(Reading time: 32 - 63 minutes)

துஷ்யந்தின் பிறந்தநாளையொட்டி வீட்டிலேயே துஷ்யந்துக்காக செய்த இனிப்பை, பூஜை அறையில் வைத்து படைத்து, கடவுளை வழிப்பட்ட கோமதி அந்த அறையை விட்டு வெளியே வர, துஷ்யந்தோ படிக்கட்டுகளில் துள்ளி குதித்தப்படி இறங்கி வந்தான்.. அவனை ஆசை தீர பார்த்து ரசித்தார். சிறு வயதில் கூட அவன் இப்படி துள்ளி குதித்து விளையாடியதில்லை.. இன்று தன் மகனை பார்க்க பார்க்க அவருக்கு திகட்டவேயில்லை.. அவன் முகத்தில் மகிழ்ச்சி அப்படியே பிரதிபலித்தது.. இப்படி ஒரு வாழ்க்கை தான் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதென்றால், அவன் இப்படியே இருக்கட்டும்.. இந்த மகிழ்ச்சி அவனுக்கு இப்படியே நீடிக்க வேண்டுமென்று மீண்டும் கடவுளிடம் வேண்டுதல் வைத்தவர், அவனை நோக்கிச் செல்ல, அவனும் கோமதியை பார்த்துவிட்டு, அவர் அருகில் வந்தான்.

“ஆசிர்வாதம் செய்ங்கம்மா” என்று காலில் விழுந்தான்..

“நல்லா இரு ராஜா..” என்றவர், கையில் வைத்திருந்த இனிப்பை வாயில் ஊட்டி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்பா” என்று வாழ்த்தினார். பின்,

“ராஜா.. எங்கேயோ கிளம்பிட்ட போலயே, நான் நர்மதாக்கிட்ட சொல்லி, உனக்கு பிடிச்ச டிஃபன் செய்ய சொல்லலாம்னு இருந்தேன்..” என்றார்.

“இல்லம்மா.. நான் முக்கியமா போக வேண்டியிருக்கு.. அதனால நான் வெளிய சாப்ட்டுக்கிறேன்.. நீங்க நார்மலா என்ன செய்யனுமோ அதையே நர்மதாக்கிட்ட செய்ய சொல்லுங்க…” என்று கோமதியிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே, நர்மதாவும் செல்வாவும் அங்கே வந்தனர்.. இருவரும் அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.. பின் விஜியும் அங்கு வர, அவரும் துஷ்யந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின் அவர்களிடம் விடைப்பெற்றவன் கங்காவின் வீட்டுக்கு புறப்பட்டான்.

காலையிலேயே நெய் வாசமும், மசாலா வாசமும் என்று சமயலறை அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.. விடியற்காலையிலேயே எழுந்த கங்கா துஷ்யந்துக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொண்டிருந்தாள்.. வாணியே தாமதமாக தான் எழுந்தார்.. எழுந்த போது அடுப்பில் எதையோ குக்கரில் வைத்து அடுப்பை சிறியதாக்கிவிட்டு கங்கா குளித்துக் கொண்டிருந்தாள்.. காலையிலேயே கங்கா இவ்வளவு பரப்பரப்பாக இருக்கவே, இன்று என்ன விஷேஷம் என்று யோசிக்க ஆரம்பித்தார்..

யாருடைய பிறந்தநாளும் அவருக்கு ஞாபகத்தில் இருக்காது.. இளங்கோ, யமுனாவின் பிறந்தநாள் என்றால், கங்காவே சொல்லிவிடுவாள்.. ஏன் துஷ்யந்தின் பிறந்தநாளன்று கூட, “இன்னிக்கு உங்க தம்பியோட பிறந்தநாள்.. போன் பண்ணி வாழ்த்து சொல்லுங்க..” என்று காலையிலேயே சொல்பவள், அவளோ இரவில் தான் தன் வாழ்த்தை சொல்வாள்.. அதனால் முதலில் இன்று என்ன விசேஷம் என்று வாணி யோசித்தார்.. யமுனா, இளங்கோ பிறந்தநாள் பிப்ரவரி மாசம் வராதே? ரம்யா, நர்மதாவின் பிறந்தநாளாக இருக்குமோ? என்று யோசித்து, பின் நன்றாக நினைவுப்படுத்தி, இன்று துஷ்யந்தின் பிறந்தநாள் தான் என்று உறுதி செய்துக் கொண்டார்.. இருந்தும் துஷ்யந்த் பிறந்தநாளுக்காக கங்கா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது தான் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதைப்பற்றி வெளிப்படையாக அவரால் கேட்கவும் முடியவில்லை.. கேட்டால் எங்கே திரும்ப தன் கூட்டுக்குள் சுருங்கிக் கொள்வாளோ? என்று அவர் அமைதியாக இருந்தார். ஏதாவது உதவி செய்யலாமா? என்று மட்டும் அவர் கங்காவிடம் கேட்க,

“ஓரளவுக்கு எல்லாம் வேலையும் முடிச்சிட்டேன் வாணிம்மா.. உங்க தம்பி கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு.. அவரோட சேர்ந்து சாப்பிட வேண்டாமா? போய் குளிச்சிட்டு வாங்க” என்று வாணியை ஆச்சர்யத்தில் வாயை பிளக்க வைத்தாள்.

