(Reading time: 32 - 63 minutes)

தொட்டியில் இருந்து இறங்கி வந்தவள், அங்கு அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது சாய்ந்துக் கொண்டாள். இன்று அவனது பிறந்தநாளன்று அவனுடன் இருக்க வேண்டுமென்று நினைத்து தான் அவனோடு அவள் இங்கு வந்தாள். அவளையே அவனது பிறந்தநாள் பரிசாக கொடுக்க வேண்டுமென்று தான் நினைத்திருந்தாள். அதனால் தான் அவனுக்கு அவள் முழு ஒத்துழைப்பு கொடுத்தாள். ஆனால் அந்த நேரம் கூட, அவன் திருமணத்தைப் பற்றி பேசியது தான், அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

துஷ்யந்தோ கங்காவின் மனநிலையை அறியாமல், அவன் செய்த காரியத்தால் தான் அவள் கோபப்பட்டு சென்றுவிட்டாள், என்று நினைத்துக் கொண்டான். இப்படி அவள் அருகாமையில் எங்கே எல்லை மீறிடுவானோ? என்று பயந்து தான், இத்தனை வருடங்களாக அவளை விட்டு தள்ளியிருந்தான். ஆனால் இன்று அவள் காட்டிய நெருக்கம் தான், அடக்கி வைத்திருந்த அவனது உணர்ச்சிகளை தூண்டிவிட்டது. அப்போதும் ஒரு கட்டத்தில் தான் என்ன செய்ய இருந்தோம் என்பதை புரிந்துக் கொண்டவன், உடனே அவள் காதில் திருமணத்தைப் பற்றி பேசினான். அப்படியிருந்தும் அவள் கோபித்துக் கொள்ளவே, இதற்கு மேல் இங்கு இருப்பது நல்லதல்ல, என்பதை அறிந்தவன், அவள் அருகில் வந்தான்.

“கங்கா சாரி.. இப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கல.. இதுக்கும் மேல இங்க இருக்க வேண்டாம்.. வா போகலாம்..”

“இப்படி எத்தனை நாள் உங்க உணர்ச்சிகளை அடக்கி வச்சுக்க போறீங்க? இதுக்காக தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்”

“நீ இப்போ சம்மதம் சொல்லு, நாளைக்கே செஞ்சுக்கலாம்..”

“நான் சொன்னது வேற ஒரு பொண்ணுக் கூட”

“நீ என்னை என்ன நினைச்ச..?? உன்னைத் தவிர வேற எந்தப் பொண்ணுக்கிட்டேயும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் வராது.. அதை நல்லா நான் புரிஞ்சிக்கிட்டதால தான்.. நடக்க இருந்த என்னோட கல்யாணத்தை நிறுத்திட்டேன்..”

“அப்போ சரி.. நமக்குள்ள கல்யாணம்ல்லாம் வேண்டாம்.. முன்ன மாதிரியே இருப்போம்.. நான் அதுக்கு தயாரா இருக்கேன்..”

“உன்னோட அழகும் புறத்தோற்றத்தை மட்டும் தான் நான் நேசிக்கிறதா நீ நினைச்சிட்டியா? எனக்கு நீ என்கூட இருக்கனும்.. எப்பவும் இருக்கனும்.. அதுமட்டும் தான் எனக்கு வேணும்.. அதை வச்சு யாரும் உன்னை தப்பா சொல்லிடக் கூடாது.. அதுக்கு தான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொல்றேன்..

இப்போ என்ன? உனக்கு கல்யாணத்துல இஷ்டமில்ல அப்படித்தானே, சரி கல்யாணம் செஞ்சுக்க வேண்டாம்.. அதுக்காக நாம இப்படியும் இருக்க வேண்டாம்.. இங்க சென்னை வந்ததுல இருந்து நாம எப்படியிருந்தோமோ? அப்படியே இருப்போம்.. நமக்குள்ள என்னன்னு யார் எப்படி வேணாலும் நினைச்சிக்கிட்டோம்.. நம்ம உறவை காதல்னோ இல்லை கள்ளகாதல்னோ சொல்றாங்களா? சொல்லட்டும், நாம கணவன், மனைவின்னோ  இல்ல கல்யாணம் செஞ்சுக்காமலேயே  வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் இப்படி என்ன வேணாலும் சொல்லட்டும், அவங்க தான் அப்படி பேசறாங்களேன்னு நாமளே நம்ம உறவை கொச்சப்படுத்திக்க வேண்டாம்.. நாம் இப்படியே இருப்போம்.. இப்போ வீட்டுக்கு கிளம்பளாம் வா” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளோ அசையாமல் நின்றாள். அவனோ என்னவென்று அவளை பார்க்க, அவன் அருகில் வந்தவள்,

“எனக்கு தெரியும் உங்களைப்பத்தி, இருந்தும் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்.. நான் உங்க காதலை கொச்சப்படுத்தல.. நாளையிலிருந்து நீங்க சொன்ன மாதிரி இருப்போம்.. ஆனா இன்னைக்கு உங்க விருப்பத்த நான் நிறைவேத்தனும்.. இன்னைக்கு உங்க உணர்ச்சிகளோட நான் விளையாடிட்டேன்.. இப்பவும் எனக்காக தான் என்னை விட்டு விலகிறீங்க.. நானே இன்னிக்கு என்னை உங்களுக்கு தர தயாரா இருக்கேன்..”

