(Reading time: 39 - 78 minutes)

ரம்பத்துல அக்கா மேல கோபமா தான் இருந்தேன்.. அத்தை அக்காவை பத்தி என்கிட்ட தப்பு தப்பா சொன்னாங்க.. ஆனா அதை நான் நம்பல.. அக்காக்கிட்ட நேரடியாகவே அவளுக்கு என்ன நடந்ததுன்னு கேட்டேன்.. ஆனா அதுக்கு அவ எந்த பதிலும் சொல்லல.. அவ ஹஸ்பண்ட் யாருன்னு கேட்டாலும் பதில் இல்ல..  ஒருவேளை என்னோட ஆபரேஷன்க்கு பணம் வேணும்னு அக்கா தப்பான பாதையில போய்ட்டாளோன்னு நான் பயந்தேன்.. அக்கா விளக்கம் கொடுக்காத பட்சத்துல அவ மேல எனக்கு கோபம் வந்துச்சு.. அவளை தப்பா நினைக்கவும் என்னால முடியல.. அவளுக்கு அப்படி என்ன நடந்ததுங்கிற கேள்விக்கும் பதில் இல்ல.. அவளோட மௌனம் என்னோட கோபத்தை அதிகப்படுத்துச்சு, அதனால நான் விலகியிருந்தேன்..

ஆனா மதர் தான் எனக்கு புரிய வச்சாங்க.. “கங்கா, என்கிட்ட கூட தான் என்ன நடந்ததுன்னு சொல்லல.. ஆனா அவ தப்பான பாதையில போயிருக்க மாட்டான்னு நான் நம்பறேன்,  அந்த நம்பிக்கையை நீயும் கங்கா மேல வை.. கண்டிப்பா ஒருநாள் அவ பிரச்சனை என்னன்னு நமக்கு தெரிய வரும்.. அப்போ உன்னோட அக்கா மேல தப்பில்லன்னா எப்படி அவ முகத்துல முழிப்ப.. அதனால உன்னோட அக்கா தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு நம்புன்னு சொன்னாங்க.. ஏற்கனவே எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது.. ஆனா மதர் சொன்னதுக்குப் பிறகு என்னோட கோபத்தை விட்டுட்டேன்..

இருந்தும் அதை வெளியில காமிச்சிக்கல.. அக்காவை விட்டு விலகியே இருந்தேன்.. அதுக்கு காரணம் இருந்தது, என்னால தானே அக்காவோட வாழ்க்கை இப்போ கேள்விக்குறியா இருக்கு.. இன்னும் அவளுக்கு பாரமா இருந்து அவளுக்கு மேலும் நான் கஷ்டத்தை கொடுக்க விரும்பல..

எனக்கு தெரியும்.. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கனும்னு அக்கா தவிக்கிறா.. ஆனா எனக்கு கல்யாணம்னு பேச்சு வரும்போது அக்கா அவமானங்களை சந்திக்க வேண்டி வரும்.. மாப்பிள்ளை வீட்ல கண்டிப்பா அவ வாழ்க்கையோட பிண்ணனிய கேப்பாங்க.. அவளோட கணவர் பத்தி சொல்ல சொல்வாங்க.. அவ நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி வரும், அதனால தான்.. நான் கல்யாணத்தை பத்தி யோசிக்கல, அதுமட்டுமில்ல, அக்கா வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கப்போ, நான் மட்டும் எப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியும்? அவ கூட இருந்தா, இப்படி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்னு தான் நான் அவளை விட்டு விலகியிருந்தேன்..

அந்த காரணமா தான் நீங்க காதலை சொன்னபோதும், அதை ஏத்துக்க முடியாத சூழ்நிலையில் நான் இருந்தேன்.. ஆனா ஹோம்க்கு போனப்ப தான், நீங்க அக்கா பார்த்த மாப்பிள்ளையா இருப்பீங்கன்னு தெரிஞ்சுது.. என்னைப்பத்தி எல்லா தெரிஞ்சு தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்கன்னும் புரிஞ்சுது.. இருந்தும் இத்தனை நாள் காதல்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு கோபத்துல தான் அப்படி பேசினேன்..

அக்கா ஒரு டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் வச்சு நடத்தி கொஞ்சம் கௌரவமா இருக்கான்னு நான் நிம்மதியா இருக்கேன்.. ஆனா துஷ்யந்த் பத்தி கேள்விப்பட்டதும் தான், அக்கா இப்பவும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறான்னு புரிஞ்சுது.. அந்த நேரம் அவளை நேர்ல பார்க்கவே, என்னால அங்க இருக்க முடியல.. எங்க அவ முன்னாடி அழுதிடுவேனோன்னு வெளிய வந்துட்டேன்..”

“உன்கூட பழக ஆரம்பிச்சதுமே, நீ கண்டிப்பா கங்காவை பத்தி தப்பா நினைச்சிருக்க மாட்டேன்னு நானும் புரிஞ்சிக்கிட்டேன்.. கங்கா என்னோட நல்ல ப்ரண்ட்.. ஆனா அதுக்காக உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்க நினைக்கல, உன்னை பார்த்து விரும்பி தான் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டேன்.. ஆனா நான் கங்காவோட ப்ரண்ட்னு தெரிஞ்சா, அதை நீ எப்படி புரிஞ்சிப்பியோன்னு தான் நான் அதை வெளிப்படுத்திக்கல..”

