(Reading time: 28 - 56 minutes)

ன்ன வாணிம்மா திடிர்னு?”

“அது ரெண்டுநாள் முன்னாடி.. ஊருக்கு போனா என்னன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. அதுக்கேத்த மாதிரி, அவளோட மாமியார் வீட்டு ஆளுங்க எல்லாம் வண்டி வச்சு, அங்க இருக்கும் அவங்க குலதெய்வ கோவிலுக்கு இன்னைக்கு போறாங்களாம்.. நீயும் வாக்கான்னு அவ கூப்பிட்டா.. இப்போ தான் மார்க்கெட்க்கு போயிட்டு வரும்போது பேசினா.. ஆனா பார்க்கலாம்னு சொல்லி வச்சிருக்கேன்..”

“ஏன் வாணிம்மா.. அவங்கக் கூட போக வேண்டியது தானே!! தனியா போகனும்னா அதுவும் ஒரு மாதிரி இருக்குமில்ல..”

“அது இளங்கோவும் யமுனாவும் விருந்துக்கு ஊருக்குப் போயிடுவாங்கல்ல.. துஷ்யந்த் தம்பியும் இல்ல.. அதான் உன்னை எப்படி தனியா விட்டுட்டு போறதுன்னு தயக்கமா இருக்கு..”

“இதான் பிரச்சனையா வாணிம்மா.. நானும் அவங்கக் கூட ஊருக்கு போலாம்னு இருக்கேன்.. அதாவது நம்ம ரெண்டுப்பேரும் அவங்க கூட ஊருக்கு வரப்போறோம்னு இப்போ தான் யமுனாக்கிட்ட போன்ல சொன்னேன்.. அவங்க இன்னைக்கு நைட்டே போலாம்னு சொன்னாங்க.. அதனால இப்போ நீங்க வேணும்னா உங்க தங்கையை பார்க்க போங்க, நான் அவங்கக் கூட ஊருக்குப் போறேன்..”

“நிஜமாவா சொல்ற கங்கா.. நீ எப்படியும் அங்க போப்போறதில்லன்னு சொல்லுவேன்னில்ல நினைச்சேன்.. ஆனா நேத்துல இருந்து நீ மாறித்தான் போயிட்ட.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு கங்கா..” என்றவர்,

“இந்த மாற்றம் எப்பவும் நிலைச்சு இருக்கனும் கங்கா.. திரும்ப நீ பழைய மாதிரி மாறிடக் கூடாது.. உன்னை யாரும் திரும்ப காய்ப்படுத்திடக் கூடாது.. அதுக்கு எல்லாம் சரியாகனும்.. அதான் நான் உடனே ஊருக்கு போகனும்னு நினைக்கிறேன்.. இந்த முறை மட்டும் எல்லாம் நல்லப்படியா நடந்தா நல்லா இருக்கும்.. அப்புறம் உன் வாழ்க்கையில எப்போதும் சந்தோஷம் தான்..” என்று மனதிற்குள் நினைத்தார்.

“இருந்தாலும்.. நான் விருந்துக்கு வரலன்னா இளங்கோ கோவிச்சிக்க மாட்டானா? கங்கா..”

“நம்ம இளங்கோ பத்தி உங்களுக்கு தெரியாதா? அதெல்லாம் சொன்னா இளங்கோ புரிஞ்சிப்பான்.. நீங்க முதலில் உங்க தங்கச்சிக்கிட்ட பேசிட்டு.. அவங்க சொந்தக்காரங்க எப்போ கிளம்பறாங்கன்னு கேளுங்க..” என்றதும், வாணியும் அலைபேசியில் தன் தங்கை எண்ணை அழுத்தியப்படியே, கொஞ்சம் தள்ளிச் சென்றார்.

“ஒரு நல்லது நடக்கனும்னா அதுக்கு நேரம், காலம் கூடி வரும்னு சொல்வாங்க.. நான் துஷ்யந்தை விட்டு விலகிச் செல்வது தான் நல்லது போல.. அதான் நான் போகனும்னு முடிவெடுத்ததுக்கு தகுந்த மாதிரி இப்போ எல்லோரும் ஊருக்கு கிளம்பறாங்க..இதுதான் நான் கிளம்ப சரியான நேரம்.. எல்லோரும் திரும்ப ஊர்ல இருந்து வர்றதுக்குள்ள நான் கிளம்பியே ஆகனும்..” என்று கங்கா தீர்மானித்துக் கொண்டாள்.

