(Reading time: 19 - 37 minutes)

தலைமுடியிலிருந்து சொட்டிய நீரை துடைக்காது...சரயூ தலை துவட்டிவிடுவாளோ என்ற எதிர்பார்ப்போடு ஆடையை அணிந்து கொண்டு திரும்பியவனுக்கு, சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்தவளை கண்டு ஏமாற்றமே மிஞ்சியது.

தாயிருந்த போது கிடைத்த சுகம் இன்று மனைவியிடம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்திற்கு.... இன்று முடிவில்லையா? அல்லது என்றுமே முடிவில்லையா?

‘இல்ல! என் சரூ மாறுவா என்னை புரிஞ்சுக்குவா.... அவட்ட சின்ன சின்ன மாற்றம் தெரியுது.  இன்னைக்கே எல்லாம் நடந்திடாது.  ஆனா கூடிய சீக்கிரம் எல்லா சரியாகி நாம ஹேப்பியா இருப்போம் சரூ!’

நெஞ்சின் ஏக்கத்திற்கு மறுந்திட்டவனோ மனையாளின் மனதை அறியவைல்லை! அறிந்திருந்தால் இப்படி வருந்த வாய்ப்பிருந்திருக்காது! அறியும்போது எல்லாமே கைமீறியிருக்குமோ?!

தன் பிறகு நேரம் இறக்கைக் கட்டி பறந்தது.  பொங்கலிட்டு படையல் வைத்து, கோயில் பூசாரி செய்ய சொன்ன சில சம்பிரதாயங்களும் செய்து முடித்து, அரசியூரிலிருந்து கிளம்ப மதியமானது.

சரயூவின் நெருக்கம் கிடைக்குமென ஆவலாக ஜெய் காத்திருந்த பயணத்தில், அவள் கண்களை மறந்தும் கூட மூடவில்லை.  தூங்கினால் தானே இவன் மேல் சாய வேண்டியிருக்குமென அவள் முழித்திருக்க முடிவு செய்திருந்தாள்.  இதையறியாத ஜெய்யோ மனைவி எப்போது தூங்குவாள் என்று தவமிருக்க...அதற்கு பலனின்றியே எல்லோரும் பெங்களூருவை அடைந்தனர்.

முன்தின இரவு தூங்காததும், இத்தனை தூர பயணக்களைப்பும், நியாயப்படி அவனை தூக்கத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.  ஆனால் அவனுக்கிருந்த சந்தோஷத்தில் இமைகளை மூடவுமில்லை.  அன்றைய பொழுதை ஜெய் மிகவும் ரசித்தான்.  தன்னுடைய பார்வை வட்டத்திலேயே இருந்த சரயூ, அவள் உடுத்தியிருந்த குங்கும நிறப்பட்டும், தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரமும், இவன் கட்டிய மஞ்சள் கயிறும், அதை கண்டதும் இவனுளெழுந்த...இவள் என் மனைவி என்ற கர்வமும், அடிக்கடி இவனை தீண்டிச் சென்ற அவளுடைய மயக்கும் விழிகள் கொடுத்த சிலிர்ப்பும் ஜெய்யை மொத்தமாக கிறங்கடித்தன. 

வீட்டிலிருக்கும் போது தன்னை காண்பதை தவிர்ப்பதற்காகவே அறையை விட்டு வெளியில் வராமலிருப்பவள்...அப்படியே வெளியில் வந்தாலும் இவனிருக்கும் பக்கம் வரமாட்டாள்.  இவன் எதையாவது கேட்டால், அதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுபவள், தப்பி தவறி கூட தலையை நிமிர்த்தியதில்லை.  அப்படியிருக்க...இன்றோ சரயூ, இவனை பல முறை பார்த்துவிட்டாள்.  

காலையில் சரயூவிடமிருந்து வந்த ‘சஞ்சு’ என்ற அழைப்பும் சேர்ந்து கொள்ள, நீண்ட நாட்களுக்கு பிறகு, மனதில் மகிழ்ச்சியூற்று.  அவள் தன்னை முழுதாக வெறுத்திருந்தால் இந்த அழைப்புக்கு வாய்ப்பில்லையே.  எனில் அவள் மனம் மாறும்...அல்லது இவனே சரயூவின் மனதை மாற்றி அவளுக்குள் இருக்கும் இவன் மீதான காதலை உணர்த்துவான்.  அதன் பிறகு இவர்களின் வாழ்வு மலர்ந்திடுமென்ற நம்பிக்கையில், காதல் கற்பனைகளில் மிதந்தவன் தன்னையும் அறியாது தூங்கி போனான்.

து ஒரு இருள் நிறைந்த காடு.  எங்கும் மரங்களும் புதர்களுமாக மண்டிகிடக்க, அங்கு மனித நடமாட்டமில்லை என்பது தெரிகிறது.  திடீரென யாரோ ஓடுவதும், பின்தொடர்ந்து மற்றொருவர் ஓடும் சலசலப்பும்.... ஒரு பெண்ணின் அழுகையுடன் கலந்த அலறல்....முதலில் ஓடும் பெண்ணை யாரோ துரத்துவதை உணர்த்தியது.

பயத்தில் அலறியடித்து விழித்து கொண்ட ஜெய், நடுங்கிய கைகளை சமாளித்து, மேஜை மீதிருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு வேகமான மூச்சுகளை வெளியேற்றினான்.

சில காலமாக, அடிக்கடி ஜெய்யை துரத்திக் கொண்டிருக்கும் கனவிது.  ஒரு பெண்ணின் கற்புக்கு ஆபத்து என்பதை தெளிவாக்கும் இந்த கனவில் யாருடைய முகமும் இதுவரை தெளிவாக தெரிந்ததில்லை.  அப்படியிருக்க இன்று, அந்த பெண்ணை சரயூவாக கண்டவனுக்கோ உயிர் ஒடுங்கியது. 

பல முறை கண்டு மனதில் பதிந்து போனதில், சரயூ தோன்றவும் கனவுதானே என்று ஒதுக்க முடியவில்லை.  எப்போதுமே இவனை கலங்க வைக்கும் இந்த கனவில் இப்போது சரயூவின் முகமும் சேர்ந்து கொண்டு இவனுள் பயத்தை ஊன்றியது. 

‘சரூக்கு ஏதும் நடக்குமோ? இருக்காது! அதுவரைக்கும் நான் சும்மாயிருக்க மாட்டேன்.  என் உயிரை கொடுத்தாவது அவளை காப்பாத்துவேன்’ உறுதியாக சொல்லிக்கொண்டவனுக்கு....ஒரு நாள், இவன் கனவில் சிரித்த மைத்ரீ நினைவுக்கு வந்தாள்.  நிஜத்திலும் மைத்ரீ சிரித்தாளே! அன்று தான் ராகுல் அவளை பெண் பார்க்க வந்து, அவர்கள் காதல் கைகூடியது.  எனில் ஜெய்யின் கனவு பலித்திறதா?! கூடாது...அப்படியேதும் நடக்காது! நடக்கவும் கூடாது! பக்கத்து அறையில் இருப்பவளுக்கு எந்த ஆபத்துமில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.