8 மணிக்கெல்லாம் துஷ்யந்த் அங்கு வந்துவிட்டான்.. அப்போது வரவேற்பறையில் தொலைக்காட்சி பெட்டியில் கண் வைத்திருந்த வாணி தான் முதலில் அவனை வரவேற்றார்.. வாணியின் குரல் கேட்டு கங்காவும் சமயலறையில் இருந்து வெளிவந்து அவனை வரவேற்றாள்.

“உக்காருங்க.. பர்ஸ்ட் பர்த்டேக்காக ஸ்வீட் சாப்பிடனும்.. உங்களுக்காக கேரட் அல்வா செஞ்சிருக்கேன்.. எடுத்துட்டு வரேன்” என்று சமயலறைக்குச் சென்று கேரட் அல்வாவை கொண்டு வந்து அவனுக்கும் வாணிக்கும் கொடுத்தாள்.

“நீயும் சாப்பிடு கங்கா” என்று அவன் கிண்ணத்தை நீட்டியதும், மறுக்காமல் அவன் சாப்பிட இருந்த ஸ்பூனாலேயே அவளும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு, துஷ்யந்தை விட வாணிக்கு தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்தாள்.

பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள், அவனை சாப்பிட அழைத்தாள்.. வாணியையும் அவனையும் உட்கார வைத்து பரிமாறினாள்.. அவனுக்கு பிடித்த சப்பாத்தி, காலிபிளவர் குருமா செய்திருந்தாள், அதனுடன் தோசை, வடகறி, மெதுவடை, தேங்காய் சட்னி, பாயசம் அனைத்தும் செய்திருந்தாள்.. அவளையும் அவர்களுடன் சேர்ந்து அவன் சாப்பிட சொல்ல, ஓரளவு பரிமாறியப் பின் அவளும் உடன் சேர்ந்து சாப்பிட்டாள். அப்போது தான் வாணியிடம் துஷ்யந்துடன் வெளியில் செல்வதை பற்றி கூறினாள். வாணியும் ஒத்துக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்ததும் தயாராகி வருவதாக சொல்லி, அறைக்குச் சென்றவள், சிறிது நேரம் கழித்து வந்தாள்.. எப்போதும் போல் சாதாரணமாக இல்லாமல், இன்று கொஞ்சம் தன்னை அதிகப்படியாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல், யமுனா அவளின் திருமணத்தின் போது, சில நல்ல புடவைகளும் காதில் கழுத்தில் போட கொஞ்சம் நகையும் வாங்கிக் கொடுத்தாள்.. திருமணத்தின் போதே அதையெல்லாம் அவள் முழுமையும் உபயோகப்படுத்தவில்லை.. ஆனால் இன்று அதையெல்லாம் போட்டுக் கொண்டு வந்து நின்றாள். துஷ்யந்தின் கண்கள் அவளை விட்டு எங்கும் அகலவில்லை.

“முன்னாடியே சொல்லியிருந்தா.. பூ வாங்கி வச்சிருப்பேனே..” என்று வாணி குறைப்பட்டுக் கொண்டார்.

“இருக்கட்டும் வாணிம்மா.. நாங்க முதலில் கோவிலுக்கு தான் போவோம்.. அங்க வாங்கிக் கொடுக்கிறேன்..” என்று துஷ்யந்த் கூறினான்.

பின் இருவரும் வாணியிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினர்.. இருவரையும் ஜோடியாக பார்த்தது வாணியின் கண்களுக்கு நிறைவாக இருந்தது. “கங்கா மனசு மாறிட்டாளா? சீக்கிரம் அவ துஷ்யந்தோட சேர்ந்து வாழனும்.. அவங்க வீட்டிலே உள்ளவங்களும் அவளை ஏத்துக்கனும்.. போன முறை தான் கங்கா வாழ்க்கையை சரிப்படுத்த நினைச்சு போன காரியம் முடியல.. இந்த முறையாவது அவ வாழ்க்கையை சரிப்பண்றதுக்கான முயற்சி வெற்றியாகனும்..” என்று நினைத்துக் கொண்டவர், இரண்டு நாட்கள் முன்பு தன் தங்கை பேசியதை நினைவு கூர்ந்தார்.. “இந்த முறை தங்கை சொன்னது சரியானதா இருக்கனும்.. சீக்கிரம் ஊருக்குப் போய் அதை பார்க்கனும்” என்று அவர் முடிவெடுத்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.