(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 10 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.10 : இளவரசனுக்கும் ஆபத்து

கடந்த அத்தியாயத்தில்...

ளவரசன் ரவிவர்மனும் நண்பர்களும் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பயிற்சி முடிந்து இளவரசன் தனிமையை நாடினான். தனிமையில் சிந்தனையை ஓடவிட்டுக் கண்ணயர்ந்திருந்தபோது கொலுசின் ஒலிகள் அவன் சிந்தனையைக் கலைத்தன. அவை பூங்கொடி மற்றும் சகுந்தலைக்கு உரியவை என்று கண்டறிந்தான். இளவரசனுக்கும் சகுந்தலைக்கும் இடையே சம்யுக்தனைப் பற்றி வாக்குவாதம் எழுந்து அது சொற்போராக மாறியது. சொற்போரின் இறுதியில் இருவரும் புன்னகைத்தனர். "காதலர்கள் இப்படியா சண்டையிட்டுக்கொள்வது" என்று பூங்கொடி பொய்யான சினத்தோடு கூறியதைக் கேட்டு இருவரின் புன்முறுவலும் வெடிச் சிரிப்பாக மாறியது.

இனி...

விவர்மனும் சகுந்தலையும் நகைப்பதை நிறுத்தாமல் தொடர்ந்ததைப் பார்த்த பூங்கொடி சற்று எரிச்சலுடன் அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் குரலை உயர்த்தி, "போதும் நிறுத்துங்கள்!" என்று சற்று காட்டமாகவே கூறினாள்.

இடிகளாய் வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிரித்த இதழ்கள் அமைதியாயின.

ரவிவர்மன், "நான் என்ன கனவுலகில் மிதக்கிறேனா? இல்லையே, விடியற்காலையிலேயே கண்விழித்து விட்டேனே? பிறகு, எப்படி கனவு கலையாமல் இருக்கும்?" என்று சகுந்தலையை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே கேட்டான்.

சகுந்தலை, காதலர்களுக்கே உரிய பொய்யான கண்டிப்போடு முறைத்தாள்.

இளவரசன் சகுந்தலையைக் கவனியாது பூங்கொடியை நோக்கி, "நீயா வானில் இடித்த இடியைப் போல முழங்கினாய்? இல்லையே, உன் குரல் தேனில் குழைத்தது போலல்லவா இருக்கும்." என்று தன் முகத்தில் ஆச்சர்ய ரேகையைப் படரவிட்டுக் கேட்டான்.

பூங்கொடி அவன் பேசியதை எல்லாம் கேட்டுப் பதிலேதும் கூறாமல் அவனையும் சகுந்தலையையும் தெளிந்த நீரோடையைப் போல் எந்த வித சலனமும் இல்லாமல் பார்வையை வீசினாள்.

இளவரசன் விடாமல் தொடர்ந்தான். தன் வலது கையை சகுந்தலையைப் பார்த்து நீட்டியபடி, "இதை உன்னால் நம்ப முடிகிறதா?" என்று கேட்டான்.

"நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. இளவரசனுக்கு என்ன ஆயிற்றோ என்று"

இளவரசன் திகைத்து, "என்னையா சொன்னாய்? பெண்களுக்கு நடுவில் வந்தேனல்லவா. எனக்கு இது தேவையான பரிசு தான்." என்று கூறி மீண்டும் தொடர்ந்தான். "சம்யுக்தனைப் பற்றி நான் கூறியவை உன் மனதைக் காயப்படுத்திவிட்டனவா?" என்று வினவி பூங்கொடியின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

பூங்கொடி தன் பவள வாயைத் திறந்து, "இளவரசே! தங்கள் மேல் எனக்கு எவ்விதக் கோபமும் இல்லை. நீங்களும் என் அத்தான் சம்யுக்தனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். நான் இன்னும் அதை மறக்கவில்லை. நான் வேறொரு மனக்குழப்பத்தில் இருக்கிறேன். இன்று நான் அறிவீனமாக நடந்து கொண்டதற்கு அது தான் காரணம். தங்கள் மனம் புண்படும்படி நடந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இருள் பரவத் தொடங்கிவிட்டது. நாங்கள் வீட்டிற்குச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது." என்று கூறி சகுந்தலையை நோக்கித் திரும்பி, "செல்லலாமா?" என்றாள்.

இளவரசன், "பூங்கொடி" என்று அழைத்தான்.

"எப்போதும் ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொள்ளும் நீ, இன்று அருவியாய்க் கொட்டியிருக்கிறாய். உன் வார்த்தைகளில் வெளிப்பட்ட மனப்போராட்டம் எனக்கு ஓரளவு புரிந்தது. உன்னால் ஏதும் செய்ய முடியாமல் ஓர் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரிகிறது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயக்கமின்றி என்னிடம் வரலாம்."

"நன்றி, இளவரசே!" என்று சிறு தெளிவுடன் பூங்கொடி கூறினாள்.

சகுந்தலை பூங்கொடியிடம், "சில வினாடிகள் நான் இளவரசரிடம் தனியாகப் பேசி விட்டு வருகிறேன். தயவு செய்து காத்திரு." என்று கூறி பூங்கொடியின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றாள். இளவரசனும் உடன்சென்றான். ஓரிடத்தில் சகுந்தலை நின்று விட்டு பேச்சைத் தொடங்க ஆயத்தமானாள்.

இளவரசன் அவளை முந்திக்கொண்டு பூங்கொடியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே, "சம்யுக்தன் மீண்டும் ஏதேனும் பிரச்சனையில் சிக்கிவிட்டானா?" என்று கேட்டான்.

"தெரியவில்லை. ஆனால், இன்று என் சகோதரன் பூங்கொடியின் வீட்டிற்குச் சென்று வினோத ஓவியம் ஒன்றை மண் தரையில் தீட்டியிருக்கிறான்."

"ஓவியமா?"

"ஆம். என் சகோதரன் சாதரணமாக அப்படிச் செய்பவன் அல்ல. அந்த ஓவியத்தைப் பார்த்து நானே அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அதை வெளிக்காட்டவில்லை. ஏற்கனவே ஓவியத்தைக் கண்டு மனக்குழப்பத்தில் இருந்த பூங்கொடியின் பயத்தைக் கூட்ட நான் விரும்பவில்லை."

"அந்த ஓவியத்தில் என்ன வரையப்பட்டிருந்தது"

சகுந்தலை அந்த ஓவியத்தில் தான் பார்த்த காட்சிகளை விவரித்தாள்.

பொறுமையாகக் கேட்ட இளவரசன், "உன் சகோதரன் ஏன் இப்படி புதிராகவே நடக்கிறான் என்று புரியவில்லையே" என்று தன் தாடையில் கையைப் பதித்தவாறு கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.