(Reading time: 27 - 54 minutes)

கோவிலை விட்டு வெளியே வந்ததும் அவள் கைகளை பிடித்திருந்த துஷ்யந்தின் கைகளை கோபமாக உதறினாள் கங்கா.. அவன் என்ன என்று பார்க்க,

“உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? ஏன் இப்படி எல்லோருக்கும் முன்னாடி சீன் க்ரியேட் பண்றீங்க? எல்லோரும் நம்மல பத்தி என்ன நினைப்பாங்க..??” என்று கோபத்தில் பொங்கினாள்.

அவனோ அதற்கெல்லாம அசையாமல், “என்ன நினைப்பாங்க..?? உன் மேல நான் ரொம்ப அன்பும் நேசமும் வச்சிருப்பேன்னு நினைப்பாங்க.. உன் மேல எனக்கு அக்கறையிருக்கின்னு நினைப்பாங்க.. அதான் நான் உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறதுக்கு எல்லோரும் அமைதியா ஒத்துக்கிட்டாங்க.. அதனால கோபப்படாம அமைதியா வா” என்று திரும்ப அவள் கைகளை பதமாய் பிடித்தப்படி கார் இருந்த இடத்திற்கு சென்று அவளை முன் இருக்கையில் உட்கார வைத்து, பின் அவனும் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து வண்டியை இயக்கினான்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றான்.. சூடுப்பட்ட காயத்திற்கான சிகிச்சை முடிந்ததும், திரும்ப காரில் அவளை உட்கார வைத்தவன், மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு உணவகத்தில் அவளுக்கு காலை உணவை வாங்கியவன், அவளை அவளது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். சூடுப்பட்டதால் ஏற்பட்ட வலியும், ஊசியில் ஏற்றிய மருந்தின் தாக்கமும் அவன் காரை இயக்கியதும் அவள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். அவன் திரும்ப கோவிலுக்கு தான் கூட்டிக் கொண்டு செல்வான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்ததில் கோபப்பட்டாள்.

“இந்த சூடுப்பட்ட காயத்தோட அங்க போய் என்ன செய்வ? அவங்களே சாப்பிட்டதும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க.. அதான் நேரா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதா நான் அவங்களுக்கு சொல்லிட்டேன்.. அதனால நீ சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என்றவன், வாங்கி வந்திருந்த உணவை தட்டில் வைத்து எடுத்து வந்தான்..

இப்போது எப்படி சாப்பிடுவது? விரல்கள் அனைத்தும் சூட்டுப்பட்ட காயம் இருப்பதால், ஸ்பூனால் கூட சாப்பிட முடியாது என்று நினைத்தவள், “நான் இப்போ எப்படி சாப்பிடுவது?” என்று அவனிடம் கோபமாக கேட்டாள்.

“இதோ இப்படித்தான்..” என்று இட்லியை பிய்த்து ஊட்டுவதற்கு தயாரானான்.

அவன் ஊட்டுவதா? என்று நினைத்தவள், “இதுக்கு தான் என்னை அங்க கூட்டிக்கிட்டு போயிருந்தா, வாணிம்மா இதெல்லாம் பார்த்துப்பாங்க.. இல்ல ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வந்திருக்கலாம்” என்றவளுக்கோ, அதை மட்டும் கையால் பிடித்து குடிக்க முடியுமா? அதுவும் அவன் தான் குடிப்பாட்ட வேண்டும், இருந்தும் ஒரு ஸ்ட்ரா வைத்தாவது கொஞ்சம் தள்ளி வைத்து குடிப்பாட்டலாம், ஆனால் இட்லியை அவன் தானே ஊட்ட வேண்டும் என்று யோசித்தப்படி அமர்ந்திருந்தாள்.

“இப்போ நான் ஊட்டினா என்ன? எனக்கு இதுபோல எத்தனை முறை நீ ஊட்டியிருப்ப? நான் அப்படி ஊட்டக் கூடாதா? உனக்கு இப்படியெல்லாம் செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதுல சந்தோஷம் தான்..” என்றவன், அவளுக்கு ஊட்டிவிட, அவளும் வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். முழுவதுமாக அவன் சாப்பாடு ஊட்டி முடிக்கும் போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டது.. அவன் என்னவென்று கேட்க, அவள் ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

“எதுக்கு இப்போ அழுகை, ஒருவேளை நான் ஊட்டி விட்டது பிடிக்கலையா?” என்று திரும்ப அவன் கேட்டதும்,

“அப்பா ஞாபகம் வந்துடுச்சு..” என்று கூறினாள்.

