(Reading time: 39 - 78 minutes)

ங்காவின் வீடு இருக்கும் தெருவுக்கு சென்ற நர்மதா, அவளின் வீடு எது என்று தெரியாததால், அங்கே நின்றிருந்த இஸ்திரி வண்டி வைத்து, இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் விசாரிக்க நினைத்து, அந்த வண்டியின் அருகில் சென்றாள்.

“அம்மா.. இங்க டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் வச்சிருக்கும் கங்காவோட வீடு எங்கன்னு தெரியுமா?”

“அதோ அந்த நீல கலர் பெயின்ட் அடிச்சிருக்கே அந்த வீடு தான்.. ஆமாம் என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க..??”

“அது.. அவங்க டெய்லரிங் இன்ஸ்டிட்யூட்ல எனக்கு தெரிஞ்ச பொண்ணை சேர்த்து விடனும்.. அவங்க இன்ஸ்டிட்யூட் இருக்க இடம் எனக்கு தெரியாது.. அதான் இங்க வந்து கேக்கலாம்னு வந்தேன்..”

“ஏம்மா..உனக்கு நல்ல இன்ஸ்ட்டியூட் கிடைக்கலயா?? அந்த பொண்ணுக்கிட்ட தான் கத்துக்கனுமா?”

“ஏம்மா அப்படி சொல்றீங்க.. அவங்க நல்லா கத்துக் கொடுக்க மாட்டாங்களா?”

“அது எனக்கு தெரியாது.. ஆனா அந்த பொண்ணு அவ்வளவா சரியில்லம்மா.. கழுத்துல தாலி இருக்கு.. ஆனா புருஷன் யாருன்னே தெரியாது.. அப்பப்ப அந்த வீட்டுக்கு ஆம்பிளங்க வந்து போவாங்க.. அதுக்கு தான் சொல்றேன்..” என்று அந்த பெண்மணி சொன்னதும், நர்மதாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை..

பொதுவாக இப்படி மறைமுக வாழ்க்கை நடத்துபவர்களை அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், இப்படி தான் அவதூறாக பேசுவார்கள்.. ஆனால் கங்காவை குறித்து மிகவும் மோசமாகவே அந்த இஸ்திரி போடும் பெண் பேசுகிறாள், என்பது புரிந்தது. நேரில் பார்த்தால் கங்கா எப்படிப்பட்டவள் என்று தெரிந்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்தப்படி கங்கா வீட்டின் கதவை தட்டினாள்.

தவு தட்டும் சத்தம் கேட்டு வாணி வந்து கதவை திறந்தார்.. அங்கு நின்றிருந்த நர்மதாவை பார்த்த அவர், “அடடே வாங்கம்மா..” என்று அவளை வரவேற்றார்.. பல வருடங்களாய் அவர்களிடம் வேலை பார்த்த விசுவாசம், நர்மதா எதற்காக இங்கு வந்திருக்கிறாள்..?? இங்கு வர வேண்டிய அவசியம் என்ன? என்பதையெல்லாம் வாணி யோசிக்கவில்லை, அவளை வரவேற்பது மட்டுமே அவருக்கு முக்கியமாக பட்டது.

என்னவென்று தன்னை அறிமுகப்படுத்தி, எப்படி கங்காவிடம் பேசுவது என்று பெரிய குழப்பத்தில் இருந்த நர்மதா, வாணியின் இந்த வரவேற்பில் அதிசயித்தாள்.. தன்னை இவர்களுக்கு தெரியுமா? என்று யோசித்தவள், அதை வாய்மொழியாகவும் வாணியிடம் கேட்டாள்.

“என்னம்மா… உங்களை தெரியாதா? நீங்க நம்ம ரிஷப் தம்பியோட பொண்டாட்டி தானே.. உங்க கல்யாணத்துக்கு நான் வந்தேனேம்மா.. நீங்க பார்த்திருக்க மாட்டீங்க… ஏன்னா, நான் அங்க ஒரு ஓரமா இல்ல உக்கார்ந்திருந்தேன்..”

“ரிஷப் ஐயும் உங்களுக்கு தெரியுமா??”

“என்ன இப்படி கேட்டுடீங்க.. நான் உங்களுக்கு சொந்தமான குன்னூர் எஸ்டேட்ல ரொம்ப வருஷமா வேலை பார்த்தவ… ரிஷப் தம்பிய சின்ன வயசுல பார்த்தது,  அதுக்கப்புறம் உங்க கல்யாணத்துல தான் பார்த்தேன்.. தம்பிக்கு என்ன பார்த்தா, ஞாபகம் இருக்குமான்னு தெரியல.. ஆனா துஷ்யந்த் தம்பிக்கு என்னை நல்ல தெரியும்..”

“குன்னூர் எஸ்டேட்ல வேலை பார்த்தவங்கள கங்காக்கு துணையா இங்கேயே  துஷ்யந்த் தங்க வச்சிருக்காரா? என்று நினைத்தவளுக்கு, அதை நல்லதாய் எடுத்துக் கொள்ள வேண்டுமா? இல்லை குற்றமாய் எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்று தெரியவில்லை.

“என்னம்மா.. அப்படியே நிக்கறீங்க.. இப்படி உக்காருங்கம்மா..” என்று வாணி ஒரு நாற்காலியை எடுத்துப் போட,

“அய்யோ.. என்ன நீங்க, உங்களுக்கு என்னோட அம்மா வயசு இருக்கும்.. நீங்க போய் என்னை அம்மா, வாங்க, போங்கன்னு கூப்ட்றீங்க.. சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க.. என்னோட பேர் தெரியுமில்ல..??”