“சாரி இளங்கோ.. நீங்க அக்காக்கு தெரிஞ்சவர்னு தெரிஞ்சதுமே, எனக்கு அப்படி தான் நினைக்க தோனுச்சு..”

“இருந்தும் அது மட்டுமா காரணம்.. எனக்கென்னவோ வேற ஏதோ ஒரு காரணம் இருக்குமோன்னு தோனுது.. உன் அக்காக்கு நான் தெரிஞ்சவன்னு உனக்கு தெரியறதுக்கு முன்னாடியே, நீ உன்னோட அக்கா பத்தி எனக்கு புரிய வைக்க முயற்சி செஞ்சுருக்கலாமே??”

“அது.. அது வந்து.. எனக்கு நடந்தது ஓபன் ஹார்ட் சர்ஜரி இல்லையா? ஆபரேஷன்க்கு அப்புறம் நான் நார்மல் ஆயிட்டேன்னு தான் டாக்டர் சொன்னாங்க, ஆனா இருந்தும், என்னால தாம்பத்ய வாழ்க்கைல முழுமையா ஈடுபட முடியுமான்னு எனக்கு ஒரு சந்தேகம்.. அதான், நான் கல்யாணம் வேண்டாம் என்பதில் பிடிவாதமா இருந்தேன்.. உங்க மேல காதல் இருந்தும் அதை சொல்லாம நான் மறைச்சேன்..”

“இப்போ மருத்துவம் எவ்வளவோ முன்னேறியிருக்கு, நீ இப்படி யோசிச்சு நேரத்தை கடத்துற.. உனக்கு நடந்த ஆபரேஷன்க்கும் இருக்கும் எந்த சம்பந்தமுமில்ல.. அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தாலும், அதுமட்டுமா வாழ்க்கை.. நீ என்னோட என் மனைவியா எப்பவும் இருந்தாலே போதும்.. உன்னோட பிடிவாதத்தை பார்த்து நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன், இப்போ தான் நிம்மதியா இருக்கு..” என்று இளங்கோ சொன்னதும், யமுனா முகத்திலும் புன்னகை வந்தது.

அருகில் ஒருத்தி இருப்பதை உணறாமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க, “அஹெம் அஹெம் என்று நர்மதா வேண்டுமென்றே இருமி காட்டினாள்.

“ நர்மதா..” என்று எழுந்த யமுனா, அவள் கையை பிடித்துக் கொண்டு, “என்னை மன்னிச்சிடு நர்மதா, நீ என்கிட்ட ஒரு நல்ல தோழியா எல்லா விஷயத்தையும் வெளிப்படையா பேசியிருக்க, ஆனா நான் உன்கிட்ட நிறைய விஷயத்தைப்மறைச்சிட்டேன்.. சாரி..”

“ஹே என்னடி இது மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு, இதெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கல.. கங்கா உன்னோட அக்கான்னு தெரிஞ்சதுல எனக்கும் சந்தோஷம்.. நீங்க பேசிக்கிட்டத நானும் தானே கேட்டேன், அவங்க உன்னோட ஆபரேஷன்க்காக ரொம்ப கஷ்டப்பட்ருக்காங்கன்னு தெரியுது.. இருந்தும் எனக்கு ஒன்னு தான் புரியல, என்னோட அத்தை அவங்கள பத்தி ஏன் தப்பா சொல்லனும்? அப்படி குன்னூர்ல என்ன நடந்திருக்கும்?”

“குன்னூர்ல என்ன நடந்ததுன்னு எனக்கும் சரியா தெரியாது நர்மதா.. கங்கா ஆரம்பத்துல என்கிட்ட வேற சொன்னா.. அவளை கல்யாணம் என்ற பேர்ல ஒருத்தன் ஏமாத்திட்டதாகவும், அப்புறம் யமுனா ஆபரேஷன்க்கு பணம் வேணும்னு துஷ்யந்த் கூட இருந்திருக்கா.. அப்படி தான் என்கிட்ட சொன்னா, ஆனா அவளுக்கு வேறெதுவோ நடந்திருக்கு.. என்னன்னு சொல்ல மாட்டேங்குறா.. குன்னூர்ல எப்படியோ, ஆனா சென்னை வந்ததுக்கு பிறகு, கங்கா, துஷ்யந்த்க்குள்ள எந்த தப்பான தொடர்பும் இல்ல.. ஆனா துஷ்யந்த் கங்காவோட பழகறது தெரிஞ்சு, துஷ்யந்த் அம்மா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. துஷ்யந்த் கங்காவை உயிருக்கு உயிரா காதலிக்கிறாரு.. ஆனா கங்கா. மனசுல காதல் இருந்தும், அவ எதுக்காகவோ, அதை வெளிப்படுத்திக்க மாட்டேங்குறா.. அதைப்பத்தி தான் இப்போக் கூட நான் அவக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்..” என்றவன், அப்போது தான் ஞாபகம் வந்தவனாக,

“கங்காவை மாலிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. அவ யமுனாவை நினைச்சு கவலையா இருப்பா, நான் அவளை வரச் சொல்றேன்.. இப்போ கங்கா, துஷ்யந்த் பத்தி எதுவும் பேச வேண்டாம்.. நேரம் வரும்போது பேசலாம்..” என்றான்.. இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.