(Reading time: 20 - 39 minutes)

சகுந்தலை இளவரசனைக் கலக்கத்தோடு பார்த்து, "என் சகோதரனுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்து விடாதே" என்று சிறு பிள்ளை போல் கண்களில் நீர் ததும்பக் கேட்டாள்.

"உன் சகோதரனை எனக்குப் பிடிக்காது தான். ஆனால் அவன் வீரத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். புத்திகூர்மை உடையவன். பாயவும் தெரியும் பதுங்கவும் தெரியும். அவனை எளிதில் வீழ்த்த முடியாது. நீ என்னை நம்பி கவலையை இறக்கி வைத்துவிட்டுச் செல். நான் பார்த்துக்கொள்கிறேன்." 

"உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"

"கேட்காவிட்டால் விடவா போகிறாய். முகத்தை திருப்பிக் கொள்வாய். பிறகு, என்னவென்று கேட்டால் தான் உன் மனது சாந்தி அடையும். பெண்களுக்கு இதுவே வேலையாகப் போய்விட்டது."

"நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்கிறீர்களா?"

"ம்ம்...தாராளமாகக் கூறு"

"நானும் நீங்களும் என் சகோதரன் சம்யுக்தனைப் பற்றி வாக்குவாதம் செய்தோம் அல்லவா?"

"ஆம்..."

"அதில், நீங்கள் நிஜமாகவே உங்கள் மனதில் இருந்த வெறுப்புகளைக் கக்கினீர்கள் தானே?"

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆம்."

"என் சகோதரன் மேல் அப்படி என்ன தீராத பகை"

"இதற்குத் தான் நான் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்."

"எனக்காக உங்கள் மனதை மாற்றிக்கொள்ள முடியாதா?"

"மனதை யாருக்காகவும் யாராலும் மாற்ற முடியாது. அந்த வெறுப்பு குறையாது. வேண்டும் என்றால் வெறுப்பை மறந்துவிட்டது போல் நடிக்கலாம். அப்படி நடிப்பது எனக்குப் பிடிக்காத செயல்களில் ஒன்று. பகைவன் என்றால் இறுதி வரை பகைவனாகவே இருந்து விட வேண்டும். நண்பன் என்றால் இறுதி வரை நண்பனாகவே இருந்து விட வேண்டும். பகைவன் நண்பன் ஆனாலும் நண்பன் பகைவன் ஆனாலும் நாம் நிம்மதியை இழந்து விடுவோம்."

"ஐயா, வேதாந்தவாதியே ! நான் சென்று வருகிறேன். நீங்கள் தனியாகவே வேதாந்தம் பேசிக்கொண்டிருங்கள்."

"உண்மையைக் கூறினால் வேதாந்தம் கூறுகிறான் என்று குற்றம் சுமத்துகிறார்கள். இது தான் மனிதர்கள்."

"போதும் ஐயா. நான் சென்று வருகிறேன். விடை கொடுங்கள்."

"போய் வா குழந்தாய் ! பூங்கொடியைப் பயப்படாமல் இருக்கச் சொல். சம்யுக்தனுக்கு ஏதும் ஆகாது என்று தைரியம் சொல்."

சகுந்தலை புன்னகையுடன் இளவரசனிடம் இருந்து விடைபெற்று பூங்கொடியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். அவர்கள் செல்வதை இளவரசன் பார்த்துக்கொண்டிருந்தான். சகுந்தலை பூங்கொடிக்குத் தைரியம் சொல்கிறாள் என்று ஊகித்துக் கொண்டான். அவர்கள் சென்ற பின்பு

வானத்தைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தான். சம்யுக்தனை எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவனை விட்டுத் தர முடியாது. ஆம். விட்டுத் தர முடியாது என்று மனதில் எண்ணிக்கொண்டே காவல் புரிய அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

காரிருள் எங்கும் பரவத் தொடங்கியது. நிலவும் விண்மீன்களும் வானில் ஜொலித்துக்கொண்டிருந்தன. வானத்து நட்சத்திரங்களுக்குப் போட்டியாக ஆங்காங்கே பூமியில் மின்மினிப் பூச்சிகள் மின்னிக்கொண்டிருந்தன. ஆந்தையின் அலறலும் தவளைகளின் சத்தமும் காட்டுப் பகுதியை ஆக்கிரமித்தன. இரவின் இதமான காற்று மரங்களின் தாலாட்டோடு இணைந்து அக்கானகத்தை உலா வந்தது. பகலில் பச்சைப் பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாகத் தோன்றிய மரங்கள் இரவில் கைகளை விரித்துக்கொண்டு தலை விரித்தாடும் பிசாசு போல் கோரமாக நின்றுகொண்டிருந்தன. பெரிய மரங்களோடு சேர்ந்து சிறிய செடிகளும் கொடிகளும் காற்றில் அசைந்து நடனமாடின.

காட்டின் நடுவே சம்யுக்தனும் பார்த்திபனும் பரண் அமைத்து முடித்து விட்டு அதை சரிபார்த்துக்கொண்டிருந்தனர்.

பார்த்திபன், "இந்த இரவைப் பார்க்கவே எனக்கு பயமாக இருக்கிறது. இங்கே வந்து என்னை நிற்க வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாய்." என்றான்.

சம்யுக்தன், "ஒரு வீரனின் வாயிலிருந்து பயம் என்ற வார்த்தை வரலாமா? இதை வேறொருவர் கேட்டால் உன் வீரத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்?" என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

"அது எப்படி? இந்த நிலையிலும் உன்னால் சிரிக்க முடிகிறது."

சம்யுக்தன் பரண் மேலிருந்து அதன் படிகளின் வழியே கீழே இறங்கிக்கொண்டு, "உன்னிடம் பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று கூறிக்கொண்டே கடைசிப் படியில் கால் வைக்கும் போது அது சம்யுக்தனின் பளுவைத் தாங்க முடியாமல் முறிந்தது.

சம்யுக்தன் மேலே இருந்த பார்த்திபனிடம், "நீ தானே படிகளை அமைத்தாய்?"என்று கேட்டான்.

"ஆம், சம்யுக்தா. எதற்காக கேட்கிறாய்?"

"உன்னைப் போலவே அமைத்து வைத்திருக்கிறாய். அதனால் தான்."

"என்னைக் குற்றம் சொல்லாமல் உன்னால் இருக்க முடியாதே"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.