(Reading time: 32 - 63 minutes)

31. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

இந்த அத்தியாயம் முழுக்க கங்கா துஷ்யந்துக்கானது.. அடுத்த அத்தியாயமும் அது தொடரும்.. ஆனா கடைசி பக்கத்தை படிச்சிட்டு, கட்டையோ , கத்தியோ தூக்காம, இந்த அத்தியாயம் எப்படி இருந்ததுன்னு உங்க கருத்துக்களை சொல்லுங்க..

உயிரே உயிரே வந்து

என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை

உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே வந்து

நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே வந்து

விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் என்

கண்ணோடு கலந்துவிடு

லைபேசியில் கேட்கும் பாட்டு சத்தம் ஏதோ கனவில் கேட்பது போல் இருக்க, நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் துஷ்யந்த். ஆனால் திரும்ப திரும்ப பாட்டுச் சத்தம் கேட்கவே தான், அது கனவில் இல்லை என்று தெரிந்துக் கொண்டவன் அரக்க பரக்க படுக்கையில் இருந்து எழுந்தான்.. ஏனென்றால் அந்த பாட்டுச் சத்தமே அழைப்பது கங்கா என்பது தான் அவனுக்கு தெரியுமே, எனவே அழைப்பை ஏற்பதற்கு முன் மணியை பார்த்தான்.. அது பனிரெண்டு ஆக இன்னும் இரண்டு மூன்று நிமிடங்கள் இருப்பதாக காட்டியது.. இந்த நேரம் கங்கா எதற்கு அழைக்கிறாள் என்று சிந்தித்தப்படியே அழைப்பை ஏற்று, “ஹலோ கங்கா” என்று அவன் பேச, மறுமுனையோ அமைதியாக இருந்தது..

திரும்ப திரும்ப “ஹலோ.. ஹலோ..” என்றவன், “கங்கா நீதானே? ஏன் அமைதியா இருக்க? ஏதாவது பேசு” என்று கேட்க, மறுமுனை இன்னுமே அமைதியாய் இருக்க, சரியாக மணி பனிரெண்டு ஆனதும், “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கங்காவின் இனிமையான குரல் அவனுக்கு கேட்டது..

அப்போது தான் மறுநாள் அவனது பிறந்தநாள் என்பதே அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.. துஷ்யந்தின் தந்தை எப்போதும் எளிமையை விரும்புபவர்.. பெரிய செல்வந்தராக இருந்தாலும், தங்கள் வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் எளிமையாக தான் நடத்துவார்.. அதில் பிள்ளைகளின் பிறந்தநாளும் அடக்கம்..  பிறந்தநாள் அன்று புது உடை, வீட்டில் சிறப்பான சமையல் என்பதோடு முடித்துக் கொள்வார். பிள்ளைகளை வெளியில் அழைத்து சென்று கோவில், கடற்கரை, ஷாப்பிங் என்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார். துஷ்யந்தின் தன்மைக்கு அவனும் அதைதான் விரும்புவான்.. இதில் வளர வளர அவனுக்கு புது உடை, வெளியில் செல்வது இதில் கூட நாட்டமில்லாமல் போனது.. அவனது தாய் தந்தை வாழ்த்தும் போதுதான் துஷ்யந்திற்கு தன் பிறந்தநாளே ஞாபகத்துக்கு வரும்..

கங்கா, இளங்கோவின் அறிமுகத்திற்குப் பிறகு, இளங்கோ, வாணி இருவரும் காலையிலேயே துஷ்யந்த் பிறந்தநாளன்று அவனுக்கு வாழ்த்து சொல்வார்கள். ஏன் ரம்யாவும் அவனுக்கு வாழ்த்து தெரிவிப்பாள்.. ஆனால் கங்கா மட்டும் பிறந்தநாள் முடியும் நேரம் இரவு 9, 10 மணிக்கு தான் தன் வாழ்த்தை அவனுக்கு தெரிவிப்பாள். அப்படிப்பட்டவள், இன்று அந்த நாளின் ஆரம்பத்திலேயே முதலாய் அவளே வாழ்த்துவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.. ஒருமுறை கனவா என்று தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.. அவன் இணையாள் இந்த நாள் முழுதும் இப்படி அவன் கையை கிள்ளிப் பார்க்கும் தருணங்களை அவனுக்கு அள்ளி கொடுக்க தானே போகிறாள்.

பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும் மறுமுனை அமைதியாக இருக்கவே, “ஹலோ ஹலோ.. இருக்கீங்களாப்பா..” என்று கங்காவின் குரல் கேட்டதும் நடப்புக்கு வந்தான்..

