(Reading time: 16 - 31 minutes)

சில நாட்களுக்குப் பிறகு, அவன் அரவம் தென்படாது போகவே, ஒருபக்கம் சந்தோஷம் கொண்டவள், மறுபக்கம் பயமும் கொண்டாள்…

“ஒருவேளை அன்னைக்கு சொன்ன மாதிரி எதுவும் தப்பா?...”

அவளுக்கு மேற்கொண்டு யோசிக்கவே பயமாக இருந்தது…

இரவு முழுவதும் தூங்காமலேயே யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு விடிந்த்தும் ஓரு பேரதிர்ச்சி காத்திருக்க, குழம்பி போனாள் அவள்…

“அன்பு…. நான் ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்கு போயிட்டுவரேன்…”

“என்னங்க… உடம்புக்கு என்ன செய்யுது?...”

பதட்ட்த்துடன் கணவரை விசாரித்துக்கொண்டிருந்தவரிடம்,

“அதெல்லாம் எதுவுமில்லை… நம்ம முத்தையன் பையன் அரவிந்த் இருக்கான்ல… அவன் மருந்தை குடிச்சிட்டானாம்… இப்போ சீரியஸா ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம்… அதான் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னு கிளம்பிட்டிருக்கேன்…”

“என்னங்க சொல்லுறீங்க?... அந்த பையனா?... அது ரொம்ப நல்ல பையனாச்சே….”

“ஹ்ம்ம்… என்ன செய்ய?.. எல்லாம் நேரம்… வேற என்ன சொல்ல?... சரி நான் போயிட்டுவரேன்…” என்றவர் கிளம்பி செல்ல, அறையின் உள்ளிருந்து அதிர்ச்சியோடு வெளிவந்தாள் சந்தா…

“அரவிந்த்…” என்ற பெயரில் அப்படியே ஆடிப்போனவளாய் அவள் நின்றிருக்க, அன்று அவள் கல்லூரிக்கும் சென்றிடவில்லை…

அவன் எப்படி இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருக்க தகப்பன் எப்போது வருவார் என எதிர்பார்க்க தொடங்கினாள் அவள்…

வந்தவர் மகளைப் பார்த்துவிட்டு அமைதியாக உள்ளே சென்றிட, அவரின் மனைவி அவரைப் பின் தொடர்ந்து என்ன ஏது என்று விசாரித்திட, அவரும் நடந்ததை கூறினார்…

“அந்த பையன் நம்ம சந்தாவை விரும்புறான் அன்பு… அவளை என் மகனுக்கு கட்டிக்கொடுங்க, மக மாதிரி நான் பார்த்துக்குறேன்னு முத்தையன் மனைவி வடிவு என் கையைப் பிடிச்சு கெஞ்சுறாங்க… எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை அன்பு…”

“என்னங்க சொல்லுறீங்க?.. அந்த பையன் அக்கா கொஞ்சம்?...”

“அதான் அன்பு நானும் யோசிக்கிறேன்…”

“அவ போலீஸ்காரி… அதுவும் இல்லாம அவ புருஷனோட இப்போ இல்லை… அவன் இவளை விட்டுட்டு போயிட்டான்… கையில குழந்தையோட இப்போ அம்மா வீட்டுல தான் இருக்குறா… அது கூட பிரச்சினை இல்லை… அவ குணம் தான் கொஞ்சம் பயத்தைக்கொடுக்குது…”

“அந்த பையன் நல்ல பையன் தாங்க… எனக்கும் அவனுக்கு நம்ம சந்தாவைக் கட்டிக்கொடுக்குறதுல எந்த பிரச்சினையும் இல்லை… அதுவும் இல்லாம அந்த செல்வி அவ குணமும் தெரிஞ்சதுதான்… ஆனாலும் எனக்கு மனசுக்கு எதுவோ ஒன்னு நெருடலாவே இருக்குங்க… எதுக்கும் நாம ஜோசியரைப் பார்த்துட்டு வரலாமா?...”

மனைவியின் கூற்று சரி என்றே பட, அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்…

இருவரின் ஜாதகத்தையும் பார்த்த ஜோசியர், அனைத்து பொருத்தமும் இருக்கிறது, ரஜ்ஜூ பொருத்தம் ஒன்றைத் தவிர என கூற, இருவருமே அதிர்ந்து போயினர்…

“என்ன ஜோசியரே இப்படி சொல்லுறீங்க?...”

“நான் என்ன பண்ணுறது?... கட்டம் சொல்லுறதை தான நானும் சொல்ல முடியும்?...”

“அந்த பையன் நல்ல பையனாச்சே…”

“அவன் நல்லவனாத்தான் இருப்பான்… இப்போ மட்டுமல்ல எப்பவும்… அவனுக்கு உங்க பொண்ணக் கட்டி கொடுத்தா சந்தோஷமா தான் இருப்பா… ஆனா அது நீளுறது கடவுள் கையில தான் இருக்குது…”

ஜோசியரும் உள்ளதை உள்ளபடி கூறிட, இருவருமே கனத்த இதயத்துடன் வீட்டினை அடைய, மகளின் வாழ்வைப் பற்றிய கவலையின் ஆழ்ந்து போயினர்…

மறுநாளே, அரவிந்த் வீட்டிலிருந்து வந்து பெண் கேட்டிட, பெற்றவர்கள் தயங்கினர்…

அவர்களின் தயக்கம் செல்விக்கு சந்தேகத்தை உண்டு பண்ண, “நீங்க யோசிக்கிறதை பார்த்தா என் தம்பிக்கு பொண்ணு குடுக்குறதுல இஷ்டம் இல்லாத மாதிரில்ல தெரியுது….” என தூண்டிலினை அவள் போட,

“அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா… பொருத்தம் எல்லாம் பார்க்கணுமே… அதான் அத பார்த்துட்டு மேற்கொண்டு பேசலாம்னு நினைச்சேன்…” என சமாளித்தார் சந்தாவின் தகப்பனும்…

“எனக்கு இந்த ஜாதகம், ஜோசியம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல மாமா… உங்க பொண்ணு எங்கூட இருந்தா நான் நிச்சயமா நான் சந்தோஷமா இருப்பேன்… எனக்கு எந்த குறையும் வராது… அவ தான் எனக்கு இனி எல்லாமே… அவளை நான் நல்லா பார்த்துப்பேன் மாமா… நம்பி கட்டிக்கொடுங்க…”

அவன் தன்மையாக தன் காதலையும் கூறிட, அவருக்கோ திடுக்கென்றது…

“உங்களுக்கு ஜாதகம் தான் பிரச்சினைன்னா, அதையும் பார்த்தே உங்க பதிலை சொல்லுங்க… அவ்வளவுதான?... என்னம்மா?...”

என தாயினையும் துணைக்கழைத்துக்கொண்டு செல்வி கேட்டிட, வடிவும் சம்மதித்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.