(Reading time: 39 - 78 minutes)

வர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், அந்த மாலில் உள்ள ஒரு செல்போன் கடையிலிருந்து வெளியே வந்தார்கள் கங்காவும் இளங்கோவும்,

“என்க்கெதுக்கு இப்போ இந்த லேட்டஸ்ட் மொபைல்.. என்கிட்ட இருக்கறதே போதாதா? சொன்னா கேக்கவே மாட்டேங்குற இளங்கோ..”

“நீ வச்சிருக்கிற மொபைல்ல நிறைய ஃபீச்சர்ஸ் இல்ல.. அதுக்கு தான் இந்த மொபைல்..”

“ஆமாம்.. நான் வாட்ஸ் அப், ஃபேஸ் புக்னு எந்த சோஷியல் மீடியாலையும் அக்கவுண்ட் வச்சிக்கறதில்ல.. கேமரால ஒரு போட்டோ கூட எடுத்ததில்ல.. எனக்கெதுக்கு லேட்டஸ்ட் மொபைல்..”

“ஏன் அதெல்லாம் செய்றவங்க மட்டும் தான் மொபைல் வச்சிருக்கனுமா? அதில்லாம இப்போ ஸ்மார்ட் போன்ல நிறைய விஷயம் இருக்கு.. அதிலும் நீ ஒரு ரைட்டர்.. நிறைய விஷயத்தை தெரிஞ்சிக்க இந்த மொபைல் உதவும்.. எங்கப் போனாலும் லாப்டாப் தூக்கிக்கிட்டே சுத்துவியா?”

“சரி அதான் வாங்கிக் கொடுத்துட்டல்ல, இனி எதுக்கு இந்த பேச்சு..”

“ஆமாம் நானே வாங்கிக் கொடுக்க நினைச்சேன்.. கடைசியில நீதானே பணம் கொடுத்த, சரி என்னோட செலவுல ஏதாவது சாப்பிடயாவது வாங்கி தரேன்.. அதோ அந்த ரெஸ்ட்டாரன்ட்க்கு போலாம் வா..” என்று யமுனா, நர்மாதா பேசிக் கொண்டிருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் ஒரு இடம் பார்த்து உட்கார்ந்தார்கள்.. மற்றவர்களை அவர்கள் கவனிக்காததால் யமுனா, நர்மதாவையும் அவர்கள் கவனிக்கவில்லை..

“சரி சொல்லு என்ன பேசனும்?” திடிரென கங்கா கேட்ட கேள்வியில் இளங்கோ விழித்தான்.

“என்ன சொல்லனும்??”

“வேணா வேணான்னு சொல்ல சொல்ல, எனக்கு மொபைல் வாங்கி தரேன்னு கூட்டிட்டு வந்து, இப்போ சாப்பிடலாம்னு இங்க உக்கார்ந்திருக்கோம்னா, என்கிட்ட ஏதோ பேசவா தான் இருக்கும்னு எனக்கு தெரியாதா?? ஏதாவது என்ன? எப்படியோ துஷ்யந்த் வந்து என்கிட்ட பேசனதை பத்தி வாணிம்மா உன்கிட்ட சொல்லியிருப்பாங்க.. என்கிட்ட பேச சொல்லி அனுப்பியிருப்பாங்க.. 6 வருஷமா உங்களை பார்க்கிறேனே எனக்கு தெரியாதா?”

“ரொம்ப நல்லது.. என்னோட நேரத்தை நீ மிச்சம் பண்ணிட்ட, ஆனா அதுக்கு தான் போன் வாங்கி தர கூட்டிட்டு வந்தேன்னு இப்படி சில்லியா நினைச்சிட்டியே” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“நீயே கரெக்டா பாயிண்ட்க்கு வந்ததால அதைப்பத்தியே பேசுவோம்.. ஏன் கங்கா புரிஞ்சிக்க மாட்டேங்குற?? இப்படி இன்னும் எத்தனை நாள் நீ பிடிவாதம் பிடிக்கப் போற? வாணிம்மா சொன்ன மாதிரி துஷ்யந்த் இவ்வளவு நாள் மனசை திறக்காம சைலண்டா இருந்தாரு.. ஆனா இப்போ அவரே மனசை திறந்து தன்னோட காதலை சொன்னதுக்குப் பிறகு, நீ அதை மறுப்பது சரியில்ல..”

“இளங்கோ.. உனக்கு சொன்னா புரியாது.. இவ்வளவு நாள் துஷ்யந்தோட அமைதி தான் எனக்கு ஒரு ஆறுதலான விஷயமே, அவர் மனசு புரிஞ்சிருந்தாலும், அதை அவர் வெளிப்படுத்திக் கொள்ளாததால தான் நான் நிம்மதியா இருந்தேன்.. இப்போ அவர் என்னை நேசிக்கிற விஷயத்தை வெளிப்படையா சொல்லியும் அதை ஏத்துக்க முடியாத நிலையில தான் நான் இருக்கேன் இளங்கோ..”

