(Reading time: 27 - 54 minutes)

வர்களுக்கென ஒதுக்கியிருந்த அந்த முதலிரவு அறையில் கையில் பால் செம்போடு யமுனா உள்ளே நுழைந்தாள்.. இளங்கோ ஏற்கனவே அறையில் இருந்தான். அவனிடம் பால் செம்பை அவள் நீட்ட, அதை வாங்கி கட்டிலுக்கு அருகில் இருந்த மேசை மேல் வைத்தவன், அவளை தன் அருகே உட்கார வைத்தான்.

“இப்போ சொல்லு.. உன்னோட மனசுல என்ன விஷயம் ஓடுக்கிட்டு இருக்கு?” அவளை பார்த்து அவன் கேட்டான்.

“விஷயமா அப்படில்லாம் ஒன்னுமில்லையே” என்று அவள் சமாளிக்க பார்த்தாள், ஆனால் அவன் விடுவதாக இல்லை..

“என்னோட யம்ஸ் பத்தி எனக்கு தெரியாதா? கல்யாணப் பொண்ணை கூட்டிட்டு வாங்கன்னு ஐயர் சொன்னதும், முகத்துல வெக்கமும் சிரிப்புமா வந்த நீ, கொஞ்ச நேரத்துலேயே எதையோ நினைச்சு கவலைப்பட ஆரம்பிச்சிட்டியே.. உன்னோட முகத்துல எல்லாமே அப்படியே பிரதிபலிக்குதே” என்று சொன்னதும்,

“அக்காவை நினைச்சு தான் அப்படியிருந்தேன் இளன்” என்று உண்மையை கூறினாள்.

“கங்காவை நினைச்சா, நான் தான் முன்னாடியே சொன்னேனே, உன்னோட கல்யாணம் தான் அவளை தெளிவா யோசிக்க வைக்க உதவும்னு அப்புறம் என்ன யமுனா”

“அதில்ல இளன்.. அக்காவையும் துஷ்யந்தையும் ஒன்னா பார்த்ததும் ஏதேதோ குழப்பம்”

“என்ன?”

“துஷ்யந்தை இதுக்கு முன்ன பார்க்கும் போதெல்லாம் எங்கேயோ பார்த்ததா நினைப்பேன், ஆனா ஞாபகத்துக்கு வரல.. ஆனா இன்னிக்கு அக்காவோட நின்னத பார்த்தப்ப தான், இதே போல அக்காவோட துஷ்யந்தை பார்த்தது ஞாபகத்துக்கு வந்துச்சு, அப்போ வாணிம்மாவும் கூட இருந்தாங்க.. அப்போ துஷ்யந்த் கொஞ்சம் ஒல்லியா இருந்ததால இப்போ அடையாளம் கண்டுப்பிடிக்க முடியல.. அப்போ ரெண்டுப்பேரையும் ஜோடியா பார்த்து அவர் தான் அக்காவோட புருஷன், என்னோட மாமான்னு நினைச்சேன்.. ஆனா அப்போ அக்கா அப்படியில்லைன்னு சொல்லிட்டா, அதெல்லாம் இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வந்துடுச்சு..”

“சரி அதுக்கு ஏன் வருத்தம்?”

