(Reading time: 39 - 78 minutes)

29. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

துஷ்யந்த் குன்னூரிலிருந்து வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது..  இந்த இரண்டு நாட்களும், நர்மதா துஷ்யந்தை கவனித்துக் கொண்டிருந்தாள். அவனோடு திருமணம் என்ற பேச்சு வந்தபோது கூட, அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவள் நினைத்தது இல்லை.. ஆனால் இப்போது அவன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவளுக்கு இருந்தது..

திருமணம் ஆகாமலேயே ஒருப் பெண்ணோடு அவன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான், என்று அவனைப் பற்றி கேள்விப்பட்ட செய்தியில், அவனை நல்லவனாக அவளுக்கு நினைக்க தோன்றவில்லை.. ஆனால் அவனை கவனித்து பார்த்தால், அவனை தவறானவனாக நினைக்கவும் முடியவில்லை.. அவன் ஒழுக்கமில்லாதவன் என்றால், அவன் நடவடிக்கையிலோ, இல்லை அவன் பேசும்விதத்திலோ, இல்லை அவன் பார்க்கும் பார்வையிலோ அதை கண்டுக் கொள்ள முடியும்..

ஆனால் துஷ்யந்திடம் அப்படி எந்த மாற்றத்தையும் அவளால் காண முடியவில்லை. ஒருவேளை அந்த பெண் மீது அவனுக்கு எல்லையில்லா காதல் என்றால், அவளை திருமணம் செய்ய என்ன தடையாக இருக்கும்? அத்தை சொன்னது போல், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என்று துஷ்யந்த் சொன்னால், அதை யாரும் மறுக்கப் போவதில்லை.. அப்படியிருக்க, துஷ்யந்த் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்??

அந்த பெண்ணும் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்.. துஷ்யந்தை விட்டு கொடுக்க அவள் ஏன் தயாராக இருக்க வேண்டும்? உண்மையாகவே அவள் கடந்தகால வாழ்க்கை அத்தனை கசப்பானதா? துஷ்யந்தின் உண்மையான காதல் கூட அவ மனக் கசப்புகளுக்கு மருந்தாக அமையவில்லையா? இல்லை, இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அவளை மனதார ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஒதுங்கிக் கொள்ள நினைக்கிறாளா? இல்லை காதல் என்ற பெயரில் துஷ்யந்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாளா? அவள் நோக்கம் துஷ்யந்தின் பணத்தை குறித்து தானா?? இப்படி பல கேள்விகள் நர்மதாவின் மனதை குடைந்துக் கொண்டிருந்தது.. இதற்கெல்லாம் விடை காண, கங்காவை நேரில் சந்தித்தால் என்ன? என்று அவளுக்கு தோன்றியது..

அத்தையும் விஜி அம்மாவும் கங்கா துஷ்யந்தை விட்டு விலக வேண்டும் என்பதை பற்றி மட்டுமே அவளிடம் பேசியிருக்கின்றனர்.. அதை தவிர்த்து, துஷ்யந்தை குறித்து அவள் முடிவு என்ன? என்பதை நேராக கங்காவிடமே பேசினால் என்ன? என்று நினைத்தாள். எனவே கங்காவின் இருப்பிடம் பற்றி கோமதியிடம் விசாரித்தாள்.

“எதுக்கும்மா அவ விலாசம்.. அதெல்லாம் வேண்டாம், நீயெல்லாம் அங்கப் போகக் கூடாது..”

“இல்லை அத்தை.. கங்காவின் மனநிலை என்ன? அவங்க அண்ணாமலை அப்பா சொன்ன மாதிரி உண்மையிலேயே தப்பானவங்களா? இல்லை சூழ்நிலை அவங்களை தப்பா காட்டுதா? உங்கக்கிட்ட அவங்க இதெல்லாம் பேச முடியாம இருக்கலாம்.. ஒரு நட்பு ரீதியாக நான் போய் பேசறேன்.. அப்போ தான் துஷ்யந்த் மாமா விஷயத்துல நாம ஏதாச்சும் முடிவெடுக்க முடியும்” என்று சொல்ல, மகனை நினைத்துப் பார்த்தபோது, நர்மதா சொல்வது சரியென்று தோன்ற,  கோமதி அதற்கு சம்மதித்தார். பின்

கங்காவின் முகவரி சொல்லி,

“அவள் ஒரு தையல் இன்ஸ்டிட்யூட் வச்சிருக்கா.. அதை சொல்லி நீ விசாரி” என்று கோமதி சொன்னபோது, நர்மதாவிற்கு அன்று ஆட்டோவில் பார்த்த கங்காவின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. அன்று சிறிதுநேரமே பார்த்திருந்தாலும், கங்காவின் முகமும், அவள் பேசியதும் இன்றும் நர்மதாவிற்கு நன்றாகவே நினைவில் இருந்தது. கோமதியும் விஜியும் அன்று கங்காவை பற்றி பேசிக் கொண்டிருந்த போதே, ஏனோ அன்று பார்த்த கங்கா தான் நர்மதாவிற்கு நினைவில் வந்தாள்.. இன்றும் அதுபோல தான், அவள் முகமே நினைவுக்கு வந்தது.. அதுமட்டுமில்லை, கோமதி சொன்ன கங்காவை பற்றிய குறிப்பும் அப்படியே பொருந்தி வந்தது..

அவள் சந்திக்க செல்வது ஒருவேளை அதே கங்காவை தானா? என்று நர்மதாவின் மனதில் கேள்வி பிறந்தது.. அப்படி மட்டும் அவள் சந்திக்க செல்வது அதே கங்கா என்றால், கண்டிப்பாக கங்கா தவறானவளாக இருக்க முடியாது என்பது மட்டும் அவளுக்கு உறுதியாக தெரிந்தது.. ஆனால் உண்மையிலேயே அதே கங்காவை தான் அவள் பார்க்கப் போகிறாள், என்பதை அறியாத அவள், கங்காவை சந்திக்க செல்வதற்கு முன்னரே அவளைப் பற்றி தவறாக கேள்விப்பட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.