(Reading time: 19 - 37 minutes)

25. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

தூக்க கலக்கத்தில் இயல்பாக, ”குட் மார்னிங்க் சஞ்சு!” என்று புன்னகைத்தவளின் பார்வை சற்று நேரம் அவன் முகத்தில் நிலைத்து, பிறகு சுற்றத்தை அலசியது.

தானிருப்பது எங்கே? என்ற யோசனையோடு குழப்பமும் சேர்ந்து கொள்ள...

அவளின் முகத்தையே ஆசையோடு கவனித்திருந்த ஜெய்யிற்கு அது புரிய....மெதுவாக அவளை வளைத்திருந்த வலது கையை, சீட்டின் மேல் படரவிட்டான்.  இல்லையென்றால், தூங்குபவளை இவன் தான் தன்னருகே கொண்டு வந்து அணைத்திருந்தான் என நினைத்து இவனிடமிருந்து இன்னமும் விலகிவிடுவாளோ என்ற அச்சம் தான் காரணம்.

அதற்குள் தெளிந்த சரயூவிற்கு, இவன் மார்பில் சாய்ந்திருப்பது புரிய, வேகமாக ஜெய்யிடமிருந்து விலகி ஜன்னலோரத்துக்கு நகர்ந்தாள்.

அவளை மேலும் யோசிக்க விட்டால், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.  அதை தவிர்க்க திட்டமிட்டவன், “உங்க ஊருக்கு வந்தாச்சு சரூ! ஒரு குளியலை போட்டு, வந்த வேலையை பார்க்கனும்.  நீயும் சீக்கிரம் வந்துருடா” அவன் என்னவோ, இவளின் செயலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாது, மிகவும் சாதரணமாக பேசிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி சென்றுவிட்டான். 

ஆனால் சரயூவிற்கு அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.  ‘ச்சே...என்ன நினைச்சிருப்பா? கொஞ்ச கூட வெக்கமேயில்லாம அவன் மேல சாஞ்சிக்கிட்டு வந்திருக்க? எப்போயிருந்து? நைட் ஃபுல்லாவுமா? அய்யோ! என்னை பத்தி தெரிஞ்சு தானே மைதியோட உட்கார நினைச்ச...எல்லா அம்மாவால வந்தது.  இல்ல...இல்ல...என்னைதா சொல்லனும்.... இருக்குற இடம் தெரிஞ்சும் தூங்கின, என்னைதா சொல்லனும்... அவன் என்னை பார்த்து சிரிச்சானோ? இல்ல...அவன் சாதரணமாதா பேசினா... சின்னதா ஒரு கேலி சிரிப்பு இருந்ததோ? அய்யோ! ஒரே குழப்பமா இருக்கே’ தனக்குள்ளே எழுந்த கேள்விகளுக்கு பதில் தேட, மைத்ரி வந்து இவளை அழைத்து சென்றாள்.

இவள் குளித்து தயாரானதும், பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த மற்ற பெண்களிடம் வந்தாள்.

அடுப்பு அமைப்பதற்காக ஒன்று போல் மூன்று கற்களை தேடும் வேட்டையிலிருந்த சாரதா மகளை கண்டதும், “ஜெய் தம்பியும், ஆதர்ஷும் ஆத்துல குளிக்க போயிருக்காங்க...அங்க போயி தம்பியை கவனி” என்று கட்டளையிட்டார்.

“நாங்க கிராமத்து பக்கம் எங்கேயும் போனதில்லை சரயூ.  அதான் ஆறு இருக்குறது தெரிஞ்சதும் இவங்க குளிக்கனும்னு கிளம்பிட்டாங்க” வடிவு விளக்கம் கொடுக்க...

மைத்ரீயோ தன் பங்கிற்கு குற்ற பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தாள்.

“இந்த ஊர்ல ஆறு இருக்கிறதை, ஏன் முதலே சொல்லலை, சரயூ? நீ சொல்லியிருந்தா நானும் ஆத்துல குளிச்சிருப்பேன்.  இப்போ பாரு...வழக்கம் போல பாத்ரூம்ல குளிச்சிருக்க”

‘இவனுக்கும் தெரியாம போயிருந்தா நல்லாயிருந்திருக்குமே! இப்போ இவனுக்கு டவலிலிருந்து மாத்து துணி வரைக்கும் நான் கொடுக்கனுமாம்...அம்மா! உனக்கு வேற வேலையே இல்லையா? நேத்தைக்கும் அவனோட உட்கார வச்சது போதாதுனு இது வேறயா? இன்னும் என்னெல்லாம் செய்யனுமோ? இப்படினு தெரிஞ்சிருந்தா எதையாவது காரணம் காட்டி வராம தப்பிச்சிருப்பே’ என்று மனதினில் புலம்பியவளுக்கு இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கமொன்று தோன்ற....

“ஸாரி மைதி! நாங்க, வருஷத்துக்கு ஒரு முறை இங்க வருவோம்.  அப்படி வரும்போதெல்லாம் ராகுலும் நானும் ஆத்துலதா குளிப்போம்.  இந்த முறை, கிளம்புறதுக்கு முன்னாடியே அம்மா சொல்லிட்டாங்க, ஆத்துல குளிச்சு நேரத்தை வீணாக்காம வீட்லயே குளிக்கனும்னு.  அதனால ஆறு பத்தி உங்கிட்ட சொல்லனும்னு எனக்கு தோனவேயில்லை”

அதை கேட்ட சாரதா, “இவங்க ரெண்டு பேரும் ஆத்துல குளிச்சா பரவாயில்லை....குளிக்கிறோம்னு பேரு பண்ணிக்கிட்டு குறைஞ்சது ரெண்டு மணி நேரம் தண்ணில விளையாடிட்டு இருப்பாங்க.  இந்த முறை நாம ரெண்டு குடும்பமும் வரவும் இவங்க ஆத்துலயே இருந்தா வேலைக்காதுனுதா அப்படி சொன்ன...” என்று தன் தரப்பை முன் வைக்க... 

“வருஷத்துக்கு ஒரு முறைதா இந்த ஆத்து குளியல் போட முடியுறப்போ சீக்கிரமா வர முடியுமா என்ன?” என்றாள் மகள்.

“நீ சொல்றதும் சரிதா சரயூ!” என்றவளின் குரலில் ஆற்றில் குளிக்க முடியாத ஏக்கம் வழிந்தது.

‘இது...இதை தான் எதிர்பார்த்தேன்’ என்று மனதுக்குள் துள்ளிய சரயூ, “உனக்கும் ஆத்துல குளிக்கனும்னு தோனும் போது, ஏன் இங்க உட்கார்ந்திருக்க வா போகலாம்.  இன்னொரு முறை குளிச்சா குறைஞ்சு போக மாட்ட... வா மைதி!”

மைத்ரீயின் கண்கள் ஆசையில் மின்ன... அடுத்த நொடி, சட்டென முகம் வாடியது.

அதை கவனித்த சரயூ, ‘மைதி ப்ளீஸ்! குளிக்குரேனு சொல்லு...அப்போதா என்னோட திட்டபடி நீயே அவனுக்கு தேவையான துணிய கொடுப்ப...நான் நிம்மதியா இங்கயே இருப்பேனாம்...ப்ளீஸ்...ப்ளீஸ்’ இவளுக்குள் மைத்ரீயிடம் வேண்டுகொள் வைக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.