(Reading time: 20 - 39 minutes)

"வேறு எதற்கு? தெரிந்து கொள்ளத்தான்"

"இவ்வளவு கேட்கும் நீ யார்? உன் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?"

"எனது பெயர் இடும்பன். இளவரசரின் தோழன்"

"ஓ, இளவரசரின் தோழரா? அப்பொழுது நீங்கள் கேட்பதில் தவறில்லை. எனது பெயர் காளிங்கன்." என்று கூறி அதற்கு மேலும் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் காளிங்கன் நகர்ந்து கொண்டான்.

இடும்பனுக்கு அவன் மேல் ஏதோ இனம் புரியா சந்தேகம் உதித்தது. அவன் நடந்து கொள்வது வித்யாசமாக அவனுக்குப் பட்டது. இளவரசர் வந்த உடன் இதனைத் தெரியப்படுத்த வேண்டும். நாளைக் காலை, தெற்கில் இவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று இடும்பன் தீர்மானித்தான்.

அவன் இவ்வாறாக நினைத்துக் கொண்டிருக்கும்போது இளவரசன் வாடிய முகத்தோடு அங்கு வந்து சேர்ந்தான்.

இளவரசரைப் பார்த்ததும் அங்கு சூழ்ந்திருந்த வீரர்களிடம் ஒரு சிறு அமைதி ஏற்பட்டது. இளவரசன் ஒருவரையும் கண்டு கொள்ளாது குதிரையிலிருந்து கீழிறங்கி வீரர்களின் மத்தியில் நடந்து சென்றான். இடும்பன் இளவரசரை நோக்கி தனது நடையை வேகமாக்கினான்.

"இளவரசே! இளவரசே!" என்று கூறிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக இளவரசன் முன்னால் நின்றான்.

"இடும்பா, என்ன ஆனது? ஏன் இப்படி மூச்சிரைக்க வருகிறாய்?"

"இளவரசே, இன்று நான் ஒருவனை சந்தித்தேன்" என்று இடும்பனின் வாயில் இருந்து வார்த்தை வருவதற்கு முன்னரே இன்னொரு குரல் இளவரசரை வேறு பக்கம் பார்க்க வைத்தது.

காளிங்கன் இளவரசர் முன்னால் பவ்யமாக வணங்கி நின்றான். இடும்பன் காளிங்கனை முழுங்குவது போல் கோபமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசினான்.

இடும்பனைக் கடுகளவும் கண்டுகொள்ளாத காளிங்கன், "இளவரசரே, எனது பெயர் காளிங்கன். தெற்கில் காவல் புரிபவன். தெற்குக் காவல் படைத் தலைவர் அனுப்பி வைத்தார். அதை உங்களிடம் சொல்லத்தான் வந்தேன் இளவரசே." என்றான்.

இவ்வாறாகச் சொன்னதும் காளிங்கன் மேலிருந்த சந்தேகம் இடும்பனுக்கு விலகினாலும் மழை விட்டாலும் தூவானம் விடாமல் இருப்பது போல் மீண்டும் சந்தேகத்துடனே காளிங்கனைப் பார்த்தான்.

இளவரசர், காளிங்கனைப் பார்த்து, "நல்லது. நீ இங்கு காவல் புரியலாம்" என்றார்.

"நன்றி,  இளவரசே! அடியேனுக்கு ஒரு சிறு ஆசை" என்று காளிங்கன் காதைச் சொரிந்தபடியே கேட்டான்.

ரவிவர்மன், "என்ன அது?" என்று கேட்டான்.

"இளவரசே! தங்களைப் பார்த்ததே பெரும் பாக்கியம். என் அகமும் மனமும் இன்று குளிர்ந்து விட்டது. வீரபுரத்தின் எதிர்கால மன்னர் நீங்கள். நானோ உங்கள் படையில் இருக்கும் அடிமட்ட வீரன். இன்று முழுவதும் நான் உங்களுடனே இருக்க விரும்புகிறேன். இனி இது போல் சந்தர்ப்பம் கிட்டுவது அரிது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்பதனால் இப்பொழுதே கேட்டுவிட்டேன். தாங்கள் இந்த அடியேனுக்கு அருளினால் என் உள்ளம் இன்னும் குளிர்ச்சி அடையும். உங்களைத் தொல்லை செய்யாமல் உங்கள் அருகிலே இருக்கவேண்டும்" என்று காளிங்கன் மிகவும் பணிவுடன் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்ட இளவரசர் தன் ஒப்புதலை, தலையை மட்டும் அசைத்துக் காட்டிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றார். அவர் பின்னாலேயே இடும்பனும் காளிங்கனும் சென்றார்கள்.

மேலிருக்கும் நட்சத்திரங்களைச் சிறிது நேரம் பார்த்த ரவிவர்மன், "இடும்பா, சம்யுக்தன் இன்று காட்டுப்பகுதியில் காவல் புரியப் போகிறானாமே, உண்மையா?" என்று கேட்டான்.

இடும்பன், "இளவரசே, அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் காட்டுப் பகுதியிலும் இன்னும் சில நாட்களில் பலத்த பாதுகாப்பு போடவேண்டும் என்று மன்னரிடம் இருந்து ஓலை வந்திருக்கிறது" என்று பணிவோடு கூறினான்.

அதைக் கேட்ட காளிங்கன் இடும்பனைப் பார்த்து விஷச் சிரிப்பை சிரித்தான். இடும்பன் அதைக் கவனித்து மனதில் பதிய வைத்துக்கொண்டான். இளவரசனிடம் இதைச் சொல்ல வேண்டும் என்றால் காளிங்கன் அங்கு இருக்கக்கூடாது. அதனால் பாம்பின் வாயில் மாட்டிய தவளை போல் இடும்பன் துடித்தான்.

"சம்யுக்தன் தனியாகக் காவல் புரிகிறான் என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு நம் வீரர்கள் சிலரை அனுப்பி வைக்கலாமா?" என்று இளவரசன் இடும்பனிடம் ஆலோசனை கேட்டான்.

இடும்பனுக்கு முன்னால் காளிங்கன் முந்திக் கொண்டு, "இளவரசே, சம்யுக்தனுக்குத் தன் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகம். அதனால், அவ்வப்போது இப்படி அவனாகவே சோதனை செய்து கொள்வான். இதற்கெல்லாம் தாங்கள் வருந்தலாமா? இப்பொழுது நீங்கள் வீரர்களை அனுப்பினால் தனக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று அவன் திமிர் இன்னும் அதிகமாகி விடும் அல்லவா! அவனை அவன் போக்கிலேயே விட்டுப் பாடம் புகட்டுங்கள் இளவரசே" என்று கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.