(Reading time: 27 - 54 minutes)

திருமணத்திற்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். இளங்கோவின் கல்லூரி தோழர்கள் சிலர், பதிப்பகத்தில் வேலை பார்ப்பவர்கள், யமுனாவின் விடுதி மற்றும் பள்ளியில் வேலை செய்யும் தோழிகள் இவர்களை மட்டுமே அழைத்திருந்தார்கள், அதில் ஓரளவுக்கு எதிர்பார்த்தவர்களெல்லாம் வந்துவிட்டனர்.. இளங்கோ மணமேடையில் உட்கார்ந்திருக்க ஐயர் சடங்குகளை ஆரம்பித்திருந்தார். இன்னும் துஷ்யந்தும், செல்வாவும் வரவில்லை என்று கங்காவும் நர்மதாவும் தவிப்போடு நின்றிருந்தனர். அவர்களை அதிக நேரம் தவிர்க்கவிடாமல் இருவரும் சிறிது நேரத்திலேயே திருமணத்திற்கு வந்தார்கள்.

வந்தவர்கள் இளங்கோவிற்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை சொன்னதும், அங்கே ரம்யா, வாணியுடன் நின்றிருந்த நர்மதாவின் அருகில் போய் செல்வா நின்றுக் கொண்டான். துஷ்யந்தோ, இளங்கோவின் தந்தை மற்றும் அவன் அண்ணன் அண்ணியுடன் நின்றிருந்த கங்காவின் அருகில் நின்றான்..

அவன் திடிரென்று தன் அருகே வந்து நிற்கவும் கங்காவிற்கு ஒரு மாதிரி இருந்தது.. யாராவது அதைப் பார்த்து ஏதும் நினைப்பார்களோ  என்று சுற்றி அனைவரையும் ஒருப் பார்வை பார்க்க, அது ஒரு தற்செயல் நிகழ்வு போல் யாரும் அதை கண்டுக் கொள்ளாமல் இருந்தனர். அதனால் அவளும் அவனை விட்டு விலகிச் செல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

ஐயர் மணப்பெண்ணை அழைத்து வரச் சொல்லி சொன்னதும், அங்கே யமுனாவோடு இருந்த தோழிகள் அவளை அழைத்து வந்தனர். மணமேடையை சுற்றி வந்து இளங்கோவின் அருகில் அமர்ந்தவள், அய்யர் சொன்னதை கேட்டு அனைவருக்கும் வணக்கம் வைத்த போது தான், தன் சகோதரியின் அருகில் நின்றிருந்த துஷ்யந்தை கவனித்தாள். அப்போது தான், இதுவரை அவனை எங்கேயோ பார்த்திருக்கோமே என்ற கேள்விக்கான விடை அவளுக்கு கிடைத்தது.

நர்மதா திருமணத்தின் போதே துஷ்யந்தை தெரியும் என்றாலும், தன் சகோதரிக்கும் துஷ்யந்திற்குமான சம்மந்தத்தை பற்றி அறிந்துக் கொண்ட பின், இந்த மூன்று மாதத்தில் இளங்கோவோடு தான் துஷ்யந்தை அவள் இரண்டு முறை பார்த்திருக்கிறாள்.. அதே போல் இந்த மூன்று மாதத்தில் துஷ்யந்தைப் பற்றி தன் சகோதரியிடம் அவள் பேசியதில்லை.. அவனைப் பற்றி பேசி அவளுக்கு சங்கடத்தை கொடுக்க கூடாதென்று அமைதியாக இருந்தவளுக்கு,

 இன்று தன் சகோதரியின் அருகில் நின்றிருந்த துஷ்யந்தை பார்த்ததும் தான், இதே போல் தன் சகோதரியுடன் அவன் ஜோடியாக நின்றிருந்த அந்த நாளை நினைவு கூர்ந்தாள். அப்போது இவன் தான் தன் சகோதரியின் கணவன், என்று நினைத்து மகிழ்ச்சியடைந்ததையும் நினைவு கூர்ந்தாள். அப்போது அவள் நினைப்பை கங்கா பொய் என்று சொல்லியிருந்தாள். ஆனால் இன்று இருவரையும் ஜோடியாக பார்த்ததும் அன்று புரியாத பலவும் இன்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

யமுனா தன்னையும் துஷ்யந்தையும் தான் கவனிக்கிறாள் என்று அறிந்த கங்கா, சாதாரணமாக வாணியிடம் ஏதோ கேட்பது போல் அவர் அருகில் போய் நின்று கொண்டாள். அதையும் கவனித்த யமுனாவிற்கு, அவளது சந்தேகம் இன்னும் வலுப்பெற்றது.

