"இவன் ஏன் சிரிக்கும் போது இவ்வளவு அழகா இருக்கான்?", என்று நினைத்த மதி அதிர்ச்சியானாள். "நான் எதுக்கு இப்ப இப்படி அவனை ரசிச்சிட்டு இருக்கேன்?", என்று நினைத்து கேள்விக்கு விடை தெரியாமல் யோசித்தாள்.
அவள் யோசனையை தடை செய்தது அவன் குரல்.
"நம்மளை பத்தி பேசுவோமான்னு கேட்டேன். நீ என்ன பதிலே பேசாம யோசிச்சிட்டு இருக்க?", என்று கேட்டான் சூர்யா.
"ம்ம்"
"என்னை உனக்கு பிடிச்சிருக்கா கலை?"
கண்ணை உருட்டி அவனை பார்த்தாள்.
"பிடிச்சிருக்கான்னு தான கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற? கண்ணு வெளிய வந்துற போகுது. சரி சாயங்காலம் இந்த கேள்விக்கு பதில் சொல்லு. உன் காலேஜ் வந்துடுச்சு", என்றான்.
அப்போது தான் சுயவுணர்வுக்கே வந்தாள்.
"சாயங்காலமா? அப்ப இவனுக்கு என்ன சொல்லணும்?", என்று யோசித்து கொண்டே கீழே இறங்கியவள் அவனை பார்த்து குனிந்து "தேங்க்ஸ்", என்று சொன்னாள்.
அவளை பார்த்து சிரித்தவன், "தேங்க்ஸ் வேண்டாம். சாயங்காலம் பதில் வேணும். பாய்", என்று சொல்லி விட்டு காரை திருப்பினான்.
அவன் கார் அங்கே இருந்து மறையும் வரை அங்கயே நின்றவள் அதன் பின் கிளாஸை நோக்கி நடந்தாள்.
கிளாஸில் போய் அமர்ந்த கலைமதியின், காதுகளில் சூர்யாவின் குரலே ஒலித்து கொண்டிருந்தது.
அவன் புன்னகை கண் முன் வந்து இம்சித்தது.
"நான் ஏன் அவனை பத்தியே யோசிச்சிட்டு இருக்கேன்?", என்று யோசித்தே குழம்பி போனாள்.
அப்போது தான் வந்து சேர்ந்தாள் காவ்யா.
மதியை பார்த்ததும் ஓடி வந்து, அருகில் அமர்ந்தவள் "மதி மதி வந்துட்டியா? எப்படி இருக்க?", என்று நெடு நாள்கள் கழித்து பார்ப்பது போல விசாரித்தாள்.
அவள் குரலில், தன்னுடைய சிந்தனைகளில் இருந்து வெளியே வந்த மதி "நேத்து தான காவ்யா பாத்தோம்? அதுக்குள்ள இப்படி கேக்குற?", என்று கேட்டாள்.
"ஏன் கேக்க மாட்ட? நீ போனது புலிக்குகையா, சொர்க்க வாசலான்னு தவிச்சு போய் வந்துருக்கேன். அவங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா? உன்னை நல்லா பாத்துக்கிட்டாங்களா? உங்க சித்தி மாதிரி திட்டினாங்களா? உன்னை எப்படி பாத்துக்கிட்டங்க? அதை விட உன்னோட வீட்டுக்காரர் என்ன சொன்னார்? உன்கிட்ட அன்பா நடந்துக்கிட்டாரா? சொல்லு டி ப்ளீஸ்"
"எனக்கு அம்மா இருந்தா, கல்யாணம் பண்ணி கொடுத்து புருசன் வீட்டுக்கு போய்ட்டு வரும் போது இப்படி தான் கேட்டுருப்பாங்க", என்று நினைத்து கொண்டே காவ்யாவை இமைக்காமல் பார்த்தாள் மதி.
"என்ன டி நான் கேட்டுட்டே இருக்கேன்? நீ என்னையே பாத்துட்டு இருக்க?", என்று கேட்டாள் காவ்யா.
"எனக்கு இப்ப உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு காவ்யா"
"தயவு செஞ்சு அப்படி செஞ்சிறாத டி. எல்லாரும் நம்மளை தப்பா பேசுவாங்க. நீ பதில் சொல்லு. சந்தோசமா தான இருக்க? பிரச்சனை ஒண்ணும் இல்லைல?"
"நீ எனக்கு தோழியா கிடைச்சதுக்கு, நான் புண்ணியம் பண்ணிருக்கணும்னு அத்தான் சொன்னாங்க காவ்யா. அதை தான் நான் இப்ப நினைச்சேன்"
"போடி. அதை விடு. வீடு புடிச்சிருக்கா?"
"ரொம்ப பிடிச்சிருக்கு. அத்தையும், மாமாவும் அன்பா பாத்துக்குறாங்க. அதை விட அத்தான் ரொம்ப நல்லவங்க. நீ கவலை படாத"
"அத்தான்னு சொன்ன உடனே உன் முகம் அப்படியே பூ பூத்த மாதிரி இருக்கு. வேற என்ன சொன்னாங்க உங்க அத்தான்?"
"எதை சொல்லணும்? எதை சொல்ல கூடாதுன்னு தெரியலையே", என்று முழித்து விட்டு வீட்டில் நடந்தது அனைத்தையும் சொன்னாள்.
அவன் குளித்து விட்டு துண்டுடன் வந்ததை மட்டும் மறைத்தாள் மதி.
"ரொம்ப சந்தோசம் டா மதி. அழகான வீடு, சூப்பர் லைஃப். இது உனக்கு எப்பவும் சந்தோசத்தை கொடுக்கணும். ஆனா இப்படியா உன் மாமியார் கிட்ட போய் அழுவ. அவங்க என்ன என்ன நினைச்சாங்களோ?"
"என்ன, என்ன நினைச்சாங்கன்னா?"
"அதை உன் அத்தான் கிட்ட போய் கேளு. சரி இப்ப எப்படி வந்த?"
"அத்தான் தான் கார்ல விட்டாங்க. கல்யாணம் ஆனது இங்க யாருக்கு தெரிஞ்சாலும் பரவால்லயாம். காலேஜ்ல சொல்ல சொல்லிட்டாங்க. ரிசப்சன்க்கு கூப்பிட சொன்னாங்க"
"ஹ்ம்ம் அப்ப சந்தோசம். எதுக்கும் பத்திரிகை அடிச்ச உடனே சொல்லு. இல்லைனா கிண்டல் பண்ணுவாங்க. சரி வேற என்ன சொன்னாங்க?"