(Reading time: 11 - 21 minutes)

அனிதாவுடனான விரிசல் கேட்டு சாரு முதலில் அதிர்ந்து போனாள்… பின் தீபன் தெளிவாக நடந்ததை எடுத்துரைத்திட, அவளுக்கு விக்கியின் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தது… அதே போல் அனிதாவின் பக்கம் இருந்திட்ட ஆதங்கமும் அவளுக்கு விளங்கிற்று…

தான் விரும்புபவனுக்கும் வாய்ப்பு கிடைத்து அவன் முன்னேறிட வேண்டுமென்ற எண்ணம் வரவேற்கத்தக்கது தான்… எனினும், அதற்கு அவள் சொல்லிட்ட வழியானது, முன்னேறி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணும் யாருக்கும் உகந்ததாய் தென்படாது… அது தான் விக்கிக்கும் தோன்றியது… எனினும் அவன் அதனை அவளுக்கு புரிய வைக்க முயன்ற இடமும், விதமுமே அனிதாவினை மேலும் பேசவைத்தது என்றும் சாருவிற்கு புரிந்தது…

அனிதா… அடிப்படையில் நல்லவள் தான்… விக்கியே உலகம் என்றெண்ணியவளும் அவளே தான்… எனினும் அவள் வாய்ப்புத் தேடி அலைகையில் அவளுக்கு யாரும் உதவ முன்வரவில்லை… தானாகவே அடிபட்டு அடிபட்டு தோல்வியின் பிடியில் இருந்திடுகையில், கிடைத்திட்ட ஓர் வாய்ப்பை அவள் பயன்படுத்திக்கொள்ள, அவள் அத்துறையில் கால்பதித்தாள்…

எனினும் அவள் காலூன்றிட உதவி செய்திட்டவன் கரண் தான்… கரணின் உதவி நோக்கம் எத்தகையது என புரியவைக்க முயன்றிட்ட விக்கியினது வார்த்தைகள் சற்றே குற்றம் சாட்டும்படி அமைந்திட, அவளுக்கு அது பிடித்தமாயில்லை…

இரு உள்ளங்களுக்கு இடையிலும் நிகழ்ந்திட்ட கருத்து வேறுபாடு இந்த அளவுக்கு இருவரினையும் பிரித்து வைத்திட்டது என்று புரிந்து கொண்டாள் சாரு… இதற்கு தீர்வு காணவேண்டுமென்று அவளே எண்ணியிருந்த வேளை, நிகழ்ந்திட்ட நிகழ்வுகள் அதற்கு சாதகமாகவும் அமைந்திட, விக்கிக்கு அவன் செய்த தவறினை புரிய வைத்தாள் சாரு..

“அவளும் பாவம் தான விக்கி… அவ சைடுல இருந்தும் கொஞ்சம் யோசிச்சுப்பாரேன்…”

என சாரு சொன்ன வார்த்தைகளை மனதினுள் ஏற்றி, அதை அசைப்போட்டு பார்த்தவனுக்குள் தன் பக்கம் இருந்த நியாயமும், அவள் பக்கம் இருந்திட்ட ஆதங்கமும் புரிந்தது தெளிவாய்…

“ஹலோ விக்கி லைனில் இருக்குறீயா?...”

சாரு அந்தப்பக்கம் இருந்து கேட்டிட, “ஆ…. அக்கா…” என்றான் அவன் திணறியபடி…

“உன்னை நம்பி நான் வரப்போறேன்… எதை வச்சு என்னைக்காப்பாத்துவன்ற கேள்வியில தான் அவ அப்படி பேசியிருக்கா விக்கி… அதுக்காக அவ செஞ்சது சரின்னு நான் சொல்லவரலை… அவளுமே அதை சொல்லுற விதமா சொல்லியிருக்கலாம்… அதை அவ செய்யலை… உன் பிடிவாதத்தை விட்டு நீ வெளிய வான்னு சொன்னது உன் தன்மானத்தை பாதிச்சிட்டு… அதுதான் அப்போ அவளுக்கு பெரிய பூதாகரமான பிரச்சினையா தெரிஞ்சிருக்கு… அதுவும் இல்லாம அந்த கரண்… அவனைப் பத்தி நீ பேசி புரிய வச்ச இடம் தான் சரியில்லை விக்கி… பப்ளிக் ப்ளேஸ்னு பார்க்காம இரண்டு பேரும் பேசி பேசி பேச்சை வளர்த்து கடைசியில அழகான காதலையும் தொலைச்சி உடைச்சிருக்கீங்க…”

அவள் பேச பேச அமைதியானான் விக்கி…

“எங்க இப்படியே உன் லைஃப் ஆகிடுமோன்ற பயம் அவளுக்கு… அந்த கரணால அவ லைஃப் பாதிக்கப்படுமோன்ற பயம் உனக்கு… இதுக்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னன்னு நீ யோசிச்சிப்பார்த்தீயா விக்கி…”

“……………….”

“காதல்….. இரண்டு பேருக்குள்ளேயும் அது இருந்தும், சரியான புரிதலும் தெளிவும் இல்லாம இந்த விரிசல் விழுந்திருக்கு… இதை இப்படியே விடவா?... இல்ல உன் வெற்றியால சரிபண்ணவான்னு மட்டும் யோசிச்சிப்பார்த்துக்கோ விக்கி... இது உன் லைஃப்…  பார்த்துக்கோ… ஒரு அக்காவா உனக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான்…”

அவள் சொல்லியதும், அவனின் எண்ணங்கள் அடுத்த வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்திட, அவனின் மாற்றம் எண்ணி புன்னகைத்தவாறு போனை வைத்திட்டவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திட்டான் தீபன்…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.