“அப்படி என்ன துஷ்யந்தோட காதலை ஏத்துக்காத சூழ்நிலை..?? உன்னோட கழுத்துல இருக்க தாலியை மட்டும் காரணமா சொல்லிடாத.. அதை நீ வலுக்கட்டாயமா உன்னோட கழுத்துல போட்டிருப்பதா தான் நான் நினைக்கிறேன்.. என்னை பொறுத்தவரைக்கும் அந்த சம்பவம் ஒரு கல்யாணமேயில்லை.. அது உன்னை ஏமாத்த நடந்த ஒரு நாடகம்.. அதை உண்மைன்னு நினைச்சு நீ உன்னோட வாழ்க்கையை அழிச்சிக்காத கங்கா.. உன் வாழ்க்கையில விளையாடியவன் உன்னை விட்டிட்டு போயிட்டான் கங்கா..  அவன் திரும்ப வரவே மாட்டான்.. வந்தாலும் நீ அவனை ஏத்துக்க மாட்ட… அப்படி முடிஞ்சுப் போன விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைக்காம, அந்த வாழ்க்கையை ஏன் தொடரனும்னு நினைக்கிற??”

“உனக்கு இதெல்லாம் புரியாது இளங்கோ.. இந்த கல்யாணம் ஒரு நாடகமுமில்ல.. என் கழுத்துல இந்த தாலியை கட்டினவர் என்னை ஏமாத்தவுமில்ல.. நான்தான் அவரை விட்டுட்டு வந்துட்டேன்.. இப்பக்கூட அவர் முன்னாடி போய் நின்னு மனைவியா என்னை ஏத்துக்க சொல்லி உரிமையா கேட்டா.. அவர் உடனே என்னை ஏத்துப்பாரு.. கொண்டாடுவாரு.. ஆனா நான்தான் அதை ஏத்துக்குற நிலைமையில் இல்லை..”

“உளறாத கங்கா.. துஷ்யந்தை வேணாம்னு சொல்ல இப்படி ஏதாவது காரணம் சொல்லி, உன்னை நீயே தாழ்த்திக்காத.. ஆரம்பத்துல நீ சொன்னதையெல்லாம் நான் நம்பினேன்.. ஆனா உன்னோட பழக ஆரம்பிச்சதுக்கு பிறகு, நீ சொன்னதெல்லாம் உண்மையான்னு நானே எத்தனையோ முறை எனக்குள்ள கேட்டுப்பார்த்திருக்கேன்..  உன்னை தப்பானவளா நினைக்க முடியாது கங்கா.. இப்படி திரும்ப திரும்ப ஏதாவது சொல்லி உன்னை தப்பா காட்டிக்க முயற்சி செஞ்சுக்காத..”

“நான் நானா தான் இருக்கேன் இளங்கோ.. ஆரம்பத்துல என்னைப்பத்தி யாருக்கும் தெரிய வேணாம்னு சில விஷயங்களை மறைச்சு துஷ்யந்த்க்கிட்ட பொய் சொல்லியிருந்தேன்… அதே பொய்யை தான் உன்கிட்டேயும் சொன்னேன்.. ஆனா நீங்க பேசறதெல்லாம் பார்த்து, இதெல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு..”

“சரி எங்கக்கிட்ட பொய்யே சொன்னன்னே வச்சுக்க, அப்போ இப்போ சொல்லு.. உன்னோட ஹஸ்பண்ட் யாரு? ஏன் அவரை விட்டுட்டு வந்த? இப்பவும் அவர் உனக்காக தான் காத்திருக்காரா? அப்போ அவரோட சேர உனக்கு என்ன தடை?? அப்போ துஷ்யந்த் பத்தி நீ சொன்னது? இதுக்கெல்லாம் இப்போ நீ விளக்கம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டதற்கு, அவளது மௌனம் தான் அவனுக்கு பதிலாக கிடைத்தது.

ன்ன யமுனா திடிர்னு அமைதி ஆயிட்ட?”

“ஆ..ஆன் ஒன்னுமில்ல.. வேறெதோ யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..”

“சரி அந்த டாபிக்கை விடு.. ஆமாம் தீபாவளிய இளங்கோ அண்ணா கூட சேர்ந்து ஹோம்ல கொண்டாடின போல..  நீயா அதைப்பத்தி என்கிட்ட போன்ல சொல்லுவன்னு நினைச்சேன்.. ஆனா சொல்லல.. நீ சொல்லலன்னா எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டியா? எனக்கு ஆல்ரெடி இளங்கோ அண்ணா ஹோம்க்கு போறதுக்கு  முன்னாடியே சொல்லிட்டாங்க..” நர்மதா பேசிக் கொண்டே போக.. அன்றைக்கு தன்னை ஹாஸ்டலில் விட்டதுக்குப் பிறகு, இளங்கோ அலைபேசியில் கூட அவளிடம் பேசாததை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி.. ஏன் ஒருமாதிரி ஆயிட்ட, அண்ணா கூட சந்தோஷமா தானே தீபாவளி கொண்டாடின..??” என்று கேட்டும் கூட, யமுனா அமைதியாக இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.