(Reading time: 39 - 78 minutes)

நான் கேட்ட கேள்விக்கெல்லாம் உன்னால பதில் சொல்ல முடியலல்ல.. நீ ஏதோ பெரிய விஷயத்தை மறைக்கிறியோன்னு எனக்கு இப்போ தோனுது கங்கா.. அதான் துஷ்யந்த் விஷயத்துல உன்னால ஒரு முடிவெடுக்க முடியல.. இந்த ஆறு வருஷத்துல உன்னை ஒரு நல்ல தோழியா தான் நினைக்கிறேன்.. நீயூம் அப்படி தான் நினைக்கிறதா நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. இப்பயாவது உனக்கு என்ன பிரச்சனை? மனசு விட்டு என்கிட்ட சொல்லு கங்கா”

“வேண்டாம் இளங்கோ என்கிட்ட எதையும் கேக்காத..?? என்னால எதையும் சொல்ல முடியாது”

“தூங்கறவங்களை எழுப்பிடலாம்.. தூங்கற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாதுன்னு சொல்வாங்க.. நீ ரெண்டாவது ரகம்.. நீயா மனசுக்குள்ள ஒரு முடிவெடுத்து, அதுப்படி நடக்கனும்னு நினைச்சுட்ட.. அப்படியிருக்கும்போது, நாங்க யார் உன்னோட மனசை மாத்த நினைச்சாலும் முடியாது.. சரி டைம் ஆச்சு வா போகலாம்..” என்று இளங்கோ எந்திரிக்க, கங்காவும் எழுந்தாள்.

அதே நேரம்.. “சரி நாம கிளம்பலாம்” என்று எழுந்த யமுனா, அங்கே நின்றிருந்த கங்காவையும் இளங்கோவையும் ஒன்றாக பார்த்தாள்.

“ஏ என்னடி அவசரம்..’ என்று எழுந்த நர்மதா, அங்கே நின்றிருந்த கங்காவை மட்டும் பார்த்து, “ ஹே யமுனா.. நான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தேனே கங்கா.. அதோ நிக்கறாங்களே அவங்க தான்..” என்று கைகாட்டி சொன்னவள், அப்போது தான் கங்காவோடு நின்றிருந்த இளங்கோவை பார்த்தவள்,

“ஹே இளங்கோ அண்ணா தானே அது..” என்றவள், “அண்ணா” என்று கூப்பிட, அதற்குள் யமுனா அவளை தடுத்தாள்.. ஆனால் நர்மதாவின் குரல் போல் இருக்கவே இளங்கோ திரும்பி பார்க்க, கங்காவும் திரும்பி பார்த்தாள். அங்கு நர்மதாவோடு நின்றிருந்த யமுனாவையும் அவர்கள் இருவரும் பார்த்தனர்.. யமுனாவும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. திடிரென என்ன நினைத்தாளோ!! சட்டென்று அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று வெளியேறினாள்.

இளங்கோவை அழைத்த நர்மதா, அதன்பின் தான் இளங்கோ அண்ணாக்கு கங்காவை எப்படி தெரியும்? என்று யோசித்தப்படி நின்றவள், திடிரென யமுனா அங்கிருந்து செல்லவே, என்ன ஏதென்று புரியாமல் நர்மதாவும் அவள் பின்னால் சென்றாள்.

“இளங்கோ.. என்கூட உன்னை பார்த்ததால தான் அவ கோவிச்சுக்கிட்டு போறாளா? இப்போ அவ எப்படி நடந்துப்பான்னு நினைச்சா பயமா இருக்கு.. நான் பார்த்த மாப்பிள்ளைன்னு உன்னை வேண்டான்னு சொல்வாளோ?”

“சும்மா பயப்படாத கங்கா.. அவளுக்கு ஆல்ரெடி அந்த விஷயம் தெரியும்..”

“என்ன சொல்ற..?? எப்படி தெரியும் அவளுக்கு?”

“மதர்க்கு என்னை தெரிஞ்சிருக்கு எனும் போதே, உனக்கும் என்னை தெரிஞ்சிருக்குன்னு யூகிச்சிட்டா.. அதனால நீ பயப்படாத..”

“அப்புறம் எதுக்கு இப்போ அவ கோபமா போறா?”

“உன்னோட தங்கை தான அவ, எதுக்கு, என்னத்துக்கு இப்படி செய்றான்னு யாருக்கு தெரியும்.. “ என்றவன், தன் அலைபேசியை கையில் எடுத்தான்.

