(Reading time: 20 - 39 minutes)

"நான் தினமும் உன்னை காலேஜ்ல விட்டுறேன். என்னைக்காவது, நான் சீக்கிரம் கிளம்புனா தான், நீ தனியா வர வேண்டி இருக்கும். அப்ப அப்பா உன்னை இங்க விடுவாரு. நீ இங்க இருந்து போய்க்கோ. இன்னைக்கு நான் உன்னை காலேஜ்லே விட்டுறேன்"

"எதுக்கு உங்களுக்கு சிரமம்? நீங்களும் கிளம்பணும்ல? இங்கயே விட்டுருங்க. நானே போய்க்கிறேன்"

"அதெல்லாம் சிரமம் இல்லை. சிரமம்னா நானே சொல்லிருவேன். அப்புறம் நீ காலேஜ் முடிஞ்சு, அங்க பஸ் ஏறுனா, நம்ம வீட்டுக்கு சைட்ல ஒரு ரோடு இருக்கும். அங்க தான் நிக்கும். இன்னைக்கு சாயங்காலமும், நேத்து வந்த நேரத்துக்கு நானே கூப்பிட வறேன். நாலைல இருந்து நீயே வந்திரு கலை"

"ம்ம்", என்று சொன்னவள் அவனை தயக்கமாக பார்த்தாள்.

"என்ன கலை ஏதாவது சொல்லணுமா?"

"ஹ்ம்.. அது வந்து....."

"தயங்காம என்ன வேணா சொல்லுன்னு சொல்லிருக்கேன்ல? சொல்லு"

"எல்லாரும் என்னை மதின்னு கூப்பிடுவாங்க. கிளாஸ்ல கலைமதின்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க..."

"எதுக்கு கலைன்னு சொல்றேன்னு  கேக்குறியா?"

"ம்ம்..."

"அப்படி நான் கூப்பிடுறது  பிடிச்சிருக்கா, பிடிக்கலையா?"

"இவன் என்ன இப்படி கேக்குறான்?", என்று நினைத்து கொண்டு "பிடிச்சிருக்கு. ஆனா ஏன் வேற மாதிரி?", என்று கேட்டாள்.

"இந்த உலகத்துல, எல்லாரையும் விட உனக்கு நான் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன் கலை. அதனால நான் கலைன்னு  கூப்பிடுறேன்", என்றான்.

அவன் குரலில், அவன் வார்த்தைகளில் திகைத்து போய் அவனை பார்த்தாள் கலை மதி.

அவள் பார்வையை உணர்ந்து, "நான் உனக்கு ஸ்பெஷல் தான கலை? இல்லைனு சொல்லிறாத. நான் அப்படி தான் நினைச்சிட்டு இருக்கேன். என்ன அமைதியாகிட்ட? நான்  ஸ்பெஷல் இல்லையா?"

முகத்தை அவனுக்கு மறைத்து கொண்டு அந்த பக்கம் திரும்பியவள் "ஸ்பெஷல் தான்", என்றாள்.

"அப்பாடி, நான் கூட அப்படி எல்லாம் இல்லையேன்னு சொல்லுவன்னு  நினைச்சேன்", என்று சிரித்தான் சூர்யா.

"இவன் இப்படி எல்லாம் பேசாம இருந்தா நல்லா இருக்கும்", என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தாள்.

"என்ன இவன் இப்படி எல்லாம் பேசுறான்னு நினைக்கிறியா?", என்று கேட்டான் சூர்யா.

வாயை பிளந்து அவனை பார்த்தாள்  மதி.

அவள் பார்வையை உணர்ந்து, அவளை பார்த்து சிரித்தவன், "சரியா கண்டு புடிச்சிட்டேனா?", என்று கேட்டான்.

வெக்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

"நான் ரொம்ப பேசுவேன் கலை. அம்மா என்னை வாயாடின்னு  தான் சொல்லுவாங்க. ரொம்ப கோப படுவேன். ஆனா தப்புன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேப்பேன். உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் கலை"

குழப்பமாய் அவனை பார்த்தவள் "என்கிட்டயா? எதுக்கு? அதெல்லாம் வேண்டாம். நீங்க என்னை ஒண்ணுமே செய்யலையே", என்றாள்.

"என்ன வேகமா எனக்கு சப்போர்ட் பண்ற? நான் கொடுத்து வச்சவன் தான்", என்று சிரித்தவன் "நான் தப்பு செய்யலை தான். ஆனா என்னோட அம்மா பண்ணிருக்காங்க", என்றான்.

"அத்தையா? அத்தையும் ஒண்ணுமே செய்யலையே. அவங்க எனக்கு அம்மா மாதிரி தெரியுறாங்க"

"அப்ப மாமியார், மருமக சண்டை வராது. நான் அதை சொல்லலை. நம்ம கல்யாணத்துல நடந்த தப்ப சொன்னேன் கலை"

"எதுக்கு டா  என்னை கல்யாணம் பண்ணுணோம்னு நினைச்சு  பீல் பண்றானோ? அதுக்கு தான் இப்படி சொல்றானா? ஆனா நான் என்ன செய்ய?", என்று யோசித்து கொண்டே அவனை பார்த்தாள்.

அவள் குழப்பத்தை உணர்ந்தவன், "அந்த நாய் எவனையோ லவ் பண்ணி கல்யாணம் அன்னைக்கு அவன் கூட ஓடி போயிட்டான்னா, அம்மா உடனே உன்னை, எனக்கு கட்டி வச்சிட்டாங்க. அப்ப உனக்கு எப்படி இருந்துருக்கும். என் அளவுக்கு, உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு கூட இப்ப புரியாத வயசு. அதான் சாரி சொன்னேன்"

அவன் வருந்துவது பொறுக்காமல் "அப்படி எல்லாம் இல்லை. அதை பத்தி பேச வேண்டாமே. அது முடிஞ்சு போனது", என்று சொன்னாள் கலை மதி.

"சரி அது பேச வேண்டாம். நம்மளை பத்தி பேசுவோமா?", என்று கேட்டு சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.