(Reading time: 19 - 37 minutes)

“என்ன ஆச்சுப்பா?”

“என்னவா... வர வர உன் போக்கு எல்லாம் சித்தம் போக்கு சிவன் போக்குன்னு போயிட்டு இருக்கு. வீட்டிலே உன்னை நம்பி ரெண்டு உசுரு இருக்குங்கிற நினைப்பே இருக்க மாட்டேன்குது..”

“இப்போ என்ன பிரச்சினை.. ? நான் நல்லதுதானே பண்ணிட்டு வந்து இருக்கேன்.. “

“அந்த ஆட்களை பிடிக்க ஏற்பாடு செஞ்ச சரி.. அத முடிச்சுட்டு அந்தால பொறப்பட்டு இருக்க வேண்டித்தானே.. அது என்ன அந்த புள்ளைய பிடிசிட்டாகன்னு நீயும் சண்டை போட்டியாம்.. நமக்கு ஏதும் வம்பு வந்தா என்ன பண்ணுவ..?”

“அப்பா.. என்ன சொல்றீங்க..? நம்ம கூட வந்தவங்களுக்கு ஒரு ஆபத்துன்னா அப்படியே விட்டுட்டு வர முடியுமா?”

“நீ அந்த வேலைய செய்ய போயிதானே .. போலீஸ் எல்லாம் நம்ம வீட்டை தேடி வந்துட்டு போறாக”

“அப்பா.. அதுக்கும் போலீஸ் வந்துட்டு போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அந்த ஆட்கள பிடிச்சு கொடுக்கும் போது அவங்க பேசினது எல்லாம் நான் போன்லே ரெகார்ட் பண்ணி வச்சு இருந்தேன். அதை அங்க உள்ள ஆபீசர் கிட்ட கொடுத்துட்டு வரும்போது என்னை பற்றின விவரங்கள் எல்லாம் கேட்டாங்க.. இப்போ அதை சரிபார்க்க வந்துருப்பாங்க..”

“அது சரிதான்.. ஆனா இந்த காட்டுக்குள்ளே போற ஐடியாவே நீ கொடுத்ததுதானேமே.. அதை செய்யப்போய் தான் இந்த சிக்கலுக்குள்ளே மாட்டிகிட்டு இருக்க.. “

“இந்த விஷயத்த போட்டுக் கொடுத்த புண்ணியவான் யாரு ?”

“யாரோ .. உனக்கு என்ன?”

“வேற யாரு.. அந்த செந்தில் மடையனா தான் இருக்கும்..”

“அவன் மடையனா .. நீயா? ஊட்டிக்கு போனோமா, எல்லாரும் பார்க்கும் இடத்த பார்த்தோமான்னு இல்லமா, எதுக்கு இந்த வேலையத்த வேலைன்னு கேக்கேன்.. “

“அது ஒன்னும் அவ்ளோ பயப்படும் படியான இடம் இல்லை.. நான் நம்ம சுபத்ரா அக்கா, அர்ஜுன் மாமா கிட்டே கேட்டுதான் போனேன்..”

“அதையும் சொன்னான்.. நீ அந்த பொண்ண வேற அங்கிட்டு கூட்டிப் போனியாம்.. ஒரு வயசு புள்ளைய நம்ம சொந்தக்கரவுக வீட்டுக்கு அழைச்சுட்டு போலாமா... அவுங்க என்னனு நினைப்பாங்க.. “

“நான் நினைப்பத அவங்களும் நினைக்கட்டும்ன்னு தானே கூட்டிக்கிட்டு போனேன்” என்று முனகினான்.

“என்னாலே சொல்லுத... சத்தமா சொல்லு”

“ஒன்னும் இல்லை.. சுபத்ரா அக்கா தான் அவங்களையும் கூப்பிட்டாங்க”

“என்னவோ சொல்லு.. நீ செய்யுறது எதுவும் எனக்கு சரியா படல.. கூடிய சீக்கிரம் நான் பொங்கல்க்கு போன போது பார்த்தோமே.. அவர்கிட்டே பேச போறேன்.. முடிஞ்சா .. வர சித்திரைக்கு உன் கல்யாணம் முடிச்சிடுவேன்.. பார்த்துக்கோ “

அவரை எதிர்த்து ஏதோ சொல்ல போனவன், அவன் அம்மா

“உங்க கோபம் எல்லாம் குறைஞ்சதா.. கையிலே அடிபட்டு வந்த புள்ளய, அத பத்தி என்ன ஆச்சு? மருந்து போட்டியான்னு கேக்க முடியல.. மத்த விவரம் எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. நானும் இதா முடிப்பீங்கன்னு பார்த்துகிட்டு இருக்கேன். ரெண்டு பேரும் வாய் வளத்துகிட்டே இருக்கீங்க.. இந்தா செழியா, உன் முகத்துலே அம்புட்டு சடைவு தெரியுது.. உங்க அப்பா தான் கேள்வி கேட்டுகிட்டு இருக்காருன்னா, எனக்கு முடியலன்னு சொல்லிட்டு போய் படுக்க வேண்டியதுதானே.. “

என்று ஒரு பிடி பிடிக்க , சிவஞானத்திற்கு வருத்தமாகி விட்டு இருந்தது. என்ன இருந்தாலும் பெத்தவ பெத்தவ தான் என்று எண்ணியவராக,

“ஹ்ம்ம் .. சரி.. சரி.. உள்ளார போ” என்று விட்டு கடைக்கு கிளம்பினார். செழியனுக்கும் இருந்த அலுப்பில் மேலும் வாதாட தெம்பற்றவனாக தன் பெட்டியை தூக்கினான்.

அதில் அவன் கை வலி எடுக்க, முகம் சுழித்தான். அதை கவனித்த அவன் அப்பா, பெட்டியை அவன் கையில் இருந்து வாங்கி , அவனின் அறையில் கொண்டு வைத்தார்.

அதற்குள் “ஏன் லே.. இம்புட்டு வலிய வச்சுக்கிட்டு, அந்த மனுஷனோட இவ்ளோ நேரம் வாயடாட்டா என்ன ? உனக்கும் அறிவு கிடையாது.. அந்த மனுஷனுக்கும் புத்தி கட்டை.. “  என்று அங்கலாய்க்க ஆரம்பிக்க,

இப்போது செழியன் “அம்மா.. போதும்.. நான் போய் படுக்கறேன்..” என்று தன் அறைக்கு சென்றான்.

அவன் பின்னோடு வந்து “தம்பி.. இந்தா இதிலே ரெண்டு தோசை ஊத்தி வச்சுருக்கேன்.. சாப்பிட்டு படு.. “

“ஏம்மா.. நான் கீழே வந்துதான் சாப்பிடுவேனே..”

“நீ ரொம்ப களைச்சு போயிருக்க.. குளிச்சுட்டு வரமுன்னாடி படுத்துருவ.. அதான் இங்கனயே எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடு “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.