“இளன்.. உங்களுக்கு துஷ்யந்துக்கு வாணிம்மாக்கு எல்லோருக்கும் அக்காவை ஆறு வருஷமா தான் தெரியும்.. ஆனா நான் பிறந்ததுல இருந்து எனக்கு அக்காவை  தெரியும்.. அப்பா, அம்மா இறந்ததுக்கு அப்புறம் நாங்க ரெண்டுப்பேரும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை, அத்தை இருந்தும் இல்லாத மாதிரி தான், எனக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ அக்கா என்னை விட்டு துளி கூட பிரிஞ்சதில்ல, அப்படி இருக்கப்ப அவ வாழ்க்கையில காதல், கல்யாணம் இதெல்லாம் நடந்திருந்தா எனக்கு அது தெரியாம இருக்காது.. என்னோட ஆபரேஷன்க்காக என்னை ஹாஸ்பிட்டல் சேர்த்தப்ப தான், நான் அக்கா கழுத்தில் தாலியை பார்த்தேன்.. ஆனா அந்த சூழ்நிலை என்னால அவக்கிட்ட ஒன்னும் கேக்க முடியல.. ஆனா எனக்கு சரியானதும் கேட்டப்போ அவக்கிட்ட அதுக்கு பதில் இல்லை.. ஆனா ஆரம்பத்துல இருந்தே என்னோட ஆபரேஷன் செலவுக்காக தான் அவ இந்த கல்யாணம் செய்துக்கிட்டாளோன்னு தோனும்.. என்னோட ஆபரேஷன் டைம்ல தான அக்கா, துஷ்யந்தோட இருந்தா, அப்போ அவளுக்கு துஷ்யந்தோட தான் கல்யாணம் நடந்திருக்குமா இளன்..”

“என்ன சொல்ற யமுனா.. துஷ்யந்த் தான் கங்காவோட கணவனா? அப்போ துஷ்யந்த் ஏன் கங்காவை பிரிஞ்சு இருக்கனும்? அவ அவரோட மனைவின்னா, அவளை இந்நேரம் கொண்டாடியிருப்பாரே, அவளை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி ஏன் கெஞ்சனும்?

“துஷ்யந்த் குன்னூர்ல இருந்தப்ப, அவர் எப்படியிருந்தாருன்னு நர்மதா என்கிட்ட சொன்னா, அவர் அப்போ கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருந்திருக்காரு.. போதை பழக்கத்தோட மனநோயும் அவருக்கு இருந்திருக்கு, அப்போ அவர் என்ன பண்றாரு என்ன பேசறார்னு அவருக்கே தெரியாதாம்.. அப்போ அக்காக்கூட கல்யாணம் நடந்திருந்தா?”

“நீ சொல்றது சரி தான்.. ஆனா இப்பவும் துஷ்யந்த் கங்காவை ஞாபகம் வச்சிருக்காறே?”

“ஒருவேளை அவர் கல்யாணம் நடந்தது மட்டும் அவருக்கு ஞாபகமில்லாம இருந்தா.. அப்புறமா தானே அவர் சரியானாரு..”

“சரி.. இருந்தும் துஷ்யந்த்க்கு நடந்த கல்யாணத்தை கங்கா ஏன் சொல்லாம இருக்கனும், அதை ஏன் அவ மறைக்கனும்?” என்று கேட்டவனுக்கு, அன்று அலைபேசி வாங்கிக் கொடுத்த போது, கங்கா சொன்னது அவன் ஞாபகத்திற்கு வந்தது.. “நானா தான் என்னோட கணவனை விட்டு வந்துட்டேன்.. இப்போக் கூட மனைவிங்கிற உரிமையோட போய் நின்னா, அவர் என்னை கொண்டாடுவார் என்று  கங்கா சொன்னது துஷ்யந்தை தானா? என்று சந்தேகித்தான்.

“தெரியல இளன்… அக்கா இதை ஏன் எல்லார்கிட்டேயும் மறைக்கிறான்னு தெரியல.. கண்டிப்பா அவ தப்பானவளா இருப்பான்னு தோனல.. அவ கல்யாணத்தை பத்தி வெளிய சொல்றதுல அவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல.. எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டான்னு தான் தோனுது.. யார்க்கிட்ட இதப்பத்தி கேக்கறதுன்னும் தெரியல.. இப்படி அக்கா வாழ்க்கையில இதெல்லாம் நடந்திருக்குமோன்னு நினைக்கிறப்ப, அதை சரி செய்ய முடியாம, நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேனேன்னு திரும்ப குற்ற உணர்வா இருக்கு இளன்..”

