(Reading time: 27 - 54 minutes)

கோவிலிலிருந்து அனைவரும் கிளம்ப தயாராயினர், திருமணத்திற்காக கொண்டு வந்திருந்த பொருட்களை அதற்குண்டான வண்டியில் ஏற்றி இளங்கோவின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே வந்து சாப்பிட்டதும் இளங்கோ வீட்டிற்கு கிளம்பும் எண்ணத்தில் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் ஓமக் குண்டத்தில் இன்னும் நெருப்பு கனன்று புகைந்து  கொண்டிருந்தது. அதன் மேலே யாரோ தாம்பூல தட்டை வைத்திருந்தனர். அந்த தட்டும் அந்த நெருப்பின் தாக்கத்தில் சூடாகி இருந்தது. அது தெரியாமல் அந்த தட்டை கங்கா எடுத்து, அந்த சூடு பொறுக்காமல், ஆ என்று அலறி தட்டை கீழே போட்டாள். அவள் இரண்டு உள்ளங்கைகளும் பத்து விரல்களும் சூடுப்பட்ட காயத்தில் சிவந்து போனது.

அனைவரும் பதறி அவள் அருகே வந்தனர் என்றால், துஷ்யந்தோ ஒருப்படி மேலே சென்று அவள் கைகளை பிடித்து வாயால் அந்த காயத்தில் ஊதினான். அதற்கே வலிப் பொறுக்காமல் அவள் முகம் சுளிக்க, “இளங்கோ என்னோட கார்ல பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும் எடுத்துட்டு வா” என்று உத்தரவிட, அவனோ விரைந்து சென்றான்.

“கங்கா இப்படி உக்காரு..” என்று அவள் கையைப் பிடித்தப்படியே உட்கார வைத்து அருகில் உட்கார்ந்துக் கொண்டான். துஷ்யந்த் இப்படியெல்லாம் செய்வது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.. தானே பார்த்துக் கொள்வதாக மறுப்பு சொன்னாலும், அதை அவன் காது கொடுத்து கேட்கவில்லை..

இளங்கோ எடுத்து வந்த மருந்தை அவள் கைகளில் அவனே போட்டுவிட, அவள் வலியில் துடித்துப் போனாள். “கங்கா.. எதுக்கோ ஹாஸ்பிட்டல் போயிட்றதும் நல்லது.. அப்போ தான் வலி குறையும்.. வா போகலாம்” என்று அவனே அழைத்துப் போக தயாரானான்.

இப்படி துஷ்யந்த் உரிமை எடுத்துக் கொள்வதை பார்த்தால் அனைவரும் என்ன நினைப்பார்கள் என்று கங்கா தயங்க..

“ஆமாம்மா துஷ்யந்த் சொல்ற மாதிரி ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடுங்க..” என்று இளங்கோவின் அப்பா, அண்ணன், அண்ணி அனைவரும் கூறினர்.. துஷ்யந்தோ அவள் வேண்டாமென்றாலும் விடமாட்டான் போல, தயாராக அவள் கைகளை இன்னும் விடாமல் பிடித்தப்படி நின்றிருந்தான். அவளுக்கும் வேறு வழியில்லாமல் அவனோடு சென்றாள்.

துஷ்யந்த், கங்காவின் கடந்தகாலம் பற்றி யாருக்கும் சரியாக தெரியாது தான், இருந்தும் அங்குள்ளவர்கள் இருவரின் நலம் விரும்பிகள்.. கங்கா துஷ்யந்தை மணம் புரிய வேண்டுமென்று நினைப்பவர்கள், அதனால் யாரும் துஷ்யந்தின் நடவடிக்கைகளை தவறாக நினைக்கவில்லை.. ஆனால் ஒருவனை தவிர,

அவன் தான் செல்வா, தன் அண்ணனை புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன், இதுவரையிலும் எந்த பெண்ணிடமும் துஷ்யந்த் தொட்டு பேசி அவன் பார்த்ததில்லை.. ஏன் திருமணம் செய்து கொள்ள இருந்த சாருவிடம் கூட அவன் விலகி தான் இருந்திருக்கிறான்.. அப்படிப்பட்ட தன் சகோதரன் இன்று கங்காவிடம் காட்டிய உரிமையை கண்டு அவன் அதிர்ந்து நின்றான்.

திருமணத்திற்கு வரும் வரை, துஷ்யந்த் இளங்கோவிற்காக தான் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்கிறான் என்று அவன் நினைத்திருந்தான். இங்கு வந்ததும் கங்காவை காட்டி, இவங்க தான் யமுனாவின் அக்கா என்று நர்மதா கூறினாள். ஏனெனில் ஏற்கனவே யமுனாவிற்கு ஒரு அக்கா இருக்கிறார்கள், அது எனக்கு இப்போது தான் தெரிந்தது என்று யமுனாவையும் கங்காவையும் பற்றி நர்மதா மேலோட்டமாக அவனிடத்தில் தெரிவித்திருந்தாள். அதனால் தான் இங்கு வந்ததும் கங்காவை அவனிடம் காட்டினாள்.. கழுத்தில் தெரிந்த தாலியை பார்த்து அவள் திருமணமானவள் என்று நினைத்துக் கொண்டான்.. இங்கிருப்பவர்களில் அவளது கணவன் யார் என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது.. இருந்தும் அதை அவன் பெரிதாக நினைக்கவில்லை.. அதனால் தன் சகோதரன் கங்காவின் அருகில் நின்றதையும் அவன் கருத்தில் கொள்ளவில்லை.

