(Reading time: 20 - 39 minutes)

ஒரு நாள், அவனுடைய சக தொழிலாளியான இன்னொரு விறகு வெட்டுபவனைக் கண்டான். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள். அந்த இன்னொரு விறகுவெட்டி பார்ப்பதற்கு சற்று நோஞ்சான் போல் இருந்தான். அவனுடைய கோடாரி அவனுடைய சக்திக்கு ஏற்றார் போல் கனம் குறைந்தும் கைப்பிடி சற்று சிறியதாகவும் இருந்தது. இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டாவது தொழிலாளி முதல் தொழிலாளியின் கோடாரியைப் பார்த்து வியந்து போனான். அதனுடைய வடிவமும், அதன் முனை நன்றாகத் தீட்டப்பட்டு பளபளத்ததையும் பார்த்து அவனுள் ஓர் ஆசை எழுந்தது. நாம் இருவரும் கோடாரியை சிறிது காலம் மாற்றிக்கொள்வோம். ஒரே கோடாரியை உபயோகித்து அலுத்து விட்டது என்று கூறினான். இதற்கு முதலாமவனும் ஒத்துக்கொண்டு கோடாரியை மாற்றிக் கொண்டார்கள்.

மறுநாள் பொழுது விடிந்தது. முதலாமவன் அந்த சிறிய கோடாரியை எடுத்துக்கொண்டு காட்டிற்கு புறப்பட்டான். ஒரு மரத்தைக் கண்டான். அதை வீழ்த்துவதற்குக் கோடாரியை மரத்தில் இறக்கினான். என்ன அதிசயம். எப்பொழுதும் ஒரே வீச்சில் மரத்தின் ஆழத்தைப் பார்க்கும் அவனுடைய வலு இன்று அந்த ஆழத்தை எட்ட முடியவில்லை. அவன் மறுபடியும் ஓங்கினான். மரத்தில் இறக்கினான். முடியவில்லை. ஆனாலும் விடாமல் செய்துகொண்டே இருந்தான். என்றும் களைப்பாகாத அவனுடைய கைகள் அன்று மிகவும் களைத்து விட்டது. ஒரு மரத்தைக் கூடச் சாய்க்க முடியவில்லை.

இன்னொருவன் பாடு இன்னும் வேடிக்கை. அவனால் அந்தக் கோடாரியைத் தூக்கக் கூட முடியவில்லை; தவறு செய்துவிட்டோமோ என்று விழித்தான்.

இருவரும் அன்று மாலையே சந்தித்துக் கொண்டார்கள். என்ன நடந்தது என்று ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். கோடாரியை மாற்றிக்கொண்டார்கள். இருவரும் வீடு நோக்கி நடந்தார்கள்.

முதலாமவன், 'தான் எவ்வளவு பலசாலியாக இருந்தும் அந்தக் கோடாரி இல்லாமல் தன்னால் வேலை செய்ய முடியாது. தன் கோடாரியை வேறு ஒருவன் உபயோகித்தாலும் வேலைக்கு ஆகாது. அது தனக்காகவே செய்தது' என்று உணர்ந்து கொண்டான். அன்று முதல் அந்த கோடாரியை அவன் பிரிந்ததும் இல்லை, யாரிடமும் கொடுத்ததும் இல்லை" என்று கூறி சம்யுக்தன் கதையை முடித்துவிட்டு பார்த்திபனின் முகத்தைப் பார்த்தான்.

பார்த்திபனுக்கு தான் எண்ணியது தவறு என்று புரிந்தது. வாடி வதங்கி இருந்த அவன் முகம் மீண்டும் மலர்ந்தது. தன்  மனதின் எண்ணத்தின் ஓட்டத்தை சம்யுக்தன் எப்படிப் புரிந்துகொண்டான் என்று வியந்தான். சம்யுக்தன் ஏன் எப்பொழுதும் மற்றவர்களிடம் இருந்து  வித்தியாசப்படுகிறான் என்று அவனுக்குப் புரிந்தது. தான் செய்த தவற்றுக்காக சம்யுக்தனின் முகத்தைப் பார்க்க அவனுக்கு சற்று கூச்சமாக இருந்தது.

அதனையும்  புரிந்துகொண்ட சம்யுக்தன் தன் நெருங்கிய நண்பனான பார்த்திபனை அணைத்துக்கொண்டான். அணைத்துக்கொண்டு, "எனக்கு பக்கபலமாக இருப்பது பார்த்திபன் என்று பெயர் கொண்ட ஒருவன்" என்று கூறினான்.

பார்த்திபனின் கண்கள் கலங்கினாலும் கட்டுப்படுத்திக்கொண்டு சிரித்தான். சம்யுக்தனிடம் இருந்து விடுபட்டு, "மன்னித்து விடு, நண்பா! தவறாக எண்ணிவிட்டேன்" என்று தன் அறியாமையை வெளிப்படுத்தினான்.

"எல்லோரும் மனிதர்கள் தானே" என்று சம்யுக்தன் அழகாக பார்த்திபனின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

வீரபுரத்தின் இரவுக் காவல் படை வீரர்கள் நான்கு திசைகளிலும் காவல் புரிந்துகொண்டிருந்தார்கள். பரணிலும் நிலத்திலும் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு, வீரர்கள் ஆங்காங்கே தங்கள் காவல் புரியும் பணியைச் செவ்வனே செய்தார்கள். வீரர்கள் உண்ணுவதற்கு நான்கு பெரிய பாறைகளின் நடுவில் பெரிய பாத்திரத்தை வைத்து, அடியில் விறகு கட்டைகளைத் தீயிட்டு உணவைச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அதன் வாசம் காற்றில் பரவி அவ்விடத்தை ஆக்கிரமித்தது.

இரவு நேரத்தின் பனி பூமியை மெல்ல நனைத்தது. குளிர் மெல்ல மெல்ல தன் கடுமையைக் காட்டியது. வீரர்கள் விறகுகளைத் தீயிலிட்டு அவ்விடத்தைக் குளிர் அண்டவிடாமல் செய்துகொண்டிருந்தார்கள்.

காவல் புரியும் போது ஒருவன் மற்றவனைப் பார்த்து, "இன்று, இளவசர் காவலுக்கு வரவில்லையா? அவரைக் காணோமே" என்று கேட்டான்.

"தெரியவில்லை, வந்து விடுவார் என்று நினைக்கிறேன்"

"வரட்டும்" என்று அவ்வீரன் கொடூரமான முகத்தோடு கூறினான்.

"ஆமாம், நீ யார்? உன்னை இங்கு நான் பார்த்ததில்லையே"

"நான் தெற்குப் பகுதியில் காவல் புரிபவன்"

"எதற்காக இன்று வடக்குப் பகுதிக்கு வந்திருக்கிறாய்?"

"வடக்கில் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று தெற்கைப் பாதுகாக்கும் வீரர்களின் தலைவர் அனுப்பினார்"

"உனது பெயர்?"

"எதற்காக எனது பெயர் உனக்கு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.