(Reading time: 15 - 30 minutes)

“செர்ரி... அந்த ஈஸ்வர் சாரை எங்கே பார்க்கலாம்” என்று போனில் கேட்டுக் கொண்டிருந்த போதே அந்த மருத்துவமனை நிர்வாக அலுவலர் ஷிண்டே அவனைத் தேடிக் கொண்டு வந்தார்.

“டாக்டர் ஈஸ்வர் சார் உங்களை பார்க்கணும்ன்னு சொன்னார். அவர் ஹாஸ்பிடல்லோட முக்கியமான ட்ரஸ்டி. உங்களுக்கு நன்றி சொல்லணும்னு வெயிட் செய்றார்” என்று கூற லைனில் இருந்த ஹரிணிக்கு இந்த சம்பாஷணை கேட்டது.

“ராம். கிரேட். இப்போ தான் அவரை நீ பார்க்கணும்னு சொன்ன. அவரே வந்திருக்கார். ஒகே ராம். ஏதேனும் முக்கியமான விஷயம்னா கால் பண்ணு”

“ஓகே செர்ரி பை” போனை அணைத்து விட்டு ஷிண்டே உடன் நடந்தான்.

ஈஸ்வர் சார் என்று ஷிண்டே அறிமுகம் செய்து வைக்க கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் கணேஷ் ராம்.

நடுத்தர வயது தான் இருக்கும் அவருக்கு. ஆனால் முதுமை தன் முகவரியை பதித்து விட்டிருந்தது. முகம் நிறைய சாந்தம். எனினும் அந்த கண்களில் ஓர் இழப்பின் தவிப்பு.

ராமின் கரங்களைப் பற்றிக் கொண்டார் அவர். மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார்.

அவரை இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஷிண்டே பார்த்ததே இல்லை ஆதனால் ஓர் ஆச்சரியத்தை வெளிபடுத்தினார்.

அதற்குள் ஷிண்டேக்கு முக்கிய பணி வந்து விட அங்கிருந்து அவர் விலகவும் கணேஷ் ஈஸ்வரை அமரும் படி சொல்லி தானும் அமர்ந்தான்.

அது வரை ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தனர்.

“உங்களுக்கு சொந்த ஊர் எது” சட்டென தமிழில் கணேஷ் கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்தார் பெரியவர்.

“நீங்க தமிழ் தானே. இல்லையா” எனவும் “ஆம்” என்று பதில் கூறினார்.

“டாக்டர் ஹரிணி கூட பேசிட்டு இருந்த போது தான் உங்க மனைவி பற்றி தெரிய வந்தது. அவங்க பேர் கௌரி தானே” கணேஷ் கேள்விகளை முன் வைக்க அது வரை தன் மனதிலேயே வைத்திருந்த அனைத்தையும் அவனிடம் கொட்டினார் ஈஸ்வர் என்ற சர்வேஸ்வர்.

பல வருடங்களுக்கு முன் தந்து மனைவி கௌரியையும் மகளையும் இழந்து இன்று வரை தவித்துக் கொண்டிருக்கும் கதையைக் கூறினார்.

சார்....டாக்டர் உங்களை வரச் சொன்னார்” நர்ஸ் வந்து கூப்பிட தவிப்போடு அந்த அறைக்குள் சென்றார் சர்வேஸ்வர்.

அங்கே டாக்டர் சிவகுமார் கௌரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறவும் சர்வேஸ்வர் உடைந்து போனார்.

“உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு. குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால் இன்குபேட்டரில் வைத்திருக்கோம். நீங்க குழந்தையை பக்கத்துக்கு ஊரில் இருக்கும் குழந்தைகள் ஹாஸ்பிடல்ல சேர்க்க ஏற்பாடு செய்தா நல்லது” குழந்தைகள் நல மருத்துவர் சொல்லவும் என்ன விதமான உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தார்.

குழந்தையை ஒரு முறை பார்க்கும் ஆசை எழும்பியதை சிரமப்பட்டு அடக்கினார். முதலில் குழந்தை நல்ல படியாக பிழைக்க வழி செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்ய விரைந்தார்.

சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவரை வேகமாய் வந்த பைக் ஒன்று இடித்து விட தடுமாறி விழுந்தவர் தலையில் பலத்த அடி படவே மயங்கி விழுந்தார்.

அந்த இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில் எவ்வளவு நேரம் நினைவு தப்பிய நிலையில் இருந்தாரோ.

அங்கே தற்செயலாக ஒதுங்கிய லாரி ஓட்டுனர் கண்ணில் பட்டார்.

அந்த லாரி ஓட்டுனர் சர்வேஸ்வர் அருகில் வந்து தட்டி எழுப்ப சற்றே கண் விழித்தவருக்கு எதுவும் புரியவில்லை.

அந்த லாரி ஓட்டுனருக்கு அவரசரமாக செல்ல வேண்டி இருந்தது. அடிப்பட்ட மனிதரை அங்கேயே விட்டுச் செல்லவும் மனம் ஒப்பவில்லை. எனவே கிளீனர் உதவியோடு லாரியில் ஏற்றினார்.

லாரி மங்களூர்  நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்க வழியில் மயக்கம் தெளிந்த சர்வேஸ்வருக்கு நினைவு தப்பிப் போயிருந்தது.

அவரது நிலை பார்த்து பரிதாபம் கொண்ட லாரி ஓட்டுனர் தன்னுடனேயே அழைத்துச் சென்றார்.

தலையில் அடிபட்டதால் அம்னீசியா ஏற்பட்டிருந்தது.

லாரி ஓட்டுனர் உதவியால் மங்களூர் அருகில் உள்ள நகரில் சிறு வேலை ஒன்றில் சேர்ந்திருந்தார்.

அவர் பெயர் என்னவென்று கேட்க லாரி ஓட்டுனர் எதிரில் இருந்த கடையின் பெயர் பலகையைப் பார்த்து ஈஸ்வர் என்று கூறினார்.

பெயர் ஓர் வகையில் பொருத்தமாகவும் அமைந்து போனது.

அவ்வபோது சில நினைவுகள் வருவதும் போவதுமாய் இருக்க பத்து வருடங்கள் கடந்து விட்டிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.