“இங்கப்பாரு.. என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது.. ஆனா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கறது அவ பொறுப்பில்லையா? அதை அவ சரியா செய்ய வேண்டாமா? அதான் இந்த கல்யாணம் உடனடியா நடக்க நான் ஒத்துக்கிட்டேன், உன்னையும் ஒத்துக்க வச்சேன்.. இங்கப்பாரு எனக்கும் கங்கா வாழ்க்கை பத்தி அக்கறை இருக்கு.. இப்போ நீ சொன்ன மாதிரி நடந்திருக்குமோன்னு எனக்கும் தோனுது.. இதுக்கான விடை கங்கா கொடுக்கலன்னாலும், இதுக்கு இன்னொருத்தர் கண்டிப்பா விடை சொல்லுவாங்க..”

“யாரது இளன்”

“வாணிம்மா.. துஷ்யந்த், கங்காவோட அந்த நேரம் இருந்தது வாணிம்மா தான்.. அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்.. அவங்க நமக்கு என்ன நடந்ததுன்னு சொல்வாங்க..”

“அப்போ நாளைக்கு கேப்போமா?”

“இன்னிக்கு தான் நமக்கு கல்யாணம் நடந்துச்சு.. நாளைக்கே கங்கா பத்தி கேட்டா, புதுசா கல்யாணமானவங்க உங்களை பத்தி மட்டும் யோசிங்கன்னு சொல்லிடுவாங்க.. நாம விருந்துக்காக ஊருக்கு போயிட்டு வந்ததும், நானே வாணிம்மா கிட்ட பேசற விதத்துல பேசி எல்லா உண்மையும் தெரிஞ்சிக்கிறேன்.. அப்புறம் கங்கா வாழ்க்கையை சரிப் பண்ணிடலாம்.. அதனால எதையும் போட்டு குழப்பிக்காம தூங்கு” என்றான். அதற்கு அவள் வியப்பாக பார்க்க,

“இங்கப்பாரு.. குழப்பத்தோட நம்ம வாழ்க்கையை இன்னிக்கு ஆரம்பிக்க வேண்டாம்.. கங்கா பத்தி தெரிஞ்சு அதை சரி செஞ்சதும், நாம சந்தோஷமா நம்ம வாழ்க்கையை தொடங்குவோம்..”

“சாரி இளன்.. நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் இல்ல.. முதலில் காதல் இருந்தும் சொல்லாம கஷ்டப்படுத்தினேன்.. இப்போ இப்படி.. இந்த நேரம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காம என்னையும் வருத்தி, உங்களையும் கஷ்டப்படுத்துறேன்..”

“இங்கபாரு இன்னிக்கு ஒரு நாளில் நம்ம வாழ்க்கை முடியப் போறதில்ல, நாம ஆயுசுக்கும் ஒன்னா இருக்கப் போறோம்.. அதுல வெறும் உடல் சேர்றது மட்டும் சந்தோஷமில்ல.. நீ என் கூட இருக்கப் போறதும், மனசு ஒத்து நாம காலம் முழுக்க வாழப் போறதும் தான் நிரந்தர சந்தோஷம்.. அதனால எதையும் போட்டு குழப்பிக்காம நிம்மதியா தூங்கு” என்றவன், மேசை மேல் இருந்த பாலை எடுத்து அவளுக்கு குடிக்க கொடுத்தான், பின் நினைவு வந்தவனாக, “பாதி பால் நான் குடிக்கனுமில்ல..” என்று குடித்துவிட்டு கொடுத்தான். மீதிப் பாலை வாங்கி பருகியவள், அவன் தோலில் சாய்ந்து கொண்டாள்.

“கொஞ்ச நேரம் இப்படியே இருப்போம் இளன்” என்றாள். அவனும் சம்மதமாக அவன் தோளில் சாய்ந்திருந்த அவள் தலை மீது தலை வைத்தப்படி அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டான். இருவரும் கண்மூடி அந்த நேரத்தை ரசித்தார்கள்.

அனைவருக்கு அட்வான்ஸ் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 29

Episode # 31

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.