(Reading time: 20 - 39 minutes)

சம்யுக்தன் அங்கிருந்த காய்ந்த மரக்குச்சிகள் மற்றும் காய்ந்த இலைச் சருகுகளைச் சேகரித்துப் பட்ட மரத்தின் அடிப்பகுதியில் தூவினான்.

அவனின் செய்கைகளைப் பார்த்த பார்த்திபன், 'ஏதாவது என்னிடம் கூறி விட்டு செய்கிறானா. அவனுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி செய்கிறான். என்னிடம் விவாதித்தால் எனக்குத் தோன்றும் அறிவுரைகளை வழங்குவேன் அல்லவா' என்று அவனுக்குள்ளே கூறி மேலே இருக்கும் நிலவைப் பார்த்தான்.

அந்த நிலவு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போல் இருந்தது. மரக்கிளைகள் மறைத்தாலும் அவனுக்கு நிலவு பிரகாசமாகத் தெரிந்தது. பரணின் ஓரத்திற்கு வந்து  மீண்டும் நிலவைப் பார்த்தான். இறைவன், இரவு என்ற ஒன்றை மட்டும் படைக்காமல் இருந்திருந்தால், நிலவின் அழகு மனிதருக்கு தெரியாமல் போய்விட்டிருக்கும். ஆஹா! அந்த நிலவிற்கு இரு குவளைக் கண்களும் அழகான மூக்கும் தாமரை மலர் போன்ற இதழ்களும் இருந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டே கற்பனை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தான். 

சம்யுக்தன் நிலப்பரப்பை கூரான மரக்குச்சியை வைத்து தோண்டிக்கொண்டிருந்தான். "சக்.. சக்.." என்ற சத்தம் பார்த்திபனின் கற்பனையைக் கலைத்தது. அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்த்திபன் உற்று நோக்கினான். சம்யுக்தன் அந்த இருளில் பூமியில் எதையோ புதைப்பது அவனுக்கு நிலவொளியில் சற்று மங்கலாகத் தெரிந்தது.  

பார்த்திபன் சம்யுக்தனைக் குறை கூறினாலும் அவன் மேல் முழு நம்பிக்கையை வைத்திருந்தான். சிறு வயதில் இருந்தே சம்யுக்தனின் அறிவு அபாரமாக இருந்தது. விளையாட்டு ஆகட்டும்; வீரம் ஆகட்டும்; ஒரு வித்தியாசமான வழியைக் கடைபிடிப்பவன். முதலில் அவன் கடைபிடிக்கும் வழியைக் கண்டு சிரிப்பவர்கள் பின் அவனைப் புகழ்ந்து பேசுவதை எல்லாம் பார்த்திபனும் கேட்டிருக்கிறான். ஆனாலும் அவனின் வருத்தம், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் சம்யுக்தனே செய்வது தான். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவன் நினைக்கிறானோ என்று மனதில் வேதனைப்பட்ட காலம் அதிகம். அதை எல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டே சம்யுக்தன் செய்வதை வழக்கம் போல் புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

."பார்த்திபா!" என்று சம்யுக்தன் மெல்லிய குரலில் கூப்பிட்டது அவன் காதுகளில் விழுந்தாலும், ஏனோ கேட்காதது போல் வேறு திசையை பார்த்திபன் பார்த்துக்கொண்டிருந்தான். "பார்த்திபா!" என்று மறுகுரல் சம்யுக்தனிடம் இருந்து வந்தது. புதியதாகக் கேட்பது போல் "ம்ம்ம்..சொல் சம்யுக்தா" என்று பார்த்திபன் பதிலளித்தான். 

"நான் கூப்பிட்டது கூடக் கேட்காமல் அப்படி என்ன யோசனை?" 

"ஏன்? நான் யோசிப்பதற்குக் கூட உன்னிடம் அனுமதி வாங்க வேண்டுமா?" 

பார்த்திபனின் பதில் சம்யுக்தனை சிறிது காயப்படுத்தி இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டாமல் "உன்னுடைய முத்துமாலையை என்னிடம் கொடு" என்று கேட்டான். பார்த்திபன் ஏன்? எதற்கு? என்று காரணம் ஏதும் கேட்காமல் முத்துமாலையை பரண் மேல் இருந்து வீசி எறிந்தான். அதை அவ்விருட்டிலும் சம்யுக்தன் கச்சிதமாகப் பிடித்தான். அவனைப் பார்த்துகொண்டே தான் தோண்டிய இடத்தின் அருகில் இருந்த செடியில் வீசி எறிந்தான். முத்துமாலை செடியில் தொற்றிக்கொண்டு பூமியில் விழத் துடித்தது. ஆனால் செடியின் சிறிய கிளையில் முத்துமாலையின் இன்னொரு பாகம் வசமாகச் சிக்கி இருந்ததால் அதனால் விழ முடியவில்லை.

சம்யுக்தன் அவ்விடத்தை ஒரு முறை நோட்டமிட்டான். ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அதற்கு ஏற்றார்போல் ஒரு நரி கோரமாக ஊளை இட்டது. ஆபத்தின் சங்கு போல் நரியின் ஒலி இருந்தது. ஆங்காங்கே சிறு சிறு சல சலப்பு உண்டாகி மறைந்தது.

சம்யுக்தன் பதற்றம் ஏதும் அடையாமல் ஒரு சிறு புன்முறுவலோடு படிகளில் ஏறி பார்த்திபனைப் பார்த்தான். பார்த்திபன் பரண் மேல் இருக்கும் கைப்பிடியில் தன் கைகளைப் பிடித்து உடலைத் தாங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். 

"பார்த்திபா, உனக்கு ஒரு கதை  தெரியுமா?"

"என்ன?" என்று பார்த்திபன் கசப்பாகக் கேட்டான்.   

சம்யுக்தன் புன்னகை மாறாமல், "ஓர் ஊரில் ஏழை தொழிலாளி வாழ்ந்து வந்தான். அவன் காட்டிற்குள் சென்று மரங்களை வெட்டி அதை விறகாக்கி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான். அவன் உடலில் அளவுக்கு மீறிய வலு இருந்தது. அவனிடம் ஓர் அற்புதமான கோடாரியும் இருந்தது. அந்த கோடாரியை வைத்து எப்பேர்பட்ட மரத்தையும் வீழ்த்தி விடலாம். ஆனால் அவன் என்ன நினைத்தான் தெரியுமா? என் உடலில் இருக்கும் வலுவால் தான் மரத்தைச் சாய்க்க முடிகிறது என்று நினைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.