(Reading time: 17 - 33 minutes)

அன்னை மடியில் இப்போது படுத்துக் கொண்டதைப் போல தன்னியல்பாய் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டதை நினைத்து நினைத்துப் பார்த்தான்.

“என்ன மாதிரியான உணர்வு அது. என் அம்மாவின் அணைப்பில் நான் காணும் ஒரு விதமான சுகமான பாதுகாப்பை அவளுக்கு தர வேண்டும் போல. இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். அவளை எப்படி தொடர்ப்பு கொள்வது என்றும் தெரியவில்லை. வில் ஷீ பி ஆல்ரைட். எப்போது ரிசல்ட் வரும்”

இமைகள் மூடியே இருந்த போதிலும் எண்ணங்கள் ஓய்வின்றி ஊஞ்சாலடிக் கொண்டிருந்தன.

ஷா ஸா” இனிமையான குரல் கேட்டதும் அவன் விழிகளும் விழித்துக் கொண்டன.

சட்டென ஓர் உற்சாகம் அவனைத் தொற்றிக் கொண்டது.

இப்போது இன்னும் அருகில் அந்தக் குரல் கேட்க மெல்ல அன்னை மடியில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தான்.

அவனுக்கு முன் அவள் நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அப்போது குண்டு கன்னங்களோடு சிறுமியாக இருந்தவள் இப்போது அழகு ரதியாக யுவதியாக வளர்ந்திருந்தாள்.

ஆனாலும் அவளது மனமும் குணமும் வளரமாலே இருந்ததைக் கண்டு துணுக்குற்றான் ஹர்ஷா.

அவள் ஸ்வாதிகா தேவி.

அவனது மூத்த பெரியம்மாவின் தம்பி மகள். குஜாராத்தில் உள்ள ராஜ குடும்பத்தின் ஒற்றை வாரிசு. ஒரே பிள்ளை என்பதால் அளவு கடந்த செல்லம்.

எட்டு வயதில் தந்தையின் மறைவுக்குப் பின் ஹர்ஷா அரண்மனை வந்த போது அங்கு அவனுக்கு இளையவளாக நான்கு வயது சிறுமியாக அவன் கண்களில் தென்பட்டவள் அவள் மட்டும் தான்.

விடுமுறை, விசேஷங்கள், முக்கிய நிகழ்சிகள் என்று அத்தை வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஹர்ஷாவுடன் விளையாட ஆர்வம் கொள்வாள்.

அவளோடு உடன் சேர்ந்து விளையாட ஆசையாக இருந்த போதிலும் ஹர்ஷா அவளிடம் இருந்து ஒதுங்கியே செல்வான்.

“ஏன் ஹரி ஸ்வாதிகா கூட விளையாடலாம்ல” சாரதா சொல்லும் போது மறுப்பாய் தலையசைத்து விடுவான்.

“அவள் உங்களுக்கு நமஸ்தே சொல்றதே இல்ல. நீங்க ஏதாச்சும் கேட்டா பதில் பேசாம தலையை திருப்பிட்டு போறா. காகி ஸா தீதி ஸா போலவே. எனக்கு அவளை பிடிக்கலை”

மகன் இவ்வாறு சொல்லும் போது சாரதாவிற்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் போகும்.

தன்னை இன்னும் குடும்பத்தில் ஒருத்தியாய் ராஜா விஷ்ணுவர்தன் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சிறு குழந்தை என்ன செய்யும். ஆனாலும் மகன் அதை மிகவும் முக்கியமானதாக கருதுவது உண்மையில் தாயாக அவருக்கு மிகுந்த பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது தான். இருப்பினும் அந்தக் குழந்தை அவனை விளையாட அழைக்கையில் அவளை உதாசீனம் செய்வதும் அவருக்கு சரியாகப் படவில்லை.

“அவ இன்னும் குழந்தை தானே. பெரிய பெண்ணாக ஆனதும் அம்மாவுக்கு அவள் நமஸ்தே சொல்வா” என்று அப்போதைக்கு சமாதானம் செய்து வைப்பார்.

சிறு பிராயத்தில் அரண்மனையில் தோட்டத்தில் என்று அவளோடு ஓடிப் பிடித்து விளையாடுவான்.

கொஞ்சம் பெரியவள் ஆனதும் முன்பு போல தன்னுடன் விளையாட அவள் அழைப்பதில்லை. அவனும் நீச்சல் பயிற்சி, குதிரையேற்றம் என்று சென்று விடுவான்.

ஆனாலும் அவள் அவனுக்காக ஏதேனும் பரிசுப் பொருள் எடுத்துக் கொண்டு வந்து தரும் போதெல்லாம் அவளோடு சந்தோஷமாக உரையாடி மகிழ்வான்.

“ஷா ஸா நான் யூரோப் ட்ரிப் போன போது  வாங்கி வந்தேன்” என்று அவனிடம் பரிசுப்பொருளை நீட்டுவாள்.

“அதென்ன ஷா ஸா”

“உங்க பேர் ஹர்ஷா தானே. ஷா ன்னா ராஜா அதான் ஷார்ட்டா ஷா ஸா என்கிறேன்”

“ஹர்ஷான்னா சந்தோஷம்ன்னு அர்த்தம். ஷா ஒன்னும் ராஜா இல்லை. ஷாஹ் தான் ராஜா. அரேபிக் வோர்ட்” ஹர்ஷா விளக்கமாய் சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை.

எப்படியாச்சும் கூப்பிடு என்று விட்டு விடுவான்.

அவன் மெடிகல் காலேஜ் சேரும் முன்பு அவளைப் பார்த்தது. அப்போது பதிமூன்று வயது சிறுமியாக குழந்தைந்தனம் மாறாமல் இருந்தாள்.

அவனது பிறந்தநாள், தீபாவளி என்று வாழ்த்து அட்டை தவறாது அனுப்பி வைப்பாள்.

ஸ்வாதி அனுப்பினாள் என்று அவனது பாட்டி அவன் விடுமுறைக்கு வரும் போது அவனிடம் தருவார். அப்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.