அன்று இரவே யமுனா இளங்கோ அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டனர்.. வாணியும் அவர்கள் உறவுக்காரர்களோடு தன் தங்கையை பார்க்க கிளம்பிவிட்டார்.. அடுத்து, தான் செய்ய நினைத்த காரியத்தை செயலாற்றினாள் கங்கா.. முதலில் மதர் ஜெர்மனுக்கு அலைபேசியின் மூலம் அழைப்பு விடுத்தவள், நாளையே பாண்டிச்சேரிக்கு வந்துவிடுவதாக கூறினாள். அடுத்து ரம்யாவிற்கு அழைப்பு விடுத்தாள். சில நொடிகளுக்கு பிறகு அழைப்பு ஏற்கபட்டது.

“ஹலோ அக்கா.. என்னக்கா இந்த நேரம் போன் பண்ணிருக்கீங்க..”

“ரம்யா.. ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் போன் பண்ணேன்..”

“சொல்லுங்கக்கா..”

“ரம்யா.. நான் இல்லாத நேரத்துல நீதான் இன்ஸ்டிட்யூட்டை பொறுப்பா பார்த்துக்கனும்.. கத்துக்கிற பசங்க எந்த லெவலில் இருக்காங்கன்னு பார்த்து தொடர்ந்து அவங்களுக்கு கத்துக் கொடுக்கனும்.. அப்படியே யாரெல்லாம் நம்மக்கிட்ட துணி கொடுத்துருக்காங்களோ.. அவங்களுக்கு சொன்ன தேதியில் கரெக்டா தைச்சு கொடுக்கனும் புரியுதா..?”

“என்னக்கா.. இதெல்லாம் நீங்க சொல்லனுமா? ஆனா எதுக்காக இப்போ இதை சொல்றீங்க..” என்றுக் கேட்டவள், பின் நினைவு வந்தவளாக,

“ஓ இளங்கோ அண்ணா ஊருக்குப் போறிங்களா? அண்ணா என்னையும் கூப்பிட்டாங்க.. ஆனா அம்மா தான், அதான் கல்யாணத்துக்கு போனியே? அப்புறம் திரும்ப எதுக்கு போகனும்.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அதுவும் நல்லதுக்கு தான்.. இப்போ நீங்க இல்லாத நேரம், நான்தானே இன்ஸ்ட்டியூட்டை பார்த்துக்கனும்..”

“ஆமாம் அதுக்கு தான் சொல்றேன்.. இனி அந்த இன்ஸ்ட்டியூட் உன்னோடது.. அப்படி நினைச்சு நீயே பார்த்துக்கனும்..”

“என்னக்கா.. அதெல்லாம் நான் நல்லா பார்த்துப்பேன்.. ரெண்டு நாள் என்ன? நீங்க ஒரு வருஷம் கழிச்சு வந்தாலும், நான் பொறுப்பா பார்த்துப்பேன்..”

“சரி ரம்யா..” என்று அழைப்பை துண்டித்தவள், பின் நாளை காலையில் கிளம்புவதற்கு எல்லாம் தயார்செய்தாள்.. பின் செல்வாவின் அலைபேசி எண்ணுக்கு “நான் நாளை கிளம்பிவிடுவேன்..” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

ஆமாம் இப்படி திடீரென துஷ்யந்தையும் மற்ற அனைவரையும் விட்டு அவள் விலகி செல்ல முடிவெடுத்ததற்கு காரணம் செல்வா தான்.. அன்று திருமணத்தில் தன் சகோதரனின் செயல்களை பார்த்த செல்வாவிற்கு அவர்களுக்குள் இருக்கும் தொடர்பை பற்றி லேசாக சந்தேகம் எழுந்தது. நர்மதாவும் விரைவில் அதைப்பற்றி செல்வாவிடம் பேச வேண்டுமென்று நினைத்திருந்தாள்.. ஆனால் அதற்குள்ளேயே, செல்வாவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் ஒன்று நடந்தது..

அன்று திருமணத்திற்கு துஷ்யந்தும் செல்வாவும் ஒரே காரில் வந்தனர்.. திருமணத்திற்கு என்று ப்ரத்யேக உடை அணிந்ததால், கையோடு அலுவலகம் செல்வதற்கான உடையை இருவரும் காரில் வைத்திருந்தனர்.. அலுவலகம் சென்றதும் மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.. ஆனால் கங்காவிற்கு சூடு காயம்பட்டதும் அவளை துஷ்யந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால், நர்மதாவும் யமுனாவுடன் இருந்துவிட்டு மாலை வருவதாக சொன்னதால், செல்வா ஒரு வாடகைக்கார் எடுத்து, முதலில் வீட்டுக்குச் சென்று உடைமாற்றி, பின் தன்னுடைய காரில் அலுவலகம் கிளம்பலாம் என்று முடிவு செய்து அதுப்படி கிளம்பினான்.  வீட்டுக்கு வெளியிலேயே வாடகை காருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தவன், நடந்தே உள்ளே சென்றதால், கோமதியும் விஜியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.