அதிலிருந்தே மனதில் நிறைய கேள்விகளும் குழப்பங்களும் சூழ்ந்து கொள்ள, யமுனாவின் முகத்தில் அது நன்றாக பிரதிபலித்தது.. அதை கவனித்த இளங்கோ, அவள் கைகளை பிடிக்கவும், அவள் திரும்பி பார்க்க, என்ன என்று பார்வையாலேயே அவளிடம் கேட்டான்.. அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைக்க, தனிமையில் அதைப்பற்றி கேட்டுக் கொள்ளலாம் என்று அவன் அமைதியாகிவிட்டான். பின் ஐயர் சொன்ன சடங்குகளை செய்வதில் அவர்கள் கவனம் போக, குறித்த முகூர்த்த நேரத்தில் யமுனாவின் கழுத்தில் தாலியை கட்டி அவளை தன் இணையாக இளங்கோ ஏற்றுக் கொண்டான்.

திருமண சடங்குகள் எல்லாம் முடிந்ததும், வந்திருந்தவர்கள் எல்லாம் பரிசுப் பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர், கோவிலுக்கு அருகில் உள்ள உணவகத்தில் அவர்கள் காலை உணவை ஏற்பாடு செய்திருக்க, அந்த பொறுப்பை இளங்கோவின் அண்ணன் கவனித்துக் கொண்டார்.. ஓரளவுக்கு வெளியாட்கள் எல்லாம் சென்றிருக்க,  செல்வாவும் நர்மதாவும் மணமக்களுக்கு தங்கள் பரிசை அளித்தனர்,

யமுனாவிற்கு தங்கச் சங்கிலியும், இளங்கோவிற்கு தங்க மோதிரமும் பரிசாக கொண்டு வந்திருந்தார்கள்.. அதை அவர்கள் கையாலேயே மணமக்களுக்கு அணிவித்தனர்.. நர்மதா யமுனாவிற்கு சங்கிலியை மாட்ட, செல்வா இளங்கோவிற்கு மோதிரத்தை மாட்டினான்.எதுக்கு இதெல்லாம் இப்போ என்ற இருவரின் மறுப்பையும் மற்ற இருவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.. அதற்கு மேல் யமுனாவிற்கும் இளங்கோவிற்கும் அதை மறுக்கவும் தோன்றவில்லை.

அடுத்து துஷ்யந்த் இளங்கோவிற்காக வாங்கி வந்திருந்த தங்க ப்ரேஸ்லெட்டை அவன் கையாலேயே மாட்டிவிட்டான். செல்வாவிடம் மறுத்தது போல் துஷ்யந்திடம் மறுப்பு சொல்லாமல் அவன் பரிசை மகிழ்ச்சியோடு இளங்கோ ஏற்றுக் கொண்டான். அடுத்து ஒரு நகைப்பெட்டியை யமுனாவிற்கு பரிசளித்தான் துஷ்யந்த், அந்த நகைப்பெட்டியின் அளவைப் பார்த்தாலே அதன் மதிப்பு அதிகம் இருக்கும் என்று யமுனாவிற்கு தெரிந்தது. அதை வாங்க அவள் தயங்கினாள்.

“எதுக்கு இதெல்லாம்.. நீங்க கல்யாணத்திற்கு வந்ததே சந்தோஷம்..” என்று அதை நாசுக்காக மறுக்கப் பார்த்தாள்.

ஆனால் துஷ்யந்திற்கு அது கஷ்டமாக இருந்தது.. ஒருவேளை இளங்கோ ஏதாவது சொல்வான் என்று நினைத்து அவள் வாங்க மறுக்கிறாளோ என்று  அவன் இளங்கோவை பார்க்க, இளங்கோவிற்கு துஷ்யந்தின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது. என்றும் தன் சகோதரனை போலவே தன்னை பாவிக்கும் துஷ்யந்தை வருத்தப்பட வைப்பதில் அவனுக்கு விருப்பமில்லை, அதனால் தான் எந்த மறுப்பும் சொல்லாமல், துஷ்யந்தின் பரிசை ஏற்றுக் கொண்டான். அதை மனதில் கொண்டே, “வாங்கிக்கோ யமுனா” என்று சொன்னான்.. ஆனால் அப்போதும் அதை வாங்காமல் யமுனா கங்காவை பார்த்தாள்.

பரிசை வாங்க தயங்கிய யமுனாவை பார்த்துக் கொண்டிருந்த செல்வா, அவள் தன் சகோதரியை பார்த்ததையும் கவனித்தான். உடனே, “எதுக்கு தயங்கிறீங்க யமுனா.. இது உங்க மேரேஜ்க்கு அண்ணா கொடுக்கும் கிஃப்ட்.. அதை ஏன் வாங்க மறுக்கிறீங்க.. உங்க அக்காவ ஏன் பார்க்கிறீங்க.. அவங்க மறுக்கப் போறாங்களா என்ன?” என்றவன்,

“அப்படித்தானே கங்கா..” என்று கங்காவை பார்த்து கேட்டான்.

துஷ்யந்தும், “நான் உன் தங்கைக்கு கிஃப்ட் கொடுக்க கூடாதா? வாங்கிக்க சொல்லு என்பது போல் பார்வையாலேயே கேட்க,

இதற்கு மேல் மௌனமாக இருந்தால், அது நன்றாக இருக்காது என்பதை உணர்ந்த கங்கா, “வாங்கிக்கோ” என்று யமுனாவிடம் கூற, யமுனாவும் அந்த பரிசை வாங்கிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.