(Reading time: 16 - 31 minutes)

16. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

வீட்டிற்கு வந்த மருமகளிடத்தில் இன்முகமாகவே நடந்து கொண்ட கலைவாணி, மகனிடம் மட்டும் ஓர் வார்த்தை கூட அதன் பின் பேசிடவில்லை…

ப்ரசன் எவ்வளவோ எடுத்துக்கூறியபோதும், ஒரு தாயாக அவர் ரஞ்சித் மீது கொள்ளும் கோபம் அவ்வளவு எளிதில் போய்விடாது என்பதை அவன் உணர்ந்தும் கொண்டான்…

வீட்டில் நடந்த பிரச்சினைகளில் சந்தோஷிதாவின் நினைவுகளை அவன் மறந்திடவில்லை…

அவளை சென்று சந்திக்கத்தான் வாய்ப்பு கிட்டிடவில்லை… ஆனால் அதுவுமே அவனுக்கு ஓர்நாள் கிட்டிட, அவளை சந்திக்கப்போகும் சந்தோஷத்துடன் அவள் படித்திடும் கல்லூரிக்குச் சென்றான் அவன்…

பதட்டமும், கொஞ்சம் வெட்கமும் கலந்தவாறு கல்லூரி வாசலில் அவள் வரும் தருணத்திற்காக காத்திருக்க தொடங்கினான் அவன்….

கல்லூரி முடிந்து அனைவரும் வெளியே வந்திட, அவன் பைக்கின் மீதிருந்து எழுந்து கொண்டான்…

அவளைத் தேடி அலைந்த விழிகளில் அவளின் உருவம் தென்பட, விரிந்து மலர்ந்த இதழ்கள், சட்டென தன் சிரிப்பை தொலைத்திட,

“வரேன்…” என கைகளை ஆட்டி, தோழிகளிடம் சொல்லியவள், தன் முன்னே வந்து நின்ற பைக்கில் இருந்தவனை பார்த்து சிரித்துக்கொண்டே அவனருகே சென்று, அவன் பின்னே பைக்கில் அமர்ந்து கொள்ள அவனும் வண்டியை திருப்பினான் புன்னகைத்தபடி…

அவள் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமம், அவளது கழுத்தில் இருந்த தாலி, அவள் கால் விரல்களில் இருந்த மெட்டி அனைத்தும் அவர்களது உறவு முறையினை சொல்லாமல் சொல்லிட, கையில் ஆசையோடு வைத்திருந்த பூங்கொத்து அவனது கரம் விட்டு நழுவி தரையில் விழுந்தது பட்டென….

சந்தோஷிதா…. எந்த பெயரை நொடிக்கொரு தரம் சொல்லி மகிழ்ந்து கொண்டானோ, இன்று அந்த சந்தோஷிதா அவனது ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் எடுத்துக்கொண்டு அவள் கணவனுடன் சென்றிட, அவன் அனைத்தையும் இழந்தவனாய் வெற்றுக்கூடாய் அங்கிருந்து கிளம்பினான் அவள் சென்றிட்ட திசையையே மீண்டும் ஒருமுறை பார்த்தபடி….

“என்னங்க… டீ…” என்றபடி சந்தா காபியை நீட்டிட,

காபியை வாங்கிக்கொண்டு எதிரில் நின்றிருந்த மனைவியை ஆசையாகப் பார்த்திட்டான் அரவிந்த்…

அவள் ஒரு விதத்தில் அவனுக்கு தூரத்து சொந்தமே… எனினும் அவள் மீது அவனுக்கு எல்லையில்லாத காதல்…

அதனை மறைத்து வைத்து கஷ்டப்படுவதோடு சொல்லிவிடலாம் என்றெண்ணி, கல்லூரி முடிந்து வரும் வழியில் அவளிடம் தன் காதலை அவன் வெளிப்படுத்த, அவளோ அதிர்ந்தாள்…

அவளின் பதில் எதிர்பார்த்து அவன் காத்திருக்க, அவளோ எதுவும் பேசிடாது வீட்டினை அடைந்தாள்…

மறுநாளும் அவன் வழிமறித்து அவளிடம் பேச, அவள் பேச இடம் கொடுக்காது நகர்ந்தாள்…

“ஹேய்… நில்லு… உன்னை தான் பார்க்க வந்தேன்… நீ இப்படி போனா என்ன அர்த்தம்?...”

அவன் அவளிடம் கேட்டிட, அவளோ முறைத்திட்டாள்…

“உன் பின்னாடி வரேன்னு என்னை தப்பா நினைக்காத… நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்… உங்கூட வாழணும்னு ஆசப்படுறேன்… என்னை கல்யாணம் பண்ணிப்பியா?...”

முதல் நாள் வந்து காதலிப்பதாக கூறியவன், இரண்டாம் நாள் வந்து கல்யாணம் செய்துப்பியா எனக் கேட்டிட, அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை…

“நீங்க யாருன்னே எனக்கு தெரியலை… தயவுசெய்து இனி என் பின்னாடி வந்து இதுமாதிரி பேசாதீங்க… உங்களை கெஞ்சி கேட்குறேன்… யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க…”

அவள் பயந்து கொண்டே அவனிடம் தயங்கி தயங்கி பேசிட,

“ஹேய்… யாரு என்ன சொல்லுவா?... நான் என் வருங்கால பொண்டாட்டி கிட்ட தான பேசுறேன்…..”

அவன் சிரித்துக்கொண்டே கூற, அவள் முறைத்தாள்…

“சரி சரி… கோபப்படாத… நான் யாரோ எவரோ இல்லை… என் பேரு அரவிந்த்… உனக்கு சொந்தம் தான்… அதுவும் இல்லாம நான் வாழ்ந்தா அது உன்னோடதான்னு முடிவே பண்ணிட்டேன்…”

“……………..”

“உண்மையா தான் சொல்லுறேன்… நீ மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நிஜமாவே செத்துடுவேன்…”

அவன் இலகுவாக கூற, அவளுக்கு பகீரென்றது…

அந்த பயம் அவனுக்கு தெம்பை தர, மேற்கொண்டு தொடர்ந்தான்…

“நிஜமாவே எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… உன்னோட ஒருநாள் வாழ்ந்தாலும் அதுவே எனக்கு ஜென்மமே ஈடேறினமாதிரி… ப்ளீஸ்… என்னை கல்யாணம் பண்ணிப்பீயா?...”

அவன் தன் மனதிலிருந்து கூற, அவள் தடுமாறினாள்… மேற்கொண்டு அவன் வேறெதுவும் பேசுவதற்குள், அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக அவள் கிளம்பிட, அவனுக்கோ அவள் பயம் புரிந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.