“இல்லை.. நாம இப்போ வீட்டுக்கு போகலாம் வா”

“இது இப்போ என்னோட ஆசை.. அதை நிறைவேத்த மாட்டீங்களா? ஒருப் பொண்ணா நானே கேக்கறதால அது தப்பா” என்றவளின் வாயைப் பொத்தியவன், அவளை இரு கைகளால் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

டிகாரத்தின் டிக் டிக் சத்தமும், துஷ்யந்தின் சீரான மூச்சுக் காற்றின் சத்தமும் மட்டுமே அந்த அறையில் கேட்க, நிசப்தமான அந்த அறையில் மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த துஷ்யந்தை, அவனுக்கு எதிர்புறமாக குத்தக்காலிட்டு உட்கார்ந்தப்படி கங்கா பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனமோ இதுதான் அவனிடம் பேசும் நேரம் என்பதை உணர்ந்தப்படி அவனோடு பேசிக் கொண்டிருந்தது.

“இன்னைக்கு இந்த கங்கா உங்களுக்கு நிறைய ஆச்சர்யத்தை கொடுத்தால்ல.. நினைச்சே பார்க்காத அளவுக்கு கொடுத்தால்ல.. இவள் மனம் மாறிடுச்சு, இல்லை சீக்கிரம் மாறிடும்னு நீங்க மனசுக்குள்ள நினைச்சீட்டிங்கல்ல துஷ்யந்த்.. ஆனா நான் உங்களை விட்டு தூரமா விலகிப் போகப் போறேங்கிற விஷயம் உங்களுக்கு தெரியாதில்ல..

நான் உங்களை விட்டு தூரமா போகனுமாம்.. அதுதான் உங்களுக்கு நல்லதாம்.. அதான் நான் உங்களை விட்டு போக முடிவெடுத்துட்டேன்.. உண்மையிலேயே அதுதான் சரியான முடிவுல்ல.. உங்கக் கூட சேர்ந்து வாழாம, உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன் இல்ல.. அதுக்கு பதிலா நான் உங்களை விட்டு போறது நல்லது..  முன்னயாவது நீங்க என்னை விட்டு விலகியிருந்தீங்க.. ஆனா இப்போ காதல், கல்யாணம்னு என்னை சுத்தி சுத்தி வர உங்களோட எதிர்பார்ப்பை என்னால பூர்த்தி செய்யவும் முடியல.. விலக்கி வைக்கவும் முடியல.. அதான் உங்களை விட்டுட்டுப் போக முடிவுப் பண்ணிட்டேன்..

நான் ஒரு சுயநலவாதி.. என்னைப் பத்தி, என்னோட உணர்வுகள் பத்தி மட்டுமே யோசிக்கிறேன்.. என்னோட மன உறுதி தளர்ந்து போய்டக் கூடாதுன்னு மட்டுமே நினைக்கிறேன்.. இப்படி சுயநலவாதியான நான் உங்களுக்கு வேண்டாம்..

விலகிப் போறதுன்னு முடிவு செஞ்ச நீ எதுக்கு இன்னிக்கு இப்படி என்னோட உணர்வுகளோடவும் உணர்ச்சிகளோடவும் விளையாடின.. எதுக்கு நாள் முழுக்க என்னோடவே இருந்து, என்னை விட்டு பிரிய நினைக்கிறேன்னு நீங்க கேக்கலாம்.. போறதுக்கு முன்னாடி ஒருநாளாவது உங்க பொண்டாட்டியா உங்கக் கூட வாழனும்னு எனக்கு ஆசை.. ஊரறிய உங்க பொண்டாட்டிங்கிற உரிமை தான் எனக்கு கிடைக்கல.. இருந்தும் என் மன திருப்திக்காகயாவது நான் உங்கக் கூட ஒருநாளாவது இருக்கனும்னு நினைச்சேன்..

அதுமட்டுமில்ல, 3 மாசம் உங்க கூட வாழ்ந்த வாழ்க்கையில எனக்கு கிடைக்காத வரம், இப்போ கிடைக்கனும்.. என்னன்னு கேக்கறீங்களா? நான் உங்க குழந்தைக்கு அம்மாவாகனும்.. உங்க ஞாபகமா உங்க குழந்தையை வளர்த்துக்கிட்டு, இந்த துஷ்யந்தோட சகுந்தலையா எங்கேயாச்சும் ஒரு மூலையில நானும் உங்க குழந்தையும் வாழ்ந்திடுவோம்..

பார்த்தீங்களா? இப்போக் கூட நான் போயிட்டா நீங்க என்னவாகுவீங்கன்னு கவலைப்படாம.. குழந்தை வேணும்னு சுயநலாமா யோசிக்கிறேன்.. இப்படிப்பட்ட சுயநலவாதி உங்களுக்கு வேண்டாம்ங்க.. என்னை மறந்திடுங்க.. ஆரம்பத்துலயே துஷ்யந்தன் சகுந்தலாவ மறந்து போனது போல, நீங்க என்னை மறந்து போயிருந்தீங்கன்னா பிரச்சனையில்லை.. இருந்தாலும் இனி என்னை மறந்திடுங்க.. உங்களுக்காக வர்றவளை நேசிங்க.. என்னைக்கும் நீங்க சந்தோஷமா இருக்கனும்.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க..” என்று மனதிற்குள் மருகியவள்,

“ சாரி துஷ்யந்த்.. சாரி..” என்று அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அதில் தூக்கம் கலைந்தவன், லேசாக கண் திறந்து பார்த்து,

“தூங்கலையா?” என்று கேட்க, அவள் இல்லையென்று தலையாட்டினாள். உடனே அவளை படுத்தப்படியே தன் மார்பில்அவன் சாய்த்துக் கொள்ள, கண்களில் கண்ணீர் வராமல், மனதிற்குள் மௌனமாக அழுதவள், அப்படியே அவன் மார்பிலேயே உறங்கிப் போனாள்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 30

Episode # 32

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.