“அப்பா ஞாபகமா?”

“ஆமாம்.. நானும் யமுனாவும் சின்னப் பிள்ளைங்களா இருந்தப்ப, அப்பா வேலையிலிருந்து வீட்டுக்கு வர லேட்டாகும், அதுவரைக்கும் நாங்க பசியோட இருக்கக் கூடாதுன்னு அம்மா எங்களுக்கு சாப்பாடு கொடுத்து படுக்க வச்சிடுவாங்க.. ஆனாலும் அப்பா வர வரை நாங்க முழிச்சிக்கிட்டு இருப்போம்.. அப்பா வந்ததும் அவர் சாப்பிடும்போது கூட வந்து உக்கார்ந்துப்போம்.. அவ்வளவு நேரம் முழிச்சிருக்கிறதால, எங்களுக்கு பசிக்கும்னு அவரோட சாப்பாடை எடுத்து எங்களுக்கு ஊட்டி விடுவாரு.. அம்மா திட்டமா தான் சாப்பாடு செஞ்சு வச்சிருப்பாங்க.. பசங்க சாப்டாங்க நீங்க சாப்பிடுங்கன்னு சொன்னாலும் அப்பா கேக்க மாட்டாரு.. எங்க ரெண்டுப்பேருக்கும் ஊட்டி விட்டிட்டு மீதி இருப்பதை தான் அம்மாவும் அப்பாவும் சாப்டுவாங்க.. இப்படி தினமும் நடக்கும், அம்மாவும் அதுல இருந்து கொஞ்சம் அதிகமா சாப்பாடு செஞ்சு வச்சிடுவாங்க.. இப்போ நீங்க ஊட்டினதும் அதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துடுச்சு..” என்று அவள் சொன்ன போது,

அவள் இயல்பாக தன் மனம் திறந்து அவனிடம் பேசியதை கேட்ட துஷ்யந்தோ, “இவளிடம் ஆரம்பத்திலிருந்தே இப்படி அணுகியிருக்க வேண்டுமோ? இவளை விட்டு விலகியிருந்தது தவறோ? என்று நினைத்தான்.. பின், “இல்லையில்லை.. ஆரம்பத்தில் இப்படி இவளிடம் உரிமை எடுத்திருந்தால், அதை இவள் தவறாக நினைத்திருப்பாள்.. இப்போதோ இத்தனை வருடத்தில் தன் மேல் இவளுக்கு ஒரு புரிதல் வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

“சரி.. இப்போ மாத்திரை போட்டுட்டு, கையில டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை தடவனும்” என்றவன், அப்போது தான் வாசலில் நின்றிருந்த வாணியை கவனித்தான். அதே நேரம் கங்காவும் வாணியை பார்த்துவிட்டாள்.

“வாணிம்மா.. என்ன நீங்களும் வந்துட்டீங்க? யமுனா கூட வீட்டுக்குப் போகலையா?” என்று கங்கா கேட்க,

“நர்மதாவும் இளங்கோவோட அண்ணியும் எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், நீங்க கங்கா கூட இருந்துட்டு மதியத்துக்கு மேல ரெண்டுப்பேரும் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி என்னை அனுப்பிச்சிட்டாங்க.. இதுல ரம்யாவோட அண்ணன் வேற ஒரு இடத்துக்கு போட்டோ பிடிக்க போகனும்னு சொல்லவே, அவ தனியா போகனுமேன்னு நானும் அவளோட கிளம்பிட்டேன். இளங்கோ தான் ஆட்டோ ஏத்தி அனுப்பிவிட்டான்.. ரம்யாவை அவ வீட்ல விட்டுட்டு நான் இங்க வரேன்” என்றார் அவர்,

“வாணிம்மா சொன்ன மாதிரி அதான் நர்மதாவும் இளங்கோவோட அண்ணியும் இருக்காங்கல்ல, நீ ரெஸ்ட் எடுத்துட்டு மதியத்துக்கு மேல போ” என்றவன், அவளுக்கு மாத்திரையை கொடுத்து, வாணி இருந்தாலும் அவனே மருந்தையும் தடவி விட்டான்.. வாணியும் அதை மகிழ்ச்சியோடு பார்த்தப்படி நின்றிருந்தார். மறுப்பு சொன்னாலும் அவன் கேட்க போவதில்லை என்பதால், கங்காவும் அமைதியாகி விட்டாள். பின் வாணியிடம் கங்காவை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அவன் அலுவலகம் கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.