“ம்ம் இருக்கேன்.. ஆனா கனவுலகத்துல இருக்கேன்னு நினைச்சிட்டேன்..”

“கண்டிப்பா அப்படித்தான் இருக்கும்.. ஆனா இது உண்மை தான்.. பக்கத்துல இருந்தா உங்களை கிள்ளி விட்ருப்பேன்.. அப்போ இது கனவா, நிஜமான்னு கேள்வி வந்திருக்காது..” என்றாள் கேளியாக,

இன்னும் அவள் தான் பேசுகிறாளா? என்ற பிரம்ம்பில் இருந்து வெளிவராது இருந்தான் அவன்,

“காலையில நீங்க வீட்டுக்கு வரனும். இங்க வந்து தான் நீங்க ப்ரேக்பாஸ்ட் சாப்பிடனும்.. வருவீங்களா?” கெஞ்சலும், கொஞ்சலுமாக கேட்டாள்.

அவனால் முடியாது என்று சொல்லிட முடியுமா? வருவதாக ஒத்துக் கொண்டான்.. “அப்புறம் உங்களுக்கு என்ன பர்த்டே கிஃப்ட் வேணும்” என்று கேட்டு அடுத்த ஆச்சர்யத்தை கொடுத்தாள்.

“பர்த்டே கிஃப்ட்டா என்ன கேட்டாலும் தருவியா?” அவன் கேட்டதற்கு,

“என்ன(னை) கேட்டாலும் தருவேன்” என்று அந்த என்ன வில் அவள் அழுத்தம் வைத்து கூறினாள். இருந்தும் அவள் விஷயத்தில் அனைத்துமே அவனுக்கு புரியாத புதிர் ஆயிற்றே, அதனால் அவள் சொன்னதன் அர்த்தத்தை அவன் புரிந்துக் கொள்ளவில்லையென்றாலும், அவனுக்கு வேண்டிய என்ன கேட்டாலும் என்ற அவள் பதிலில் அகமகிழ்ந்துப் போனான்.

“நாளைக்கு முழுநாளும் நீ என் கூட இருக்கனும்.. அதுதான் எனக்கு நீ கொடுக்கப்போற பர்த்டே கிஃப்ட்..  முடியுமா?”

“நாளைக்கு முழுநாளும் தானே, இருக்கேன்.. உங்கக் கூடவே இருக்கேன்..”

“நிஜமாவா?” கட்டிலில் சாய்ந்தப்படி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவன், நிமிர்ந்து உட்கார்ந்தப்படி கேட்டான்.

“நிஜமா தான் சொல்றேன்.. ஒருநாள் முழுக்க உங்கக் கூடத்தான் இருப்பேன்.. ஆனா எங்க? எந்த இடம்? நீங்களே சொல்லுங்க..”

“இப்பவே உன்னை குன்னூர்க்கு கூட்டிட்டுப் போகனும்னு தோனுது.. ஆனா குன்னூர்ல ஒருநாளெல்லாம் பத்தாது.. அங்க நிறைய நாள் உன்கூட நான் இருக்கனும்.. அதனால, மரக்காணத்துல எனக்கு ஒரு பண்ணை வீடு இருக்கு.. அங்கப் போவோமா?”

“சரி காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சதும் கிளம்புவோம்.. இப்போ தூங்குங்க.. போனை வைக்கட்டுமா?” என்றுக் கேட்டவள், அவன் “ம்ம்” என்றதும், அலைபேசியை அணத்தாள்.

இன்னும் கூட துஷ்யந்தால் இது நிஜம் என்று நம்பமுடியவில்லை.. மீண்டும் ஒருமுறை கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.. படுத்தால் உறக்கம் வருவேனா என்றிருந்தது.. கங்காவை பற்றி நினைத்தப்படி படுத்திருந்தவனை உறக்கம் வந்து எப்போது ஒட்டிக் கொண்டது என்று தெரியவில்லை..

ஆனால் விடியற்காலையிலேயே விழித்துக் கொண்டான்.. காலை கடமைகளை முடித்தவன், இன்று அணிவதற்கான உடையை தேர்ந்தெடுத்தப்படி சிறிது நேரம் நின்றான்.. பின் இள நீல ஜீன்ஸ் பேன்ட்டும், ஒரு பிங்க் நிற டிஷர்ட்ட்டும்  அணிந்தப்படி தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.. என்னவோ ஐந்து வயது குறைந்தது போல் அவனுக்கே தோன்றியது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.