(Reading time: 13 - 25 minutes)

அமேலியா - 42 - சிவாஜிதாசன்

Ameliya

மாலை மயங்கும் நேரத்தில் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் கடற்கரை மணற்பரப்பில் தனிமையாக நின்று கொண்டிருந்தாள் அமேலியா. அவள் விழிகள் அலைகளையே நோக்கிக்கொண்டிருந்தன. மழலை போல் தத்தித் தத்தி தவழ்ந்து வரும் அந்த அலையின் அழகு அவள் மனதில் பல கற்பனைகளை தோற்றுவித்தது. நிம்மதியான உள் மூச்சினை இழுத்து வெளியே விட்டவள் விண்ணும் கடலும் ஒன்றாக கலக்கும் அந்த அழகான இடத்தை நோக்கினாள். இதழ்கள் அவளையும் அறியாமல் புன்னகை சிந்தின.

அந்த இடத்திற்கு வந்து சரியாக இரண்டு நாட்கள் கடந்து விட்டாலும் சற்று நேரம் முன்பு தான் வசந்தோடு காரில் வந்து இறங்கியது போல் அவளுக்குள் ஓர் எண்ணம். மகிழ்ச்சி, கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்களை கடத்தி விடுகிறது. அதிசயங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் அதை உணர மறுக்கிறோம்.

உண்மையான சந்தோசம் என்ன என்பதை ஓரளவு அமேலியா புரிந்து கொண்டாள். பிடித்தவர்களுடன் இருப்பது, இயற்கையோடு கலந்திருப்பது. தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உருவாக்கிக் கொள்வது, உடல் கேட்கும் ஓய்வை கொடுப்பது, படுத்தவுடன் உறங்குவது, ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது, இவை தான் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்க முடியும். அதைத் தான் இரண்டு நாட்களாக அவள் அனுபவித்திருக்கிறாள். அவளை பொறுத்தவரை இதுவே மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவர்கள் இருக்கும் சூழ்நிலை, வாழும் பகுதி, அவர்களுக்கான வாழ்க்கை முறைகள் கொண்டு வேறுவிதமான மகிழ்ச்சியை அவர்கள் நாடி செல்லலாம்.

இரண்டு நாட்களாக நடந்தவைகளை எல்லாம் நினைவில் கொண்டு வந்து அசை போட்டாள் அமேலியா. 

அந்த கும்மிருட்டில், மறைத்து வைத்திருந்த உணவை உண்ண ஆசைப்பட்டு திருடனை போல் மாட்டிக்கொண்ட ஜானை எண்ணி நெடு நேரமாக மனதிற்குள் சிரித்தாள் அமேலியா. பாவம்! சேகரித்து வைத்த உணவு வாய்க்குள் செல்லும் முன்னரே பிடிபட்டதை நிச்சயமாக எதிர்பாத்திருக்க மாட்டார். உணவு குறைவானாலும் அதை பகிர்ந்து உண்ணுதல் தானே மரபு!

அவர் மறைத்து வைத்திருந்த உணவுகளை வசந்தும் ஜெஸிகாவும் கண்டுபிடித்து ஜானிற்கு தராமல் அவர்கள் உண்டது நல்ல செயல் அல்ல என அமேலியா எண்ணினாள். வசந்த் அமேலியாவிற்கு உணவை கொடுத்தான். அதை முதலில் வாங்க மறுத்தவள் பிறகு பெற்றுக் கொண்டாள். பின்னர், கப்பல் கவிழ்ந்த முதலாளி போல் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த ஜானிற்கு தன்னுடைய உணவில் பாதியை கொடுத்தாள் அமேலியா.

"பாத்தீங்களா, தனக்கு வந்த உணவை எனக்கு கொடுக்குறா. இது தான் மனித இயல்பு"

"ஒளிச்சு வச்சு தின்ன பாத்தியே அப்போ எங்க போச்சு உன் மனித இயல்பு" என்று நக்கலாக கேட்டான் வசந்த்.

"எல்லாருக்கும் கொடுக்கணும்னு தான் உணவை எடுத்தேன். அதுக்குள்ள, என்னவோ பதுங்கியிருந்த தீவிரவாதியை புடிக்குற மாதிரி புடிச்சிட்டீங்க. ஈராஃல இருந்து வந்த பொண்ணு என்னை பத்தி என்ன நினைக்கும்"

"அவகிட்டயே கேளு" என்றாள் ஜெஸிகா.

"நீ என்னை பத்தி என்ன நினைக்குற ஆஆஆ..அமேலியா"

ஜான் கேட்பது புரியாமல் திருதிருவென விழித்தாள் அமேலியா.

"நான் ஒருத்தன், பாஷை புரியாதவ கிட்ட விசாரிச்சிட்டு இருக்கேன்"

இருள் பூமியை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. எப்படி இரவை கழிப்பது என்று எல்லோரும் யோசித்தார்கள். அந்த இரவு வினோதமான ஒன்றாக அவர்களுக்கு அமைந்தது. எந்த தொழிற்நுட்பமும் இல்லாமல் வீட்டிலும் தங்க முடியாமல் எங்கோ தனியாக காட்டில் மாட்டிக்கொண்டது போல் அவர்கள் எண்ணினார்கள்.

"நாம எப்படி தூங்குறது?" அப்பாவியாய் கேட்டாள் ஜெஸிகா.

"கண்களை மூடித் தான்" என்றான் ஜான்.

"ஹலோ! நான் ஒண்ணும் உங்கிட்ட பேசல. உங்களுடைய அட்வைஸ் எனக்கொண்ணும் தேவையில்லை"

"நானும் உன்கிட்ட சொல்லல. அதோ அந்த மரத்தில இருக்க பறவைகிட்ட சொன்னேன். நல்லா கண்ணை மூடி தூங்கு சரியா" என்று பறவையை நோக்கி கத்தினான் ஜான்.

"வசந்த், அவனை பேச வேணாம்னு சொல்லு"

"ஜான்"

"சாரி, பேசுறது என் உரிமை"

"ஜெஸ்ஸி, அவனை விடு. உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு தூங்குறதுக்கு ரூம் வேணும்"

"பைவ் ஸ்டார் ஹோட்டல்ல அஞ்சாவது மாடியில ரூம் புக் பண்ணிருக்கு. போய் படுத்துக்க"

"ஜான்ன்ன்ன்ன்...."

"ஜெஸ்ஸி ஒரு உண்மையை சொல்லட்டுமா?"

"தேவையில்லை"

"இருந்தாலும் சொல்லுவேன். இருட்டுல தான் நீ ரொம்ப அழகா இருக்க ஜெஸ்ஸி"

தன் கைப்பையை ஜானின் மேல் வீசி எறிந்தாள் ஜெஸிகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.