(Reading time: 13 - 25 minutes)

அவர் சொல்வதும் சரி என தோன்ற, எல்லோரும் உடன் பட்டனர். பிறகு வடிவேல் தன் வீட்டிற்கு கிளம்பி செல்ல, செழியன் அப்பா ஏதோ யோனையோடே அமர்ந்து இருந்தார்.

அவர் அருகில் அமர்ந்த செழியன்

“அப்பா.. என்ன யோசனை ?”

“ஒன்னும் இல்ல.. நீ விருப்பட்டதுக்கு நான் சம்மதிச்சாலும், ஐயா நினைவு என்னை விட்டு போக மாட்டேங்குது?’

“அப்பா.. அந்த விஷயத்தை தவிர .. உங்களுக்கு மலர நான் கல்யாணம் பண்ணிக்கிறதில் வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?”

“வேற ஒன்னும் இல்லை தம்பி”

“மலர் கிட்டே உங்களுக்கு பிடிக்காத குணம் ஏதாவது இருக்கா?”

“ச்சே..ச்சே.. அந்த புள்ளைய பாத்தவரைக்கும் நல்ல குணம்தான் தெரியுது.. உன் ஆசைய தப்புன்னு சொல்ற அளவுக்கு எதுவுமே இல்லை.. நான் ஒன்னு நினைக்க , நீ ஒன்னு நினைசுருக்க அப்படிங்கறதுதான் பிரச்சினை..”

“அத மறந்துருங்கப்பா.. இன்னைக்கு சாயங்காலம் அவங்க வீட்டில் பேசி, நம்ம கிட்டே நல்ல உறவு வச்சுருக்க அளவுக்கு பார்த்துக்கலாம்.. உங்க ஐயா இருந்தா நிச்சயம் சந்தோஷ பட்டுருப்பார் பாருங்க “

“நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன்” என்றபடி அன்றைய மாலையை எதிர் நோக்கி காத்து இருந்தனர்.

தே சமயம் மலரும் தங்கள் ஊருக்கு வந்து இருக்க, அவர்கள் தங்கள் பெரியப்பா வீட்டில் தங்கி இருந்தனர்.

பெரியப்பா வீட்டில் இருந்து மறுநாள் காலை தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால், அன்று வந்த களைப்பு தீர சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, தன் பெரியப்பா மகளுடன், பக்கத்தில் இருக்கும் இடங்களை பார்க்க சென்று விட்டாள் மலர்.

அவர்கள் ஊர் சுற்ற சென்று இருக்கும் போது , மலரின் பாட்டி சுந்தரியிடம் வந்த மலரின் பெரியப்பா, தன் தம்பி, அவர் மனைவி எல்லோரையும் உட்கார வைத்து,

“ரொம்ப வருஷம் சென்னு நம்ம ஊருக்கு தம்பி குடும்பத்தோடு வந்துருக்க .. ரொம்ப சந்தோஷம்யா.. நம்ம புள்ளங்க ரெண்டு பேரையும் பாக்கப்ப , ரொம்ப நல்லா இருக்கு.. வீட்டில் அதுங்க கலகலன்னு நடமாடுறது , வீட்டுக்கே ஒரு களைய கொடுத்து இருக்கு” என்று கூற,

“ஆமாண்ணே.. நம்ம மலரு ஊரிலே இருக்கும்போது எங்ககிட்டே வாயடிகிட்டு இருக்குமே தவிர, அதுக்கு வெளியில் ரொம்ப சிநேகித பசங்க கிடையாது.. இங்கன நம்ம கயல் புள்ள கூட சுத்தும்போது ரொம்ப உற்சாகமா இருக்கு.. பாக்க பாந்தமாவும் இருக்கு”

இப்போது வேலனின் அண்ணி “ஆமா.. மலரும் தான் ஊரு பக்கம் வந்து எம்புட்டு நாளாச்சு..  இத்தனை நாளா படிப்பு , படிப்புன்னுட்டு இருந்துடுச்சு.. இனியாவது அடிக்கடி வரப் போக இருக்கணும்..”

“ஆமா மதனி.. இந்த வருஷம் தான் படிப்பு முடிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கா “ என்றார்.

“அம்மா .. உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.. இன்னைக்கு பொழுது சாய நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வாராங்க..”

“அதுக்கென்ன தம்பி.. ?”

“வெறும் விருந்தாளிங்க மட்டும் இல்லை.. கையோட நம்ம புள்ளைக்கு சம்பந்தம் பேசவும் போறாங்க..”

“என்ன தம்பி.. தீடிருன்னு சொல்ற?”

“இல்லைமா.. இது நம்ம தூரத்து சொந்தக்கராங்க ஒருத்தங்க கொண்டு வந்த சம்பந்தம்.. “

“அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. மாப்பிள்ளை பையன் என்ன செய்யுறாக?”

“பையன்.. நம்ம மலர மாதிரி தான் வேலை பாக்கான்..”

“குடும்பம் எல்லாம் ?”

“ஒரே பையன்.. “

“எந்த ஊர்காரங்க?”

“சொந்த ஊர் நம்ம ஊர்தான்.. பையன் வேலை, அவங்க அப்பா வியாபாரம் எல்லாம் இப்போ தம்பி இருக்க திருச்சி தான்..”

“அட .. அப்போ ... பொண்ணு நம்ம பக்கத்துலேயே இருக்கும்..”

“நான் மத்த விவரம் எல்லாம் விசாரிச்சுட்டேன்.. பையன், அவன் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி.. எந்த வில்லங்கமும் கிடையாது.. “

“ரொம்ப நல்லதா போச்சு.. நாங்களும் வந்த நேரம் நல்ல விஷயம் நடந்தா எல்லோரும் கலந்துகிட்ட மாதிரி இருக்கும்..”

“ஆமாமா.. அதான் இன்னைக்கு சாயங்காலம் அவங்க வந்து பொண்ண பார்த்து பிடிச்சா, கையோட ஓப்பு தாம்பூலம் மாத்திகிடலாம்ன்னு கேட்டுகிட்டேன்..”

“சரிதான்.. கணேசா.. நம்ம புள்ளைக்கு பையன பிடிச்சு இருக்கா?”

“இல்லைமா .. இன்னும் புள்ளைங்க கிட்ட சொல்லல.. இப்போ திருவிழா காலம்தானே.. அதனாலே சாயங்காலம் அதுங்கள கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணிக்க சொல்லிட்டு, பையன் வீட்டிலே வந்த பின்னாடி கேட்டுக்கலாம்ன்னு தோணிச்சு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.