“தெரியும்.. நர்மதா தானே..” என்றுக் கேட்டவர், முதன்முதலில் கங்கா குன்னூர் எஸ்டேட் பங்களாவிற்கு வந்தபோது, இப்படி தான் வாணி அவளை மரியாதையோடு அழைக்க, அவளும் நர்மதாவை போல, இதே வாக்கியத்தை தான் கூறினாள். இப்போது தன் மகளாகவே அவள் மாறிவிட்டதை நினைத்து மகிழ்ந்தவர், “கோமதி அம்மாவுக்கு இரண்டு மருமகள்களும் ரொம்ப தங்கமா வந்து அமைஞ்சிருக்காங்க..” என்று வாய்விட்டே கூறினார்.

ஆனால் வீட்டை சுற்றி பார்வையிட்டுக் கொண்டிருந்த நர்மதா, வாணி கூறியதை கவனிக்கவில்லை.. அவர் ஏதோ பேசினார் என்பது மட்டுமே அறிந்த அவள், “ஏதாச்சும் சொன்னீங்களாம்மா..” என்றுக் கேட்டாள்.

அப்போது தான், அவர் வாய் தவறி உளறியதை அறிந்தவர், “நல்லவேளை, நாம சொன்னதை இந்த பொண்ணு கவனிக்கல..” என்று மனதில் நினைத்துக் கொண்டு, வெளியிலோ..  “கோமதி அம்மாவுக்கு தங்கமான மருமக கிடைச்சிருக்க..” என்றார், அதன்பின் தான் நர்மதா இங்கு வந்திருப்பதன் காரணம் என்ன? என்ற கேள்வி அவரின் மனதில் உதித்தது..

துஷ்யந்த் போல் ஒரு தொழிலதிபரின் பாதுகாப்பில் இருக்கும் கங்காவின் வீடு ஓரளவுக்கு வசதியானதாக இருக்கும், என்ற கற்பனை நர்மதாவிற்கு இருந்தது.. ஆனால் அவளின் கற்பனையின் பாதி அளவுக்கூட இல்லாமல், மிகவும் எளிமையாக இருந்த அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் அறைக்குள் இருந்த  கங்காவோ, துஷ்யந்த் வந்து விட்டு போனதிலிருந்து அலைபாய்ந்துக் கொண்டிருந்த மனதை திசை திருப்ப, கதை எழுதலாம் என்று உட்கார்ந்தாள்.. ஆனால் மனம் அதிலும் ஈடுபடாமல் அவளை சித்ரவதைக்குள்ளாக்கியது.. பலவித சிந்தனைகளோடு அவள் அமர்ந்திருக்க, அப்போது தான் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பின் வாணி பார்த்துக் கொள்வார், என்று திரும்ப சிந்தனையில் ஆழ்ந்திருந்தவள், பின் தொடர்ந்து பேச்சுக் குரல் கேட்க, அறையை விட்டு வெளியே வந்தாள்.

“நீ எதுக்கு வந்திருக்கன்னு தெரிஞ்சிக்கலாமா ம்மா” என்று வாணி கேட்டதும், என்ன சொல்வதென்று தெரியாமல் நர்மதா முழிக்க, அப்போது தான் அறையிலிருந்து கங்கா வெளியே வர, நர்மதாவும் அங்கே அசைவை பார்த்து கங்காவின் பக்கம் பார்வையை திருப்பினாள்.

“நர்மதா..” அவளின் பேரைச் சொல்லியப்படி கங்கா அவள் அருகில் வந்தாள்.

“கங்கா நீங்களா?” உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை..” ஏற்கனவே சந்தித்த கங்காவை தான் இப்போதும் பார்க்கப் போகிறோமோ? என்று நர்மதா சந்தேகித்திருந்தாலும், உண்மையிலேயே அதே கங்காவை சந்தித்ததில் அவள் ஆச்சர்யப்பட்டாள்.

“நானும் தான் உங்களை இங்க எதிர்பார்க்கல.. உங்களை திரும்ப சந்துச்சதுல ரொம்ப சந்தோஷம்..” என்றவள், வாணியிடம் திரும்பி, “வாணிம்மா.. நர்மதாவுக்கு ஏதாச்சும் சாப்பிட கொடுத்தீங்களா?” என்றுக் கேட்டாள்.

“இன்னும் இல்ல கங்கா..” என்றவர், “உக்காரும்மா.. காபி போட்டு எடுத்துட்டு வரேன்..” என்று சமயலறைக்குச் செல்ல முற்படும்போது, அவரை தடுத்த நர்மதா,

“அய்யோ அதெல்லாம் வேண்டாம் வாணிம்மா.. நான் வரும்போது சாப்பிட்டு தான் வந்தேன்.. எதுக்கு இந்த ஃபார்மாலிடில்லாம்” என்று அவரை தடுத்தாள்.

“அன்னைக்கு அவசரமா இறங்கி போயிட்டீங்க.. கொஞ்சம் நேரமே பேசியிருந்தாலும், என்னை நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..”

“நீங்களும் தான்.. என்னைப் பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சிக்கிட்டீங்க.. ஆமாம் இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க.. என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கங்கா கேட்க, அவள் திரும்ப சங்கடத்தை உணர்ந்தாள். துஷ்யந்தை பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவள் இங்கு வந்திருந்தாள்.. ஆனால் கங்கா தான் அந்த பெண் என்று தெரிந்த பின், அதைப்பற்றி கங்காவிடம் எப்படி பேசுவது? என்று அவள் தயங்க,

“துஷ்யந்த் பத்தி பேசனுமா?” என்று கேட்டு, கங்கா நர்மதாவை அதிர வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.