(Reading time: 28 - 56 minutes)

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அலுவலக வேலையில் மூழ்கியிருந்த துஷ்யந்த் இரண்டு கைகளையும் நீட்டி சோம்பல் முறித்தப்படி அவனிருந்த அறையில் இருந்து வெளியே வந்தவன், நேராக கங்கா இருக்கும் அறைக்குச் சென்றான்.. ஆனால் கங்கா அங்கு இல்லை.. அவள் எங்கே போனாள்? என்று தேடியப்படியே, அவன் பின் வாசலோடு இருந்த சமையலறை பக்கம் சென்றபோது, கங்காவோ கதிரேசன், செல்வி தம்பதியரோடு பேசிக் கொண்டிருந்தாள்.. கூட அவர்களது இரு பிள்ளைகளும் உடனிருந்தனர்..

அவளது நீள கூந்தலின் ஈரத்தை காய வைப்பதற்காக, கூந்தலை விரித்து, இருப் பக்கமும் முடி எடுத்து பைப்பின்னலிட்டிருந்தாள்.. அவளைப் பற்றி யாரும் எதுவும் அவளிடம் கேள்வியெழுப்பக் கூடாது என்பதற்காகவே யாரோடும் பழக தயங்குபவள், அவர்களோடு இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தாள். அவளை இப்படி பார்த்தபோது, “இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாதா?” ஏதோ எப்போதோ கேட்ட பாடலின் ஒரு வரி ஞாபகத்திற்கு வந்தது.. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நேற்றிலிருந்து அவள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தாலும், அவன் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா? என்பதில் சிறு சந்தேகம் இருந்தது. அவன் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு,

“கங்கா..” என்று அழைத்தப்படியே, அவர்கள் அருகில் அவன் செல்ல, அவளும் அவனை திரும்பிப் பார்த்தாள்..

“வேலையெல்லாம் முடிச்சீட்டீங்களா? செல்வி அக்கா டிஃபன் செஞ்சு வச்சுட்டாங்க.. சாப்பிடலாமா?” என்று கேள்வியெழுப்பினாள்.

“ம்ம்..” என்று அவன் தலையசைத்ததும், செல்வியும் அவளுமே சேர்ந்து டைனிங் டேபிளில் சமைத்து வைத்ததை கொண்டு வந்து வைத்தனர்.. பின் இருவருக்கும் தனிமை கொடுத்து, செல்வி, கதிரேசனின் தம்பதிகள் அவர்களின் பிள்ளைகளோடு தோட்டத்து பக்கம் சென்றனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு பேசியப்படியே சாப்பிட்டனர்.. பின், தான் தயாராகி வருவதாக சொல்லிவிட்டு கங்கா அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வந்தவள், நேற்று துஷ்யந்த் வாங்கி தந்திருந்த, புடவை மற்றும் நகைகளை அணிந்துக் கொண்டிருந்தாள்.. அவன் கண்கள் இமைக்க மறந்தது.. அவளுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்ததை அவள் அணிந்து கொண்டு கண்முன் வந்து நிற்பாளென்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. வியப்பில் ஆழ்ந்திருந்தவனின் அருகில் வந்தவள், “நான் எப்படி இருக்கேன்..” என்றுக் கேட்டாள்.

“இன்னும் வியப்பு விலகாமல், “ எப்படி? நேத்து தானே இந்த சாரி எடுத்தோம்.. அதுக்குள்ள ப்ளவுஸ்ல்லாம் ஸ்டிச் பண்ணி.. இவ்வளவு சீக்கிரமா?” என்றுக் கேட்டான்.

“ஹலோ.. நான் ஒரு டெய்லர், ஞாபகம் இருக்குல்ல?”

“டெய்லர்னு தெரியும்.. ஆனா மிஷின் இல்லாம ஸ்டிச் பண்ற அளவுக்கு பெரிய டெய்லர்னு தெரியாதே!!”

“என்ன கிண்டலா? செல்வி அக்காவும் டெய்லர்.. அவங்க வீட்ல மிஷின் இருந்துச்சு.. அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி வண்டியில எடுத்துட்டு வந்தாங்க..”

“ஆனா இப்படி இவ்வளவு அவசரமா தைச்சு, இன்னிக்கே இந்த சாரிய கட்டனும்னு என்ன அவசியம்?” மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாளும், இப்படி வெளியே வந்த இடத்தில் இவள் இவ்வளவு சிரமப்பட என்ன அவசியம்? என்பதால் கேட்டான்.

