(Reading time: 17 - 33 minutes)

ஆனால் அவன் ஒரு போதும் அவளுக்கு பரிசுப் பொருள் வாழ்த்து அட்டை என்று கொடுத்ததே இல்லை. ஏனோ கொடுக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது இல்லை.

சாரதா அவள் அரண்மனைக்கு வந்து போகும் போதெல்லாம் மகனது பெயரையும் சேர்த்து சொல்லி தரும் பரிசை அவரிடம் இருந்து வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொள்வாள் ஹர்ஷாவிற்காக.

லேஹெங்கா சோலி உரிய ஆபரணங்கள் என்று அணிந்து அப்சரஸ் போல ஜொலித்தாள் ஸ்வாதிகா.

இப்போதும் அவள் சராதவிற்கு வணக்கம் கூறவில்லை.

“எப்படி இருக்க ஸ்வாதிகா. எப்போ வந்தாய்” சாரதா நலம் விசாரித்தார். அதற்கும் அவள் பதில் பேசவில்லை.

“ஷா ஸா நீங்க வந்திருக்கீங்கன்னு புவாஹ் ஸா (அத்தை) சொன்னாங்க” என்று ஹர்ஷாவிடமே பேசினாள்.

“அம்மா உன்கிட்ட கேட்டதுக்கு பதில் சொல்லு முதல்ல” இப்போது சற்று கண்டிப்பாகவே கூறினான் ஹர்ஷா.

“இப்போ தான் வந்தேன்” என்று ஹர்ஷா கடிந்து கொண்டதால் சாராதாவிடம் கூறினாள்.

“அம்மா நான் கொஞ்சம் வெளியில் போயிட்டு வரேன்” என்று அன்னையிடம் கூறியவன் ஸ்வாதிகாவிடம் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு விரைந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவளைக் கண்டதும் மகன் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பின்பு அவளது நடவடிக்கைகளால் அவன் கோபப்பட்டதும் சாரதாவை வருந்தச் செய்தது.

ஆனால் அவரது பிள்ளையின் மனமோ அன்று தனது சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவளையே நினைத்து வருந்தியது.

ரிணி வீட்டில் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் ஏதேனும் வேலை செய்து கொண்டே இருந்தாள்.

சுகீர்த்தி அண்ணா யுனிவர்சிடியில் ஈ.சி.ஈ இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தாள். வரூதினியும் ப்ரீதியும் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தனர்.

அன்று முழு நிலவு. மொட்டை மாடியில் நிலவையும் நட்சத்திரங்களையும் ரசிக்காமல் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“எப்படி அப்படி எமோஷனல் ஆகினேன். அதுவும் அவன் கிட்ட போய். என்ன நினச்சிருப்பான். ஆனா ஆறுதலா இருந்தானே. வேற யார்கிட்டேயும் சொல்லிடுவானோ” இப்படியாக அவள் எண்ணங்கள் ஓர் நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தன.

“எப்போ அவன்கிட்ட எல்லாவற்றையும் கொட்டிட்டேனோ அப்போவே என்னுடைய ரகசியம் ரகசியம் இல்லாம ஆகிடுச்சு. நானே அதை எனக்குள்ள வச்சுக்க முடியலை என்ற போது அவன் எனக்காக ரகசியம் காப்பான்ன்னு நான் எப்படி எதிர்ப்பார்க்கலாம்” அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்தாள்.

“ஹரி அப்படி எல்லாம் யார்கிட்டேயும் சொல்லிட மாட்டான்” உள்மனது அவளுக்கு தைரியம் சொன்னது.

அப்போது தான் அவளுக்கு உரைத்தது. ஹரி என்று அவனை அன்று அழைத்தது.

“என் பையன் ஹரியை இன்னிக்கு தான் இங்க சேர்த்தேன்” சாரதாவின் முகம் அவளது கண் முன் நிற்க அவரது குரல் அவளது காதுகளில் ஒலித்தது.

சாரதாவை நினைத்ததும் மனதிற்கு இதமான ஓர் உணர்வு அவளுக்குள்.

“அன்னிக்கு அவன் முகத்தில் முன்னாடி எப்போதும் பார்க்காத ஹர்ஷாவை பார்த்தேன். அதான் என்னை அறியாமல் ஹரின்னு சொல்லிட்டேன் போல. கொஞ்சம் கொஞ்சம் அவன் அம்மாவை பார்த்த மாதிரியே இருந்தது”

இப்போது மெல்ல அமைதி கொண்டது அவள் மனம்.

உடனேயே அடுத்தடுத்த நிகழ்வுகள் நியாபகத்தில் தோரணம் கட்ட தான் உடைந்ததும் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னதையும் நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

“அவன் என்ன வேணும்னாலும் கேளுன்னு தானே சொன்னான். அதில் என்ன தப்பு இருக்கு. நான் ட்ரீட் தானே கேட்டேன். அதற்கு பதில் சொன்னான். நான் போய் அவன்கிட்ட எப்படி... அவனால மட்டும் என்ன செய்திட முடியும். ஆனாலும் அவன் என் மேல கோபப்படலை, என்னை வெறுத்து ஒதுக்கலை, எப்போவுமே ஓர் அலட்சியப் பார்வை பார்ப்பானே அப்படியும் பார்க்கலை. ஆறுதலா நான் இருக்கேன்னு சொல்றதைப் போல அணைச்சுகிட்டான்” சற்றே அவள் மனம் இளகியது.

உடனேயே சுதாரித்துக் கொண்டு கடிவாளம் இட்டாள்.

“இது என்ன நினைப்பு. அவன் இப்போ என்னை நினைச்சுக் கூட பார்க்க மாட்டான். நான் சொன்னது எந்த பாதிப்பும் ஏற்படுத்தி இருக்காது. ஏதோ அப்போ நான் அப்படி எமொஷனாலாகி உடைஞ்சு போனதினால அப்படி தன்மையா இருந்திருப்பான். இதோட நிறுத்திடணும். அவன்கிட்ட இருந்து தூர விலகியே இருக்கணும்” மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.