(Reading time: 28 - 56 minutes)

ருவரும் ஜோடியாக வரும் காட்சியை பார்த்து வாணியின் மனதிற்கு நிறைவாக இருந்தது..  அவர்கள் இருவரும் நேற்று ஜோடியாக சென்றதையும், இன்று ஜோடியாக இறங்கியதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஆளாளுக்கு ஒவ்வொன்றை நினைத்துக் கொண்டனர்.. இதையெல்லாம் கங்கா  முன்பே பெரிதாக நினைப்பதில்லையென்றாலும், தன் நடவடிக்கைகளில் எப்போதும் கவனமாக இருப்பவள், இன்று அதையெல்லாம் தன்னை விட்டு தள்ளி வைத்திருந்தாள்.

உள்ளே வந்தவன் வாணியிடம் பொதுவாக பேசிவிட்டு, சில நிமிடங்களிலேயே கிளம்புவதாக சொல்ல, “இருங்க தம்பி.. கொஞ்சம் டீ யாவது குடிச்சிட்டுப் போங்க..” என்று, தேநீர் தயாரிக்க சமயலறை சென்றதும், துஷ்யந்தோ கங்காவின் கையைப் பிடித்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றான்..

“நீ சொன்ன மாதிரி.. ஒருமுறை தான் நீ அனுமதி கொடுத்திட்டியேன்னு திரும்ப உன்கிட்ட அதை அடிக்கடி எதிர்பார்க்க மாட்டேன் தான்.. ஆனா இப்போ மட்டும் அதை கொஞ்சம் மீறிக்கிறேன்.. அதுவும் இந்த ஒன்னுக்காக மட்டும் தான்..” என்றவன், அவளை தன்னோடு இழுத்து, அவள் இதழ்களை தன் வசமாக்கிக் கொண்டான்.

மனம் வரவில்லை.. அவளை விட்டு செல்ல அவனுக்கு மனம் வரவேயில்லை.. இருந்தும் அலுவலக வேலைக்காக, கட்டாயம் செல்ல வேண்டியிருந்தது.. இருந்தாலும் அவளை அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனம் துடித்தது.. ஏனென்று தெரியவில்லை? குன்னூரில் அவர்களுக்குள் பிரிவு வந்த நாளன்று எப்படி முன்பே மனம் நிலைக் கொள்ளாமல் தவித்ததோ! அதேபோல் ஒரு உணர்வு தான் இன்றும் அவனை காலையிலிருந்து ஆட்டிப்படைத்தது..

ஒருவேளை திரும்ப தன்னை விட்டு அவள் விலகி சென்றுவிடுவாளோ? அதனால் தான் இன்றும் மனம் நிலைக்கொள்ளாமல் தவிக்கிறதோ? என்று உள்ளுணர்வு உணர்த்தினாலும், இல்லை! அவள் மனதில் மாற்றம் வந்திருக்கிறது.. என்ன ஏதோ ஒரு காரணம் தான் அவள் திருமணம் வேண்டாமென்று மறுக்கிறாள்..  அதுவும் நாளைடைவில் சரியாகி, அவள் விரைவில் திருமணத்திற்கு சம்மதிப்பாள்.. என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.. இருந்தாலும் அவன் தவிப்பை போக்கிக் கொள்ள, அவனுக்கு இந்த இதழொற்றல் அவசியமாகியிருந்தது..

கங்காவும் அவன் செய்கைக்கு ஒத்துழைப்பு தந்ததால், அந்த நொடிகள் நிமிடங்களாய் நீண்டது,பின் அரை மனதோடு அவளை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான்.. அவள் வாசமும், இதழொற்றலுமே, இப்போதைக்கு போதும் என்று நினைத்தவன், வாணியிடம் தேனீரை மறுத்து, இருவரிடமும் விடைப்பெற்றுச் சென்றான்.

தியத்திற்கு மேல் டெல்லி கிளம்புவதற்கு முன் துஷ்யந்த் விமான நிலையத்தில் இருந்து பேசினான். எப்போதும் போல வேலையை நன்றாக முடிக்க சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்தாள். அந்த நேரம் வாணி மார்க்கெட்டிற்கு சென்றிருந்தார்.. அப்போது யமுனாவிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.. அதைப்பார்த்து அதை ஏற்றாள்.

“சொல்லு யமுனா..”