இதில் வாணி அவனை விசாரித்ததும், அவர் கங்காவுடன் பேசியதையும் பார்த்த போது குழம்பிப் போனான். 6 வருடத்திற்கு முன்பு வரை தங்கள் எஸ்டேட்டில் வேலைப் பார்த்த வாணி திடீரென வேலையை விட்டு சென்றுவிட்டார் என்பதே அந்த சமயம் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவரை சிறுவயதில் பார்த்தது, அவரை திரும்ப பார்க்கும் சந்தர்ப்பம் அமையாமலேயே போனதே என்று அவன் அப்போது வருத்தப்பட்டுக் கூட இருக்கிறான்..அவரை இன்று பார்த்து முதலில் வியந்தான்.. இதில் வாணி தன் அண்ணனோடு இயல்பாய் உரையாடுவதை பார்த்த போது, தன் அண்ணனுக்கு வாணி அக்காவோடு இப்போதும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி பிறந்தது.. இதில் கங்காவோடு தான் வாணி இருக்கிறார் என்ற விஷயம் அங்கே பேச்சுவாக்கில் தெரிய வந்த போது, வாணிக்கும் கங்காவுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் அவன் யோசித்தான்.

இதில் இளங்கோவிற்காக இந்த திருமணத்தில் கலந்துக் கொண்ட அண்ணன், இளங்கோவிற்கு மட்டுமல்லாமல், யமுனாவிற்கும் சேர்த்து பரிசு வாங்கி வந்த போது முதலில் அதை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தாலும், இவ்வளவு விலையுயர்ந்த பரிசா? என்ற கேள்வி அவன் மனதில் எழாமல் இல்லை.. இதில் அந்த பரிசை யமுனா மறுத்த போது யமுனா மேலிருந்த மதிப்பு அதிகமானது.

ஆனால் அடுத்து யமுனா கங்காவை பார்த்தது, பின் அதை தொடர்ந்து தன் அண்ணனும் கங்காவை பார்த்து பார்வையாலேயே கெஞ்சியது, அதன்பின் பரிசை வாங்க சொல்லி கங்கா சொன்னது இதெல்லாம் பார்த்த போது, என்னவோ இளங்கோ மட்டுமே தன் அண்ணனுக்கு இங்கு தெரிந்தவனாய் இருப்பான் என்றோ, இல்லை இளங்கோ மூலமாக மற்றவர்களின் அறிமுகம் அவனுக்கு கிடைத்திருக்கும் என்றோ செல்வாவிற்கு நினைக்க தோன்றவில்லை, இப்படி பல சந்தேகங்களோடு செல்வா அந்த இடத்தில் இருக்க, இதில் கங்காவுக்காக துஷ்யந்த் பதறியதை பார்த்த போதே, அவன் சந்தேககங்கள் அதிகமானது. அதுவும் கழுத்தில் தாலியோடு இருந்த கங்காவோடு தன் சகோதரனை எந்தவிதமாக தொடர்புப்படுத்தி பார்ப்பது என்று அவனுக்கு புரியவில்லை.. சிறிது நேரத்திற்கு முன் நல்லதாக நினைத்ததையெல்லாம் இப்போது அப்படி அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கங்கா, துஷ்யந்த் சென்ற திசையை பார்த்தப்படியே பலவித சிந்தனைகளோடு இருந்தவனை அருகில் இருந்த நர்மதா அப்போது தான் கவனித்தாள். “ரிஷப்” என்று அழைத்து என்னவென்று கேட்டாள்.

“ஒன்னுமில்ல மது.. அண்ணன் ஒரு பொண்ணுக்கிட்ட இவ்வளவு உரிமை எடுத்துக்குதா? இப்படி அண்ணனை பார்த்ததேயில்லையா? அதான் எனக்கு கொஞ்சம்  அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது” என்றான்.

கங்காவைப் பற்றி செல்வாவிடம் விளக்கமாக கூற வேண்டுமென்று நர்மதா ஏற்கனவே யோசித்து, எப்படி சொல்லவென்று தெரியாமல் குழம்பினாள்.. இந்த திருமணத்தில் ரிஷப் கங்காவை பார்த்தால், அதை வைத்து கங்கா துஷ்யந்தைப் பற்றி அவனிடம் சொல்ல வேண்டுமென்று அவள் முடிவு செய்திருந்தாள். ஒருவேளை குடும்பத்தோடு கங்காவிடம் சென்று துஷ்யந்தை மணந்துக் கொள்ள அவளிடம் சம்மதம் கேட்டால் ஒத்துக் கொள்வாளோ?? என்று நர்மதாவிற்கு ஒரு யோசனை இருந்தது. துஷ்யந்தின் குடும்பம் தன்னை மருமகளாக ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து கூட அவள் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாம்.. அதனால் ரிஷப் இன் உதவியோடு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று நர்மதா நினைத்தாள். அதனாலேயே கங்காவைப் பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள். இப்போது இந்த சம்பவம் கூட, அவர்களைப் பற்றி ரிஷப்பிடம் பேச இன்னும் எளிதாக இருக்கும் என்று இந்த சமயம் மனதில் நினைத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.