(Reading time: 17 - 33 minutes)

ரவு மணி பன்னிரெண்டை தொட்டதால் அந்த தெருவே நிசப்தம் சூழ்ந்திருக்க தெருவிளக்குக்கள் பளிச் பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது..

பெரிதாகவும் இல்லாமலும் சிறிதாகவும் இல்லாமலும் இருந்த அந்த வீட்டைத் தொட்டவர்கள் காலிங் பெல்லை அடித்து விட்டு கதவு திறப்பதற்காக காத்திருக்கத் துவங்கினர் ஒரு வித படபடப்புடன்..

நொடிகள் நிமிடங்களாகக் கரைய எதிர்பார்ப்பில் சமுத்திராவின் கால்கள் நடனமாட தொடங்கி இருந்தது..

“ஹேய்..ரிலாக்ஸ் சமூ..”,என்று சமுத்திராவைப் பார்த்து சிரித்த மொழி பத்து நிமிடங்கள் கடந்தும் யாரும் கதவு திறக்காததால்,”நல்லா தூங்கறாங்க போல..”,என முனுமுனுத்து விட்டு மீண்டும் ஒரு முறை பெல் ஸ்விட்சை அழுத்தினாள்....

சில நிமிடங்கள் மீண்டும் கரைய இப்பொழுது உள்ளிருந்து எதுவோ கீழே விழுந்து உடையும் சத்தமும் யாரோ கீழே விழும் ஓசையும்..

சத்தத்தைக் கேட்டு பயந்த சமுத்திரா கதவை பலமாக தட்டி,“அம்மா.. அம்மா..அப்பா..என்னாச்சு யாராவது கதவை திறங்களேன்..”,என்று கத்தத் துவங்கினாள்..

எந்த பதிலும் இப்பொழுதும் வராததால் பதற்றமடைந்து இன்னும் இன்னும் சத்தமாக கதவைத் தட்டினாள்..

அவளது பதற்றத்தைக் கண்டு அவளது தோளை உலுக்கி நிதானப்படுத்திய மொழி,”பின்னாடி ஏதாவது கதவு இருக்கா..??”,என்று கேட்டாள்..

“இருக்கு..இருக்கு..”,என்றாள் சமூ அவசரமாக..

“அப்போ சீக்கிரமா போ..பின்னாடி கதவை திறக்க முடியுதா பாரு..”,என்று அவளை அனுப்பி வைத்தவள் அப்பொழுதுதான் கதவின் அருகே ஒட்டியிருந்த கண்ணாடி ஜன்னலை கவனித்தாள்..

நொடியும் தாமதிக்காது பெரியதொரு கல்லை கீழே இருந்து எடுத்தவள் அந்த ஜன்னலை உடைத்தாள்..

கம்பியின் இடுக்கில் கை விட்டு கதவைத் திறந்து மின்னல் போல் சத்தம் வந்த திசை நோக்கிப் பாய்ந்தாள்..

தூரி கட்டும் கம்பியில் கட்டியிருந்த கயிறில் ஒரு பகுதி அறுந்து கிடக்க கயிறின் மற்றொரு பகுதியோ மயக்கமடைந்த ஒரு பெண்மணியின் கழுத்தில்.. சற்று தள்ளி கிடந்தது ஒரு நாற்காலி..

நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பதை அந்த இடமே வெளிச்சம் போட்டு காட்டியது..

அவரது கழுத்தில் இருந்த கயிறை முதலில் அவிழ்த்து எறிந்தவள் அவரது மூச்சு சரியாக இருப்பது உணர்த்து ஆழ் மூச்சொன்றை எடுத்து தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவரது கன்னத்தை பலமாக தட்டி,”அம்மா.. அம்மா..”,என்றழைத்தாள் சற்று சத்தமாக..

அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லாததால் சற்றே பயந்தவள் பின்னால் இருந்த சமுத்திராவை சத்தமாக அழைத்துவிட்டு சமலறையைத் தேடி நீரைக் கொண்டு வந்து அவர் முகத்தில் தெறித்து மீண்டும் அவரது கன்னத்தில் தட்டினாள்..

மொழியின் குரல் கேட்டு அங்கு வந்த சமுத்திரா கீழே கிடந்த பெண்மணியைக் கண்டு,”அம்மா..அம்மா..”,என்று அழ துவங்கினாள்..

“சமூ..அழறத நிறுத்து முதலில்..இவங்களை தூக்கு..வா..”,என்று அதட்டியபடி அவரைத் தூக்கி பெட்டில் படுக்க வைத்தனர் இருவரும்..

“அவங்க வெரச்சு போயிருக்காங்க சமூ..கை காலத் தேய்ச்சு விடு..”,என்றுவிட்டு ஜன்னலைத் திறந்து விடத் துவங்கினாள் துரிதமாக..

“மொழி.. மொழி.. அம்மா லேசா கன்னசைக்கறாங்க..”,என்ற சமுத்திராவின் குரலில் ஜன்னல் கதவை பாதி திறந்தபடியே விட்டு வந்தவள் தானும் அவரது கையை தேய்க்கத் துவங்கினாள்..

இப்பொழுது நல்ல அசைவு தெரிந்தது அவரிடத்தில்..கண்கள் இரண்டையும் லேசாக கசக்கியவர் கண் விழித்ததும் முதலில் கண்டது சமுத்திராவையே..

“அம்மா.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..”,என்று தனது கன்னங்களைத் தடவி கேட்டவளைக் கண்டு ஏனோ மனமுருகி போனது அவருக்கு..

இல்லை என்பது போல் அவரை நோக்கி லேசாக தலையசைத்தவர் இருவரையும் யாரென்று அறியாமல் சற்றே அந்நியமாய் பார்த்தார்..

அவரது அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்த சமுத்திராவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.. முயன்று தன் குரலை இயல்புக்குக் கொண்டுவந்தவள்,”அ..ம்..மா.. நா..ன்.. தா..ன்.. ச..மு..த்திரன்..”,என்றாள் திக்கித் திணறியபடி..

அவள் சொன்னதைக் கேட்டு நடுங்கியவர் அவளை ஓர் நொடி உற்றுப் பார்த்து என் குழந்தையை எப்படி அடையாளம் தெரிந்து கொள்ளாமல் போனேன் என மனதில் வருந்தி அதை கண்களிலும் பிரதிபலித்தார்..

கைகள் கூப்பி மன்னிப்பு வேண்ட கைகள் உயர்த்தியவரை கை பிடித்து வேண்டாம் என்று தடுத்தவள் சொன்ன அடுத்த வார்த்தை,”அ..ப்..பா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.