நர்மதா கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் வெளியே வந்த யமுனா, அங்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளியிருந்த பூங்காவின் உள்ளே சென்றாள். நர்மதாவும் அவள் பூங்காக்குள் நுழைவதை பார்த்து அங்கே செல்ல, அவளது அலைபேசி இசைத்தது. அதை எடுத்து அழைப்பை ஏற்றாள்.

“நர்மதா எங்க இருக்கீங்க..?”

“அண்ணா.. பக்கத்துல இருக்க பார்க்குள்ள போயிருக்கா.. நானும் அங்க தான் போறேன்..”

“சரி பேசிட்டு இரு.. இதோ நான் வரேன்..” என்று அழைப்பை துண்டித்தவன், “இங்கேயே இரு, இதோ நான் வரேன்..” என்று கங்காவிடம் சொல்லிவிட்டு சென்றான்.

பூங்காவின் உள்ளே நுழைந்தவள், அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.. அவளைப் பார்த்து அவளருகே சென்ற நர்மதா.. “ஹே யமுனா.. உனக்கென்ன ஆச்சு.. திடிர்னு ஏன் அங்கிருந்து அவ்வளவு வேகமா வந்த.. என்னடி இளங்கோ அண்ணா கூட ஏதாச்சும் சண்டையா? அதான் இளங்கோ அண்ணா பத்தி பேசினதும் ஒருமாதிரி ஆயிட்டியா? என்கிட்ட என்னன்னு சொல்லலம் இல்ல..” என்று கேள்வியெழுப்ப, யமுனாவோ அமைதியாக அமர்ந்திருந்தாள்.

இத்தனை கேள்விக்கும் யமுனா அமைதியாக இருக்க, நர்மதாவின் மனதில் திடிரென ஒரு கேள்வி உதித்து அதை வாய்விட்டே கேட்டாள்..

“யமுனா.. அண்ணாவை கங்கா கூட பார்த்ததால, ஏதாவது தப்பா..” முழுதாக சொல்லி முடிப்பதற்குள், யமுனா அவளது வாயை பொத்தினாள்.

“வேண்டாம் நர்மதா.. இப்படி பேசாத.. ஏற்கனவே அவளை பத்தி நான் கேட்டது போதும்.. யார் என்ன பேசனாலும் பரவாயில்ல.. ஆனா நீ அப்படி பேசாத,  அவக் கூட இல்லாத நேரத்தை உன்னோட இருந்து தான் நான் கழிச்சிக்கிறேன்.. நீயே உன் வாயால அவளை தப்பா சொல்லாத”

“என்னடி சொல்ற..?? கங்காவை பத்தியா பேச வேணாம்னு சொல்ற.. நீ என்ன சொல்ல வர.. அவங்க கூட இல்லாத நேரம்னா.. எனக்கு ஒன்னும் புரியல..”

“கங்கா வேற யாருமில்ல.. அவ என்னோட அக்கா.. கூடப்பிறந்த அக்கா.. நான் ஒன்னும் அனாதை இல்ல.. எனக்கு உறவுன்னு சொல்லிக்க அக்கா இருக்கா.. அவ ஒன்னும் தப்பானவ கிடையாது.. சூழ்நிலை அவளை தப்பா காட்டுது.. அதுக்கு காரணம் நான்தான், எனக்கு நடந்த ஹார்ட் ஆபரேஷன் தான், அதுக்கு தேவைப்பட்ட பணம் தான், ஆனா அவளை நானே புரிஞ்சிக்கல.. அவ மேல கோபபட்டேன், அவளை விட்டு விலகியிருந்தேன்.. ஆனா அவ மேல கோபம் என்பதை விட, என்மேல தான் எனக்கு அதிக கோபம்.. நான் அவளுக்கு பாரமா இருந்ததால தான, அவ இப்படி மத்தவங்க பார்வைக்கு தப்பானவளா ஆயிட்டா.. என்னை அப்படியே சாக விட்ருந்தா பிரச்சனையில்லல்ல..” என்று கண்ணீர்விட்டாள்.

யமுனா சொன்னதையெல்லாம் நம்பமுடியாமல், ஒரு அதிர்ச்சியோடு நர்மதா கேட்டுக் கொண்டிருந்தாள்.. யமுனாவை சமாதானப்படுத்த கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள்..

“மனசுல அக்கா மேல இவ்வளவு பாசத்தை வச்சிக்கிட்டு கோபமா இருக்க மாதிரி ஏன் காட்டிக்கனும்?”என்று கேட்டப்படி இளங்கோ அவர்கள் அருகில் வந்தான்.

யமுனா அவனை பார்த்து கண்களை துடைக்க, “அண்ணா” என்று சொல்லியப்படி நர்மதா அங்கிருந்து எழுந்திருக்க, இளங்கோ யமுனாவின் அருகில் உட்கார்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.