(Reading time: 27 - 54 minutes)

30. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

க்கா தங்கை இருவரும் ஒன்று சேர்ந்ததும், யமுனா, இளங்கோ திருமணத்தை உடனே நடத்திவிட கங்கா ஆசைப்பட்டாள். ஆனால் அக்காவின் வாழ்க்கை புரியாத புதிராக இருக்க, என்னால் திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று யமுனா திருமணத்தை மறுக்க, உனக்கு செய்ய வேண்டிய கடமையை முடித்தால் தான், கங்கா அவளைப் பற்றி யோசிப்பாள்.. அவள் எடுக்கும் எந்த முடிவும் உன் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கக் கூடாது என்று தீர்மானமாக இருக்கிறாள்.. அதனால் இந்த திருமணம் உடனே நடக்க வேண்டும் என்று இளங்கோவும் வாணியும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.

யமுனா திருமணத்திற்கு சம்மதித்ததும் உடனே நிச்சயத்தை வைத்துக் கொண்டு, பின் தை பிறந்ததும் திருமணத்தை நடத்த இளங்கோவின் தந்தை முடிவு செய்தார். ஆனால் புத்தக கண்காட்சியை முன்னிட்டு, பதிப்பகத்தில் இளங்கோவிற்கு நிறைய வேலை இருப்பதாலும், பள்ளியில் நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில்  கலை நிகழ்ச்சிகள் நடத்தும் பொறுப்பை யமுனா ஏற்றிருப்பதாலும், பிப்ரவரியில் திருமணம் வைக்கலாம் என்று இருவரும் கூற, அப்போது தை மாதத்தின் தேய்பிறை முகூர்த்தங்கள் வருவதால், மாசி முதலிலேயே திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்து, இதோ திருமண நாளும் வந்துவிட்டது..

திருமணம் முடிவானதுமே, யமுனாவை கங்காவோடு தங்கச் சொல்லி வாணி கூறியதற்கு, கங்கா அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.. திருமணம் ஆகும்வரை யமுனா விடுதியிலேயே இருக்கட்டும் என்று உறுதியாக கூறினாள்.. அவள் எதற்காக அப்படி கூறுகிறாள் என்று வாணிக்கும் யமுனாவிற்கும் புரிந்தது.. அதனால் யமுனா விடுதியிலேயே தங்கிக் கொள்வதாக ஒத்துக் கொண்டாள்.

இளங்கோ இதுவரை தங்கியிருந்தது சிறு அறை என்பதால், திருமணம் முடிந்ததும் இருவரும் இருப்பதற்கு தகுந்தாற்போல் வீடு பார்த்து தை பிறந்ததும் கங்கா, நர்மதா, யமுனா, ரம்யா, வாணி அனைவரும் சேர்ந்து பால் காய்ச்சினர்.. அதே போல் பொங்கல் பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடினர்.. மாசியில் திருமணம் என்பதால் தை மாதத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து இளங்கோ, யமுனா திருமணத்தையும் நிச்சயம் செய்தனர்.

இந்த இடைப்பட்ட காலங்களில் இளங்கோவும் யமுனாவும், இளன், யம்ஸ் என்று செல்லமாக கூப்பிட்டுக் கொள்ளும் அளவிற்கு தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்.. ஆனால் விரைவில் தன் மனதை நர்மதாவிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த செல்வாவோ, கொஞ்சம் வேலையில் பிஸியாகி போனான். நர்மதாவும் யமுனாவின் திருமணம் குறித்து கொஞ்சம் பிஸியாக இருந்தாள், அதனால் அவர்கள் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் அதற்கு மாறாக துஷ்யந்தோ கங்காவின் மனதை மாற்றி அவளை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தான்.. ஆனால் கங்கா அவளின் நிலையை விட்டு இறங்கவேயில்லை, இருந்தும் துஷ்யந்த் மனம் தளரவில்லை.

யிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவிலில் தான் திருமணம்.. இளங்கோவின் ஊரில் அவர்கள் குடும்பத்துக்கு நிறைய சொந்தப்பந்தங்களும் தெரிந்தவர்களும் இருந்தாலும், யாருக்கும் தெரிவிக்காமல் சென்னையிலேயே திருமணத்தை நடத்திடலாம் என்று இளங்கோவின் தந்தை முடிவு செய்திருந்தார். ஏனென்றால் கங்கா, யமுனாவின் குடும்பத்தைப் பற்றி இளங்கோவின் உறவினர்கள் தெரிந்துக் கொள்ள நினைப்பர், இதில் கங்காவின் கணவன் பற்றி யாராவது அவளிடம் கேட்டு அவள் மனதை வருத்தி விடக் கூடாது என்று நினைத்து தான் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். இங்கு திருமணத்தை முடித்துக் கொண்டு, பின் ஊருக்கு சென்று அனைவருக்கும் விருந்து வைத்திட நினைத்திருந்தார்.

விடியற்காலையிலேயே யமுனா, கங்கா, நர்மதா, வாணி, ரம்யா ஐவரும் கோவிலுக்கு வந்துவிட்டனர், இளங்கோவின் குடும்பம் இரவு தான் சென்னைக்கு வந்து சேர்ந்ததால்,  இன்னும் சற்று நேரத்தில் இளங்கோவும் அவர்களும் கோவிலுக்கு வந்துவிடுவதாக கங்காவிடம் தெரிவித்திருந்தனர். அதற்குள் யமுனாவிற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தனர்.

“ஏன் நர்மதா? ரிஷப் தம்பி கல்யாணத்துக்கு வரும் இல்ல..”

“ம்ம் வருவாரு வாணிம்மா.. துஷ்யந்த் மாமாவும் அவரும் ஒன்னா வர்றதா சொல்லியிருக்காங்க.. யமுனாக்கு அலங்காரம் பண்ணனும்னு, நான் முன்னாடியே வந்துட்டேன்..”

“யமுனா.. கங்காவோட தங்கச்சின்னு கோமதியம்மாக்கு தெரியுமா?”

“இந்த விஷயம் தெரிஞ்சதுமே நான் அத்தைக்கிட்ட சொல்லிட்டேன் ம்மா..”

“இந்த விஷயம் தெரிஞ்சுமா உன்னை கல்யாணத்துக்கு அனுப்பிச்சாங்க..?”

“இதுல என்ன இருக்கு வாணிம்மா.. யமுனா என்னோட ப்ரண்ட், அதுமட்டுமில்ல, கங்கா அக்கா பத்தியே அவங்க இதுவரை கோபமா பேசினதில்ல, அப்புறம் யமுனா கல்யாணத்துக்கு என்னை போக வேண்டாம்னு சொல்லுவாங்களா?”

“உண்மை தான்.. அவங்க தம்பி பொண்டாட்டியாவது கங்காவை தப்பா பேசியிருக்காங்க.. ஆனா கோமதியம்மா கங்காவை அப்படி கடுமையா பேசினதில்ல..” சொல்லிக் கொண்டிருந்த போதே, இளங்கோவும் அவர்கள் குடும்பமும் அங்கே வந்தார்கள்.

வந்ததும் இளங்கோவின் தந்தை முதற்கொண்டு, அவனது அண்ணன், அண்ணி அனைவரும் முதலில் கங்காவை தான் விசாரித்தார்கள், பின்பு தான் தங்கள் வீட்டு மருமகளாக போகும் யமுனாவிடம் பேசினார்கள்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த நர்மதா, ரம்யா, ஏன் யமுனாவிற்கே அது ஆச்சர்யத்தை கொடுத்தது. உண்மையிலேயே இளங்கோ வீட்டின் மருமகளாக செல்ல கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று யமுனா நினைத்துக் கொண்டாள். நிச்சயதார்த்தம் அன்றே இளங்கோ குடும்பத்தை பார்த்திருந்தாலும், இன்று தான் அவர்கள் கங்காவுடன் நெருக்கமாக இருப்பதை நன்றாக உணர்ந்திருந்தாள். எதை நினைத்து அவள் பயந்துக் கொண்டிருந்தாலோ அந்த பயம் முழுக்க அவளை விட்டு விலகியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.