“அக்கா.. ஞாயிற்றுக் கிழமை விருந்துக்காக நாங்க இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறோம்..” என்று அவள் சொன்ன போது, அப்போது தான் இளங்கோவும் யமுனாவும் விருந்துக்காக ஊருக்கு செல்ல இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

“ம்ம் நல்லது யமுனா.. முன்னமே போனா, நீங்களும் ரெண்டுநாள் அங்க இருந்த மாதிரி இருக்கும்.. விருந்து ஏற்பாட்டுக்காக நீங்க ரெண்டுப்பேரும் உதவின மாதிரியும் இருக்கும்..”

“ஆமாம்க்கா.. அதான் பதிப்பகத்துக்கு நாளைக்கு லீவ் விட்டுட்டோம்.. நானும் இப்போ லீவ்ல தான இருக்கேன்.. நான் எதுக்கு இப்போ போன் பண்ணேன்ன்னா.. நீயும் வாணிம்மாவும் இன்னைக்கே எங்கக் கூட வர்றீங்களா? இல்லை நாளைக்கு கிளம்பி வர்றீங்களான்னு கேக்க தான்”

“இல்ல யமுனா.. நான் வரப் போறதில்ல.. வீட்லயே ஏற்பாடு செஞ்சிருக்க விருந்து தானே? நீயும் இளங்கோவும் மட்டும் போய்ட்டு வந்துடுங்க..”

“ஏன்க்கா.. நீயும் வந்தா நல்லா இருக்குமில்ல.. ஏற்கனவே நர்மதா வருவாளான்னு கேட்டேன், அவளும் இதே ரீஸன் தான் சொன்னா.. நீயும் இப்படி சொல்ற.. என்ன இருந்தாலும் அந்த ஊரு எனக்கு புதுசு இல்லையா?”

“என்ன புதுசு.. இளங்கோ குடும்பம் இனி உன்னோட குடும்பம் இல்லையா? உன்னோட குடும்பமே உன்கூட இருக்கப்ப, என்ன கவலை? இங்கப்பாரு யமுனா, நான் வந்தா நிறைய பேரோட கேள்வி பார்வையை சந்திக்க வேண்டி வரும்.. அதனால எனக்கென்ன ஆனாலும் பரவாயில்ல.. ஆனா நீ அடிக்கடி அங்க போக வேண்டியிருக்கும்.. அதனால நான் வராம இருக்கறது தான் நல்லது..”

“அதான் எனக்கு நல்லப்படியா கல்யாணம் ஆயிடுச்சே! அப்புறம் என்னக்கா..”

“இருந்தாலும் என்னை வச்சு நீ என்னைக்கும் அவமானப்படக் கூடாது யமுனா.. அதுக்கு தான் சொல்றேன், புரிஞ்சிக்க.. “

“இளன் அப்பவே சொன்னாரு.. நீ எப்படி கூப்பிட்டாலும் கங்கா வரமாட்டா.. அதனால அவ இஷ்டத்துக்கே விடுன்னு சொன்னாரு.. ஆனா நான் தான் பேசிப் பார்க்கிறேன்னு சொன்னேன்.. கடைசியில் என்னோட முயற்சி தோல்வி தான்.. ஆனா இளங்கோ உன்னை புரிஞ்சு வச்சிருக்கும் அளவுக்கு கூட, நான் உன்னை புரிஞ்சிக்கலையே அக்கா.. அதான் எனக்கே கஷ்டமா இருக்கு..”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. நீயும் என்னை நல்லா தான் புரிஞ்சு வச்சிருக்க.. அதனால இதுக்கு வருத்தப்படல்லாம் ஒன்னுமில்ல.. இந்த நேரம் நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்.. புரிஞ்சுதா..??”

“சரிக்கா.. அப்போ நீ வரலன்னா.. வாணிம்மாவும் உனக்கு துணையா இருக்கறதுக்காக, ஊருக்கு வரமாட்டாங்க.. இருந்தும் ஒரு வார்த்தை வாணிம்மாக்கிட்ட சொல்லிட்றேன்.. அவங்களை கூப்பிடு..”

“அவங்க இப்போ வீட்ல இல்ல.. அதுவும் இல்லாம இப்படி ஃபார்மாலிட்டிக்காக சொல்லனும்னு அவங்க எதிர்பார்க்கவும் மாட்டாங்க.. நானே அவங்கக்கிட்ட சொல்றேன்..”

“சரிக்கா.. நாங்க அப்போ ஊருக்குப் போனதும் பேசறோம்..” என்றவள் அழைப்பை துண்டித்தாள். பின் கங்கா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்த வாணி.. வந்ததும் வராததுமாய், முதலில் கங்காவிடம் தன் தங்கை வீட்டுக்கு செல்ல போவதாக கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.