(Reading time: 28 - 56 minutes)

32. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ங்கா கண் விழித்த போது, துஷ்யந்த் அருகில் இல்லை.. படுக்கையை விட்டு எழுந்தவள், அப்போது தான் அந்த அறையை சுற்றி ஒரு பார்வை பார்த்தாள்.. அந்த அறையில் ஒருவர் தினம் வசிப்பது போல் இருந்தது.. அவன் அடிக்கடி இங்கு வருவான் போலும், என்று நினைத்துக் கொண்டவள், தன் கைப்பையிலிருந்து துணிமணிகளை எடுத்துக் கொண்டு, அந்த அறையிலிருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்.

குளித்து முடித்து தலையில் கட்டிய துணியோடு வெளியே வந்த போது, துஷ்யந்த் கையில் காஃபி தட்டோடு வந்தான்.

“குட் மார்னிங் கங்கா..”

“குட் மார்னிங்..”

“ஹீட்டர் ஆன் பண்ணி வச்சுட்டு போனேனே! சுடுதண்ணியில தான குளிச்ச?” என்று கேட்டவனின் பேச்சில் ஏதோ தயக்கம் இருந்தது..

“ம்ம் ஆமாம்..” என்றவள், அவன் கையிலிருந்த காஃபி தட்டில் இருந்த ஒரு கோப்பையை எடுத்தப்படி, அங்கே கட்டிலில் அமர்ந்தாள். அவனும் அவனுக்கான கோப்பையை எடுத்தவன், அங்கே  பக்கத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

“இங்க அடிக்கடி வருவீங்களா?” காஃபியை சுவைத்தப்படி கேட்டாள்.

“ஆமாம்.. இங்க வந்து தனிமையில் இருக்க ரொம்ப பிடிக்கும்.. இங்க இருந்தா குன்னூர்ல இருக்க ஒரு ஃபீல் கிடைக்கும்.. இங்க வந்து உன் நினைவுகளோட தோட்டத்தை சும்மா சுத்திக்கிட்டு இருப்பேன்.. கதிரேசனும் செல்வி அக்காவும் கூட, ஏதாவது வேலை இருந்தா முடிச்சிட்டு, எனக்கு ஏதாவது சமைச்சு வச்சிட்டு கிளம்பிடுவாங்க..” சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்கள் மட்டும், கங்காவை நேருக்கு நேராக சந்திக்க தயங்கியது..

“என்னாச்சு.. ஏன் ஒரு தயக்கத்தோட பேசறீங்க? ஏதாச்சும் பிரச்சனையா?”

“இல்ல கங்கா.. என்ன இருந்தாலும் நேத்து நான் உன்னை நெருங்கியிருக்கக் கூடாது.. உன்னை சென்னைக்கு கூட்டிட்டு வரப்போ நான் சொன்னது என்ன? நேத்து நடந்தது என்ன? நினைக்கும் போதே மனசுக்கு உறுத்தலா இருக்கு”

“என்னவோ என்னோட அனுமதியில்லாம என்னை தொட்டா மாதிரி பேசறீங்க.. என்னோட விருப்பப்படி, நான் கேட்டதால தான இது நடந்தது.. அப்புறம் ஏன் உறுத்தல்? எனக்கு உங்களை பத்தி நல்லா தெரியும்.. நேத்து தான் நான் அனுமதி கொடுத்துட்டேனேன்னு இப்படி அடிக்கடி நடந்துக்கனும்னு நீங்க நினைக்கவே மாட்டீங்க.. அதனால அதைப்பத்தி யோசிக்கிறத விடுங்க..”

“அப்புறம்.. நாம இப்பவே கிளம்பளாமா? இல்ல செல்வி அக்கா காலையில டிஃபன் செய்றேன்னு சொன்னாங்க.. அதை சாப்ட்டு கிளம்புவோமா? ஏன் கேக்கறேன்னா, நான் நேத்தே டெல்லிக்கு போக வேண்டியது.. ஆனா நீ நேத்து என்கூட இருக்கப் போறேன்னு சொன்னதும், நேத்து டிக்கெட்டை கேன்சல் செஞ்சுட்டு, இன்னைக்கு மதியத்துக்கு மேல போலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.. அதுவரைக்கும் என்னோட பி.ஏ வை எல்லாம் பார்த்துக்க சொல்லி சொல்லிட்டேன்,ஆனா மீட்டிங் பத்தி ஒரு வீடியோ கால் பேச வேண்டியிருக்கு.. கொஞ்சம் இன்ஃபர்மேஷனும் கேதர் செய்யனும்.. அதான் நம்ம கிளம்பனும்னா, வீட்டுக்கு போய் பார்த்துப்பேன்.. இல்ல இப்பவே, அந்த வேலையை பார்ப்பேன்..”

“எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை.. நாம சாப்ட்டே கிளம்புவோம்.. நீங்க போய் வேலையைப் பாருங்க..”

“சரி.. நான் செல்வி அக்காக்கிட்ட டிஃபன் செய்ய சொல்றேன்.. பக்கத்து ரூம்ல தான் இருப்பேன்.. தலையில ரொம்ப நேரம் ஈரத் துணியை கட்டிக்கிட்டு இருக்காம காய வை.. வேணும்னா டிவி பாரு.. இல்ல ப்ளேயரில் பாட்டுக் கேளு..” என்றவன், அறையிலிருந்து வெளியேறியதும், ஒருமுறை கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்..

ஒருநாள் முழுதும் உங்களோடு இருக்க வேண்டுமென்று கணக்கு சொன்னவள், காலையில் சரியாக எட்டானதும் கிளம்ப தயாராவாளோ! என்று எதிர்பார்த்தவனுக்கு, அவளை இன்னும் சிறிதும் நேரம் இங்கே தங்க வைக்க ஆசை வந்தது.. நேற்று ஒருநாள் அவன் மனதில் அடக்கி வைத்திருந்த ஆசையை, அவளின் நடவடிக்கைகள் வெளிக்கொண்டு வந்திருந்தது.. அவள் சொன்னதுபோல், நேற்று இரவு அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை மீண்டும் மீண்டும் அவன் எதிர்பார்க்காவிட்டாளும், அவளோடு இன்னும் சிறிது நேரம் இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்ற ஆசையை அவனால் ஒதுக்கி வைக்க முடியவில்லை.. ஆனால் அவள் என்ன சொல்வாளோ? என்ற தயக்கம் இருக்க, அவளோ சர்வ சாதாரணமாக ஒத்துக் கொண்டதில் மனதிற்குள் நிம்மதி எழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.