இதற்குப்பிறகு அவனை பார்க்க முடியாது என்பதால், இப்போதே அவன் வாங்கிக் கொடுத்ததை அவனுக்கு அணிந்துக் காட்ட வேண்டும் என்று தான் அவள் இவ்வளவு மெனக்கிட்டதே! இருந்தும் அதை அவனிடம் சொல்ல முடியுமா?

“எனக்கு இப்பவே உங்களுக்கு இதை கட்டி காட்டனும்னு தோனுச்சு.. இதுல எனக்கோ, இல்லை செல்வி அக்கா குடும்பத்துக்கோ எந்த சிரமும் இல்லை. அதனால கேள்வியெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு, நான் எப்படி இருக்கேன்னு சொல்லுங்க” என்றாள்.

“உனக்கென்ன.. ரொம்ப அழகா இருக்க! ஆனா ஏதோ ஒரு குறை..” என்று அவன் அவளை ஆராய,

“இதுதான்..” என்றப்படி தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகையை நெருக்கமாக தொடுத்து கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தார் செல்வி.

கங்காவின் அருகே வந்து அதை அவள் தலையில் சூட்டினார். “என்ன அக்கா.. இன்னிக்கு பூத்த பூவெல்லாம் எனக்கே வச்சிட்டீங்க.. உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் கொஞ்சம் எடுத்து வச்சிருக்கலாமே!!”

“இருக்கட்டும்மா.. தினம் நாங்க தானே வச்சிக்கிறோம்.. இன்னைக்கு நீ வச்சிக்க..” என்றவர், “இன்னொன்னும் குறையுதே..” என்று சொல்லியப்படி, ஒரு அறைக்குள் சென்றார்.. பின் திரும்ப வரும்போது, கையில் குங்கும சிமிழோடு வந்தவர், கங்காவின் நெற்றியிலும், நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்தார்.

நேற்று ஒருப் பெண்ணோடு வந்ததை பார்த்து இவர்கள் மனதில் கண்டிப்பாக கேள்வியெழும் என்பது துஷ்யந்த் அறிந்த ஒன்று தான்.. ஆனால் கங்கா வர சம்மதித்ததும் அவன் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. மாலை ஆனதும் அவளை கூட்டிச் சென்றுவிடுவோம் என்று தானே இருந்தான்.. ஆனால் இங்கு இரவு தங்க நேர்ந்த போது, கண்டிப்பாக இவர்கள் தவறாக நினைக்கவும் வாய்ப்பு உண்டு என்று அவன் நினைத்திருந்தான்.. இப்படி கங்காவுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க, அவன் எப்போதும் நினைத்ததில்லை.. இருந்தும் கங்காவின் நடவடிக்கையால் அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தான்.

இருந்தும் செல்வி இப்போது செய்யும் காரியத்தை பார்க்கும் போது, அவள் எந்த மாதிரியான உறவாக இவர்கள் இருவரையும் நினைத்திருக்கிறாள் என்பது துஷ்யந்திற்கு புரிய வந்தது.. செல்வியின் செயலை கங்கா எப்படி எடுத்துக் கொள்வாளோ? என்ற பரிதவிப்புடன் அவளை பார்த்தான்.. ஆனால் செல்வி குங்குமம் வைக்கும்போது, கங்கா அதை கண்களை மூடி மனமாற ஏற்றுக் கொண்டதை பார்த்து கொஞ்சம் குழம்பி தான் போனான்.

இவனை தள்ளி வைக்க மட்டுமே அவள் தாலியை ஒரு வேலியாக பயன்படுத்துகிறாளே தவிர, மனதார அவள் தன் கழுத்தில் இருக்கும் தாலிக்கு மதிப்பு கொடுப்பதாக அவளின் நடவடிக்கைகள் இல்லை.. அன்று கௌரி நோன்பு இருந்ததாக சொன்னதற்கு கூட வேறு ஏதோ காரணத்துக்காக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டான்.. ஆனால் நேற்றிலுருந்து அவள் நடவடிக்கைகள் முற்றிலு மாறுதலாகவே இருந்தது. அது அவளிடம் வந்த மாற்றமா? இல்லை வேறு ஏதும் காரணமா? புரியாமல் குழம்பினான். பின் இருவரும் கதிரேசன், செல்வி குடும்பத்தினரிடம் விடைப்பெற்றுக் கொண்டு சென்னைக்கு கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.