(Reading time: 19 - 37 minutes)

கோவில் வாசலில் தன் குடும்பத்தை இறக்கி விட்டவர்,

“அம்மாடி மலர், நீங்க கோவிலுக்குள்ளேயே இருங்க.. நான் மந்திரி எல்லா பூஜையும் பார்த்துட்டு கிளம்பினவுடன் வந்து உங்க கூட சேர்ந்துக்கறேன்... எதுவும் வேணும்னா பிரசாத ஸ்டாலில் வாங்கிக்கோ.. போன் கையிலேயே வச்சுக்கோ.. எதுவும் பிரச்சினை என்றால் என்னை கூப்பிடு”

என்று கூறி சென்றவர்தான்.. அதற்கு பின் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இவர்கள் மாலை ஐந்து மணிக்கு வந்து இருக்க, மஹா நந்திக்கு அபிஷேகம், ஆராதனை பார்த்தனர். அதன் பின் பிரதோச புறப்பாடு என்று ரிஷப வாகனத்தில் சிவன் எழுந்தருள, கோவிலில் பிரகாரம் சுற்றி வந்தனர்.

அதற்கு பின் அன்று இரவு எட்டு மணியில் இருந்து ஆரம்பித்து , மறுநாள் காலை ஆறு மணி வரை, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உள்ளே மூலவருக்கு தீபாராதனை நடக்கும்.. பக்தர்கள் கோவிலில் தங்கி அதை கண்டு மகிழ்வார்கள்.

பக்தர்களின் பொழுது போக்கிற்காக பக்தி பாடல்கள், சொற்பொழிவு, நாடகம் இவை எல்லாம் நடைபெறும்

மலர் தன் பாட்டி , அன்னையோடு ஓரிடத்தில் அமர்ந்து இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அப்போது அவள் பாட்டிக்கு பசிக்கிறது என்பதற்காக அங்கிருக்கும் பிரசாத ஸ்டாலுக்கு செல்ல முயன்றாள்.

அப்போது யார் மீதோ மோதிக் கொள்ள, நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள். அங்கே செழியனின் அம்மா நின்று இருக்க, அவரை பார்த்தவுடன்

“ஆன்டி .. நீங்களும் வந்து இருக்கிறீர்களா? “ என்று வினவ,

“ஹ்ம்ம்.. என்ன சொன்னேன் மலர்.. நல்ல தமிழில் அழகாக அத்தை என்று கூப்பிட சொன்னேன் அல்லவா?”

“ம்ச்ச்.. சாரி அத்தை.. “ என்றவள், சுற்றி முற்றி பார்த்தவள் “ நீங்கள் மட்டும் தனியாகவா வந்தீர்கள்” என்று வினவினாள்

“இல்லைமா.. மகனும் வந்துருக்கான்.. அவனை தெரிந்த யாரோ ஒருவர் வரவே, அவரோடு பேசிக் கொண்டு இருக்கிறான். “

“சரி வாருங்கள்.. அங்கே என் அம்மா, பாட்டி இருக்கிறார்கள்.. அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்” என்றவள். அவர்களிடம் பார்வதியை அழைத்து சென்றாள்.

தன் மகனுக்கு தான் அமர்ந்து இருக்குமிடம் தகவல் மட்டும் சொல்லிவிட்டு அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார்.

பெண்கள் மூவரும் அவர்களுக்குள் பேச ஆரம்பிக்க, மலர் தன்னவனின் வரவை எதிர்பார்த்து இருந்தாள்.

அவள் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் வேகமாக வந்தவன், தன் அன்னையை மட்டும் கண்டவனாக

“சாரிம்மா.. அவர் தெரிந்தவர்.. பேச்சுக் கொடுத்ததில் உங்களை தனியாக விட்டு விட்டேன்.. நீங்கள் யாரோடு இங்கு பேசிக் கொண்டு இருக்குறீர்கள் “ என்று திரும்பியவன், அங்கே மலரை காணவும்

“ஹேய்.. மலர் .. வாட் எ சர்ப்ரைஸ் .. நீ எங்கே இங்கே ? தனியாகவா வந்தாய்? “ என்று சுற்றி இருப்பவர்கள் பற்றி கவலை இல்லாமல் சந்தோஷமாக வினவினான்.

மலர் தொண்டையை கனைத்து, கண்களால் சுற்றி இருப்பவர்களை காண்பித்தாள். பின் சாதாரணாமாக

“ஹலோ சார்.. நான் என் குடும்பத்தோடு வந்தேன் “ என அழுத்தமாக கூறவும், தன்னிலை அடைந்தவன்

“வணக்கம்.. ஆன்டி.. வணக்கம் பாட்டி.. நல்லா இருக்கீங்களா?” என்று வினவ,

அவர்களும் பதிலுக்கு அவனிடம் நலம் விசாரித்தனர். செழியன் அம்மா

“தம்பி.. நான் இப்போதான் அந்த புள்ள கிட்டே சண்டை போட்டு அத்தைன்னு என்னை கூப்பிட வச்சேன்.. இப்போ நீ அவங்கள ஆன்டின்னு கூப்பிட்டுகிட்டு இருக்க.. ? ஒழுங்க அத்தைன்னு சொல்லு “

“அம்மா அவங்க எதவும் தப்பா நினைக்க போறாங்க..?”

“இதிலே தப்பா நினைக்க என்ன இருக்கு..? நீங்களே சொல்லுங்க பெரியம்மா.. ? ஊர் பக்கம் எல்லாம் அக்கம் பக்கத்துலே உள்ளவங்கள எல்லாம் அத்தை, மாமான்னு தானே பிள்ளைகளை பழக்குவோம்” என

அவள் பாட்டி  அப்படியே கவுந்து விட்டார்..

“தம்பி.. உங்க அம்மா சொல்றது சரிதான்.. வெள்ளைக்காரன் பாசை நமக்கெதுக்கு? நம்ம ஊர் பக்கம் மாதிரி வருமா.. நீங்க அத்தை சொல்லுங்க”

செழியன் மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டான்.. ஆஹா.. நம்ம அம்மா இப்படி சிக்ஸர் அடிச்சுட்டாங்களே.. இப்படியே இவங்க குடும்பத்தோடு ஐக்கியமாகி விடலாம்.. என்று எண்ணியவனாக, அவர்களை பார்த்து

“சரி பாட்டிம்மா..” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.