ஸ்டா .. மச்சான்..”
“இதில் என்னடா இருக்கு..” என்றபடி இவர்கள் பஸ்சில் ஏற, அங்கே ஏற்கனவே மலரின் அருகில் வளர்மதி அமர்ந்து இருந்தார்.. அதை பார்த்த பின் இருவரும் அவரவர் இடத்தில அமர்ந்து கொண்டனர்.
மலர் சீட்டிற்கு பின்புறம் இரண்டு சீட் தள்ளி அமர்ந்து இருந்ததால் அவளை பார்க்க முடிந்தது.
சற்று நேரத்தில் தொட்டபெட்டா வந்து அடைய , எல்லோரும் அங்கிருந்த தோட்டம் பார்த்து விட்டு, அந்த இதமான சூழ்நிலை அனுபவிக்க அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.
முதலில் சற்று வெளிச்சம் இருக்கவே, எல்லோரும் ஆரவாரமாக பேசி கொண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில் ஒரு மேககூட்டம் கிராஸ் செய்ய, ஒருவர் மற்றவர் முகம் கூட பார்க்க முடியாமல் அந்த மேகம் அவர்களை தழுவி சென்றதை அவர்களால் உணரமுடிந்தது..
இதை எதிர்பார்க்காத அவர்கள் நடுவில் அமைதி ஆகி.. பிறகு ஓ வென்று கத்த, எல்லோருக்கும் அந்த பீல் சொல்ல முடியாத சந்தோஷத்தை தந்தது.
மலர் கொஞ்சம் கஷ்டபட்டாலும், இந்த மேகம் அவர்களை மூடிய அந்த சந்தோஷத்தில், அவளின் மனம் சிறகடித்து பறந்தது.. அவளையே பார்த்துக் கொண்டு இருந்த செழியனுக்கும், அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.
அன்று வேறு எங்கும் சொல்லாமல், அந்த இனிமையை அனுபவிக்கும் விதமாக நேராக எல்லோரும் ரிசார்ட் சென்று விட்டனர்.
அங்கே சென்ற சற்று நேரத்தில் , செழியன் கேட்டிருந்த பெர்மிஷன் கிடைத்து இருக்க, அவர்களை அழைத்து செல்ல ஒருவரையும் அனுப்புவதாக சொல்லியிருந்தார் .
அன்று இரவு டின்னெர் குளிருக்கு இதமாக சூப் உடன், சைவம், அசைவம் என்று இருக்க, அதற்கு முன் ரிசொர்ட் முன்புறம் இருந்த இடத்தில் கேம்ப் பாயர் அமைத்து, ஒரே ஆட்டமும், பாட்டும் களை கட்டியது..
“அன்று வந்ததும் இதே நிலா”
“பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்”
“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை “
இந்த பாட்டுக்கள் பாடியும், அதற்கு ஏற்றவாறு ஆடியும் அமர்க்கள படுத்தினர்.
எல்லோருக்குமே இந்த நேரத்தில் கிடைத்த சந்தோஷம் மறக்க முடியாததாக இருந்தது.
அந்த நாளில் கொஞ்சம் கஷ்டபட்டாலும் , மலர் செழியன் இருவருக்குமே அவர்கள் நேசத்தில் நெருக்கம் கூடிய உணர்வு வந்தது.
மறுநாள் காலையில் ஏழு மணிக்கு அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எல்லோரிடமும் தெரிவித்து இருந்தான் செழியன்.
ஊட்டியில் இருந்து முப்பது கிலோமீட்டர் என்றாலும், முழுதும் மலை ஏறவேண்டும் என்பதால் , கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிடித்தது. நடுவில் ஒரு இடத்தில் நிறுத்தி பிரேக் பாஸ்ட் முடித்துக் கொண்டனர்.