(Reading time: 16 - 31 minutes)

“இன்னும் என்ன ஆகணும்?..”

“ஹே தப்புதான்ம்மா… சொன்னா நீ பயந்துடுவேன்னு தான் சொல்லாம மறைச்சிட்டேன்… சாரிம்மா…”

அவன் மனதார மன்னிப்புக் கேட்டிட, அவளும் விழி வழி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துவிட்டு, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தாள்…

இரண்டு நாட்கள் கழித்து, அவனுக்கு காய்ச்சல் அதிகரிக்க, அவனை மருத்துமனையில் சேர்த்தனர்…

கூடவே இருந்து அவள் அவனை கவனித்துக்கொள்ள, அவளுடன் வாழவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது அவனுக்கு…

வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக்கொண்டு வந்த இரண்டாம் நாள், அவன் பேசவே சிரமப்பட்டான்…

“உங்கூட ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்னு நினைச்சேன்… ஆனா இத்தனை நாள் உன்னோட இருந்த இந்த நாட்கள் என்னால மறக்கவே முடியாது…”

“இப்போ எதுக்கு இப்படி பேசுறீங்க?... பேசாம இருங்க…”

அவள் பதட்டமும் பயமுமாய் கூறிட, அவன் அவளை தடுத்தான்…

“இல்ல நான் கீழே விழுந்தப்போ நெஞ்சில அடிபட்டுச்சு… அதை அப்போ நான் பெரிசா எடுத்துக்கலை… ஆனா இப்போ பயமா இருக்குடி… உன்னை விட்டு போயிடுவேனோன்னு…”

அவன் சொல்லி முடிக்கையில் அவன் மூக்கிலிருந்து ரத்தம் வழிய, அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவள்…

“என்னங்க…”

அவள் துடித்துப்போனவளாய், அவனது ரத்தத்தை துடைக்க, அவன் கை கால் எல்லாம் சில்லிட்டு போனது…

“உடம்பு ஜில்லுன்னு இருக்கே…” அவளுக்கு மேலும் பதட்டம் உண்டாக, ஆம்புலென்சை தொடர்பு கொண்டாள் உடனேயே…

“என்னங்க…” அவள் அவனை எழுப்ப, அவன் கண்கள் சொருகி காணப்பட்டது…

“உங்கூட ஒருநாளாவது வாழ்ந்தா போதும்னு சொல்லிட்டே இருந்தேன்ல… அதான் கடவுள் கடைசியில என்னை நீ வாழ்ந்த்து போதும்னு சொல்லி கூப்பிடுறார் போல…”

“அப்படில்லாம் பேசாதீங்க… ப்ளீஸ்…”

அவள் நடுங்கியபடி கூற,

“இல்ல கவலைப்படாத… நான் என்னைக்கும் உன்னைவிட்டு போகமாட்டேன்… உங்கூடவே தான் இருப்பேன்…” அவளின் தலைமீது கைவைத்து அவன் சத்தியம் செய்திட,

அவள் சற்று ஆசுவாசப்பட்ட மறுநொடியே, அவனது சுவாசம் அவனிடத்தில் இல்லை…

“என்னங்க….”

அவளின் குரல் அவன் செவிகளை எட்டும் முன்னரே அவன் இந்த உலகத்தை விட்டு சென்றிட, வீட்டின் வாசலில் வந்த நின்ற ஆம்புலன்சில் அவனை ஏற்றி செல்கையில் அவனது கரம் பட்டென்று தொங்க, அவளது அப்போதே உயிர் அற்று போனது…

பின்னர் மருத்துவமனை சென்றதும், உயிர் பிரிந்து நேரமாச்சு என்று கூறிட, அப்படியே மயங்கி விழுந்தாள் அவள்…

பொங்கலுக்கு மகளினை மறுவீடு அழைத்துச் செல்ல வந்தவர்கள், அவனுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு மகளினை அவனுடனே விட்டுச் சென்றிருக்க, இப்போது அவனே அவளை விட்டு போய் விட்டான் என்ற உண்மை அறிந்து பெற்றவர்களும் கதறினர் தாங்களும் அவளின் இந்த நிலைக்கு ஒரு காரணம் என…

உயிர் அற்ற அவனது கூட்டினை வீட்டிற்கு எடுத்து வந்து அனைத்து சடங்குகளும் செய்திட, பொம்மை போல் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தாள் அவள்…

கதறியும் அழவில்லை… வாய்விட்டும் அழவில்லை… கண்ணீரே தஞ்சமென விழி வழி கண்ணீர் மட்டும் அவளை விட்டு அகல மறுத்து அவளுடனே இருந்த்து… சித்தம் கலங்கியவள் போல் இருந்தவள், அவனை எடுத்துச் செல்லும் வேளையில் மீண்டும் மயங்கிட, பின்னர் அவளை தெளிய வைத்து பருக தண்ணீர் கொடுக்க, அவள் அதனையும் மறுத்திட்டாள்…

வலுக்கட்டாயமாக வாயைத்திறந்து நீரை ஊற்றியவர்கள், அதன் பின் அவளுக்கான சடங்கினை செய்ய ஆரம்பித்தனர்…

சிறு பிள்ளை என்றும் பாராது, முச்சந்தியில் வைத்து அவளுக்கு அவள் கணவனின் தமக்கை வெள்ளைப்புடவையினை கொடுக்க, சந்தாவைப் பெற்றவர்கள் கதறி அழுதனர்…

“அவ சின்னப்பொண்ணு…. இந்த சடங்கெல்லாம் வேண்டாம் செல்வி… அவளை உள்ளே கூட்டிட்டுப்போ…”

அங்கிருந்த பெரியவர்கள் நாலு பேர் கூறிட,

“என் தம்பியே போயிட்டான்… இனி இவளை உள்ளே கூட்டிட்டு போய் என்ன பிரயோஜனம்?... நடத்த வேண்டிய சடங்குகளை செஞ்சு முடிங்க…. என் தம்பி கொடுத்தது தான அவ வச்சிருக்குற பூவும் பொட்டும்… இப்போ அவனே இல்லன்னு ஆனபிறகு, அதெல்லாம் எடுக்குறது தான முறை…” என்றவள், பொம்மை போல் இருந்த சந்தாவின் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்களை அடித்து நொறுக்கி தூள் தூளாக்கினாள்… தலையில் வைத்திருந்த பூ, நெற்றியில் வைத்திருந்த குங்கும்ம்… அனைத்தையும் அது இருந்த தடம் தெரியாமல் ஆக்கியவள், இறுதியில் அவள் அணிந்திருந்த தாலியினையும் விடவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.