(Reading time: 17 - 33 minutes)

றுதி ஆண்டின் தேர்வு முடிவுகள் வெளி வரவிருந்தன என்ற தகவல் கேட்டு அனைவரும் கல்லூரி திரும்பினர்.

ரஞ்சனி தான் கல்லூரி அலுவலகத்தில் தவம் கிடந்தாள்.

ரிசல்ட் வந்தா போய் பார்த்துக் கொள்ளலாம் என்று விடுதியிலேயே தங்கி விட்டிருந்தாள் ஹரிணி.

“ஹரிணி உன் நம்பர் குடு. பார்த்துட்ட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு சென்றாள்.

ஹர்ஷா அன்று மதியம் தான் சென்னை வருவதாக இருந்தது.

முடிவுகள் பதினோரு மணியளவில் வெளிவந்தன. கிட்டத்தட்ட மூன்றில் ஓர் பங்கு மாணவர்கள் தேர்வில் வெற்றிப் பெற தவறியிருந்தனர்.

மருத்துவப் படிப்பில் இது வழக்கமான ஒன்றே.

“ஹரிணி நாம பாஸ் செய்திட்டோம்” ரஞ்சனி வந்து ஹரிணியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குதித்தாள்.

ஹர்ஷவர்தன் இறுதி ஆண்டு தேர்விலும் யுனிவர்சிடி பர்ஸ்ட் பெற்றிருந்தான். ஆனால் எங்கே அதை சொன்னால் ஹரிணி கோபித்துக் கொள்வாளோ என்று அதைக் கூறாமலே விட்டாள் ரஞ்சனி.

ரஞ்சனியைப் போல துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்யவில்லை என்றாலும் தேர்வில் வெற்றிப் பெற்றது ஹரிணிக்கு உள்ளூர மிகுந்த சந்தோஷமாகவும் நிம்மதியாகவும்  இருந்தது.

எப்போதும் ரஞ்சனியே ஹர்ஷா புகழ் பாடுவாள். ஆனால் இன்று அவள் ஒன்றும் கூறாதது ஹரிணிக்கு சற்று பதட்டத்தை உண்டு பண்ணியது.

“ஹர்ஷா வந்திருந்தானா. அவன் ரிசல்ட் தெரியுமா ரஞ்சனி” வாய் விட்டுக் கேட்டே விட்டாள்.

ரஞ்சனிக்கோ கொள்ளை ஆச்சரியம். இது நனவு தானா என்று தன்னைக் கிள்ளி வேறு பார்த்துக் கொண்டாள்.

ஓடிச் சென்று ஜன்னல் வழியே வானத்தையும் பார்த்தாள்.

“நிஜம் தானா ஹரிணி. நான் கேட்டது உண்மை தானா. சொன்னது நீ தானா” என்று ராகம் படிக்க ஹரிணிக்கோ சற்று எரிச்சலாக இருந்தது.

“பிரின்ஸ் இந்த முறையும் யுனிவர்சிடி பர்ஸ்ட் இன் த்ரீ சப்ஜெக்ட்ஸ்” ரஞ்சனி முகம் நிறைய சந்தோஷத்துடன் கூறவும் ஹரிணிக்கு உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

எப்போதும் அவள் மனதை மறைக்க முயன்றதே இல்லை ஆதலால் அந்த மகிழ்ச்சியின் ரேகைகள் அவள் முகத்தில் தெள்ளத் தெளிவாய் தெரியவும் ரஞ்சனி மேலும் ஆச்சரியம் அடைந்தாள்.

“மதியம் மார்க் சீட் வந்திடும். அப்புறம் நம்ம இன்டர்ன் லிஸ்ட் போடுவாங்க. ஈவனிங் கோயிலுக்கு போகலாமா” ரஞ்சனி கேட்க சரி என்றாள்.

“நான் போய் எல்லோருடைய ரிசல்ட் தெரிஞ்சிட்டு வரேன்” ரஞ்சனி சென்று விட தான் பாஸ் செய்துவிட்டதை வீட்டிற்குத் தெரிவிக்க போன் பூத் சென்றாள் ஹரிணி.

ஹர்ஷா விடுதிக்குள் நுழைந்ததும் ஒரே வாழ்த்து மழையும் கரகோஷமும் தான்.

எல்லோருடைய வாழ்த்துக்கும் நன்றி சொன்னவனுக்கு ஹரிணி ரிசல்ட் என்ன என்று தெரிய வேண்டியிருந்தது.

தானே கல்லூரி சென்று அறிவிப்புப் பலகையில் பார்க்க அங்கு ஹரிணி பாஸ் என்றிருக்கவும் நிம்மதி அடைந்தான்.

தனது அன்னைக்கு போன் செய்து தனது ரிசல்ட் சொன்னவன் ஹரிணி பாஸ் செய்து விட்டாள் என்றே பெரிதாய் மகிழ்ந்தான்.

“அவள் ஹெல்ப் செய்யலைன்னா நான் பாஸ் செய்திருக்கவே முடியாதுமா” என்று தனது மகிழ்ச்சிக்கு காரணம் வேறு கூறினான்.

“கோயிலுக்கு சென்று அப்படியே பீச்க்கும் போக வேண்டும். அலைகளுடன் பேச வேண்டும். அவைகள் மூலம் அப்பாவிற்கு தெரிவிக்க வேண்டும். அவர் கனவை  நிறைவேற்றி விட்டேன் என”  

மாலை வானம் சற்றே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

அதே பச்சையும் சிவப்பு பார்டரும் கொண்ட காட்டன் புடவையை அணிந்திருந்தாள் ஹரிணி.

ரஞ்சனி ஆகாய நீல வண்ணத்தில் பட்டு உடுத்தியிருந்தாள்.

மயிலாப்பூர் காபலீஸ்வரர் கோயிலுக்கு இருவரும் செல்ல அங்கே ரஞ்சனி ஹரிணிக்கும் சேர்த்து பூ வாங்கிவிட அன்று மறுக்காமல் வாங்கி தலையில் சூட்டிக் கொண்டாள்.

அன்று விசேஷ தினம் ஆகையால் கோயிலில் நிறைய கூட்டமாக இருந்தது.

கரு மேகக் கூட்டங்கள் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.